அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!
மொழி
நலம்! நலமறிய ஆவல்!
ஆவி பறக்க காபி கோப்பையுடன் இருக்கையில் வந்தமர்ந்த ரவி, “சார்! என் நண்பன் ஒருவனுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதியிருக்கிறேன். நான் படிக்கிறேன்… ஏதாவது தப்பா இருந்தா சொல்றீங்களா?” என்று கேட்டான். இதைக் கேட்டு, “Pleasure is mine Ravi! Come on..” என்று உற்சாகத்துடன் சொன்னார் ரகு. ரவி படிக்க ஆரம்பித்தான், “Dear Siva, I am well and hope you are in the same well..” என்றதும் ரகு அடக்க முடியாமல் இருக்கையிலிருந்து எழுந்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தார்.
பின் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு “சாரி ரவி! ‘நலம். நாட்டமும் அதுவே’ என்ற பொருள்பட எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் நீ எழுதியிருக்கிறாய். அதற்கு I am fine and hope the same என எழுதியிருக்க வேண்டும்.
ஆனா நீ எழுதிய வரிக்கு எப்படி பொருள் கொள்ள முடியும் தெரியுமா? I am well என்பதற்கு ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்றும் and hope you are in the same well என்பதற்கு ‘நீயும் அதே கிணற்றில் இருக்கிறாய் என எண்ணுகிறேன்’ என்பதாகவும் பொருள்படும். நீ மட்டும் நல்லாயிருக்கணும். ஆனா உன் நண்பன் மட்டும் கிணற்றில் இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்?” என்று கேட்டார் ரகு.
“ஓஹோ! அப்படி அர்த்தமாயிடுச்சா? சரி… நீங்களே உங்க ஸ்டைல்ல சொல்லுங்க சார்” என்றான் ரவி. உடனே ரகு, “I am fine and fetch you the same என்றும் எழுதலாம். அல்லது I am fine and hope this letter finds you in fine fettle என்றும் எழுதலாம். அல்லது I am hale, happy and healthy and herald the same என்றும் எழுதலாம். அல்லது I am extremely good and expect the same at your end என்றும் எழுதலாம்.
அல்லது I am high spirits and transmit the same என்றும் எழுதலாம். இவை எல்லாமுமே ஏறக்குறைய ஒரே பொருளைத்தான் வெளிப்படுத்துகின்றன. சரி. அடுத்து படி… பார்க்கலாம்… இன்னும் எத்தனை கிரேசி மோகன்கள் இருக்கிறார்களோ உன்னுள்…. wait …. Wait… Time up. நாளை பார்க்கலாம்” என்றபடியே தனது லெட்ஜரில் பார்வையைச் செலுத்தினார்.
சேலம் ப.சுந்தர்ராஜ்
|