வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள்
வழிகாட்டுதல் 7
மத்திய மாநில அரசுகள் பட்டம் படித்த இளைஞர்கள் முதல் பள்ளிப் படிப்போடு நிறுத்திக்கொண்டவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன் மூலம் வியாபாரம், விவசாயம், பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது எனப் பலதரப்பட்ட வழிகளில் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புவோர் பயனடையலாம். இங்கே சில கடன் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிகளைப் பார்ப்போம்.
எஸ்.பி.ஐ.யின் வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில் கடன்கள் நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புறங்களிலும் அதிக கிளைகளை உடையது பாரத ஸ்டேட் வங்கி. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, உணவுப் பொருள் தயாரிப்பு, விவசாய வாணிகம், சேவை மையங்கள் தொடங்க ஏராளமான கடன் திட்டங்கள் இந்த வங்கியில் உள்ளன.
1. கிசான் கிரடிட் கார்டு: விவசாயிகளுக்கு கடன் பெற, இடுபொருட்கள் வாங்க இந்தக் கடன் அட்டை வழங்கப்படும். 2. நகைக் கடன் (பட்டா நகல் இருக்க வேண்டும்) 3. விளைபொருள் சேமிப்புக் கடன் 4. டிராக்டர், விவசாயக் கருவி கள், அறுவடை இயந்திரம் போன்றவைக்கு வங்கிக் கடன் 5. மலர் சாகுபடி / வணிகம் / இயற்கை முறை வேளாண்மைக்குக் கடன் 6. கிட்டங்கி அமைக்க, விளைபொருள் சேமிக்க குளிர்சாதன வசதிக்குக் கடன் 7. விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் தொடங்க கடனுதவி 8. பால் பண்ணை, கோழி, மீன், இதர கால்நடைகள் வளர்க்க கடன் 9. நீர்ப்பாசன கடன் திட்டங்கள் 10. பழத்தோட்டம்/பண்ணை அமைக்க கடன் 11. விவசாய வணிகக் கடன் / சேவை மையம் தொடங்க கடன்
கடன் பெறத் தகுதியுடைய நிரந்தர விவசாயிகள் ஆங்காங்கே உள்ள வங்கிக் கிளைகளை அணுகலாம்.முழு விவரங்கள் பெற: பாரத ஸ்டேட் வங்கி, வட்டாரத் தலைமையகம், 18, கல்லூரி லேன், சென்னை- 600 006. இணையதளம்: www.sbi.co.inபுதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்இது தமிழ்நாடு அரசின் திட்டம்.
இது சுருக்கமாக நீட்ஸ் என்று (New Entrepreneurs and Enterprises Development Scheme - N.E.E.D.S.) குறிப்பிடப்படுகிறது. வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டம் தமிழகத் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். 18 முதல் 35 வயது வரை உள்ள (பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், B.C., M.B.C., S.C., S.T. ஆகியோருக்கு 45 வயது வரை) பட்டம், டிப்ளமோ அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒன்று தேர்ந்தெடுக்கும்.
இத்திட்டத்தில் காலிமனை இருந்தால் கட்டடம் கட்ட, இயந்திரம் வாங்க, நடைமுறை மூலதனத்திற்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம். சொந்த நிலம் இல்லாவிடில், இயந்திரம் வாங்க, நடைமுறை மூலதனத்திற்குக் கடன் பெறலாம். கட்டடக் கடனும் பெறும்போது, அந்த நிலமே செக்யூரிட்டி ஆக ஏற்றுக்கொள்ளப்படும். வாடகைக் கட்டடத்தில் இயங்கினால் 40% (கடனில்) தொகைக்கு ஏதேனும் நிலம் அல்லது கட்டடம் ஜாமீனாகத் தரவேண்டும். வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகக் கிளைகள் மூலம் பெறலாம். 25% மானியம் உண்டு.
கடன் ஒப்புதல் கிடைத்ததும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியும், உதவித்தொகையும் வழங்கப்படும். திட்டத்தின் முழு விவரம் பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
இது மத்திய அரசுத் திட்டம். கிராமங்களில் இந்தியக் கதர் கிராமத் தொழில்கள் ஆணையமும், நகர்ப்புறங்களில் மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிகளும் இத்திட்டக் கடனை வழங்குகின்றன. உற்பத்திப் பிரிவுக்கு ரூ.25 லட்சமும், சேவைப் பிரிவுக்கு ரூ.10 லட்சமும் கடனாக வழங்கப்படும். இதில் உற்பத்திப் பிரிவில் ரூ.10 லட்சம் வரை, சேவைப் பிரிவில் ரூ.5 லட்சம் வரை பெற 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தத் தொகைக்கு கீழ் என்றால் கல்வித்தகுதி தேவை இல்லை.
தேவையான விண்ணப்பத்துடன், திட்ட அறிக்கை இணைத்து மாவட்டத் தொழில் மையம், அல்லது கதர் கிராமத் தொழில் ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நேர்காணலில் தேர்வு பெற்று வங்கி அனுமதிக்குப் பின் இரண்டு வாரம் ‘தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி’ பெற வேண்டும். தொழில் தொடங்கத் தேவையான தொகையில் 5% முதல் 10% வரை விண்ணப்பதாரர் முதலீடு செய்ய வேண்டும். 25% முதல் 35% வரை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ஏதேனும் பொருட்கள் உற்பத்தி செய்வோர் தங்கள் உற்பத்தியைச் சந்தைப்படுத்த பொருட்காட்சிகள், விற்போர் - வாங்குவோர் சந்திப்பு ஏற்பாடு எனப் பல உதவிகளை அரசு செய்யும். கிராமங்களில் ஏழை எளியவர்கள், வேலை இல்லாமல் இருப்போருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பீடி, வெற்றிலை, சிகரெட், சுருட்டு தயாரிப்பு, புகையிலை பயிரிடுதல், பட்டுப்புழு வளர்ப்பு, அறுவடை இயந்திரங்கள், 20% மைக்ரானுக்கு குறைவான பாலிதின் பைகள் தயாரிப்பு ஆகிய தொழில்களுக்கு இத்திட்டத்தின் கடன் கிடையாது. முழு விவரம் பெற www.kviconline.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
|