டி.என்.பி.எஸ்.சி.



போட்டித் தேர்வு டிப்ஸ்

அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வை எழுதுவோருக்கு வழிகாட்டும் விதமாக இந்தப் பகுதியில் பல தகவல்களைக் கொடுத்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாகக் கடந்த சில இதழ்களில் கொடுக்கப்பட்டது போலவே பொதுத் தமிழ் சார்ந்த வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க சில தமிழ் அறிஞர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

முதலாவதாகத் தற்காலப் புதுக்கவிதை முன்னோடிகளில் சிறப்பிடம் பெறும் சிற்பி. பாலசுப்பிரமணியன் பற்றி பார்ப்போம். இவர் தன்னுடைய ‘ஒரு கிராமத்து நதி’ என்ற நூலுக்குச் சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘ஆங்கில இலக்கிய நூல்’ பரிசு ஆகிய பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

கோவை மாவட்டம், ஆத்துப் பொள்ளாச்சி யில் பிறந்தவர். இவர் எழுதிய நூல்கள் ‘சிரித்த முத்துக்கள்’, ‘நிலவுப்பூ’, ‘ஒளிப்பறவை’, ‘சர்ப்ப யாகம்’, ‘சூரிய நிழல்’, ‘ஆதிரை’ ஆகியவை. இது தவிர, மலையாளக் கவிதை களையும் மொழிபெயர்த்துள்ளார்.

அடுத்ததாக க.சச்சிதானந்தன் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். இவர் ‘ஆனந்தத் தேன்’ என்ற கவிதை நூலையும், ‘அன்னபூரணி’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியார்தான் சச்சிதானந்தனின் குரு. இவரது பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியாரின் கோபத்தையும் காணமுடியும்.

கொஞ்சம் பின்னால் சென்று, பழைய இலக்கியவாதிகளையும், நூலாசிரியர்களையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம், அந்த வகையில் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் முக்கிய இடத்தைப் பெறுகிறார். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

பெற்றோர், ராமையா-சின்னம்மை. இதுபோன்ற சீர்திருத்த இலக்கியவாதிகள், ஆன்மீகவாதிகள், பெரிய தமிழ் அறிஞர்கள் ஆகியோர்களைப் பற்றி கேள்விகள் கேட்கப்படும்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள் பற்றி வினாக்கள் கேட்கப்படும். மேலும் இதுபோன்ற முதுபெரும் தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களிலிருந்து மிக முக்கியமான வரிகள், புகழ்பெற்ற வரிகள் ஆகியவை குறித்தும் வினாக்கள் வரும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று உண்டு. புகழ்பெற்ற வரிகள் என்றால், இராமலிங்க அடிகளார் ஆறாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆறாயிரம் பாடல்களுமே புகழ்பெற்றவைதான். அதற்காக ஆறாயிரம் பாடல் வரிகளையும் மனப்பாடம் செய்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது.

பொதுவாக 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் இராமலிங்க அடிகளாரின் பாடல்கள், வாழ்த்துப் பாடல்களாகவோ, வழிபாட்டுப் பாடல்களாகவோ வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் புகழ்பெற்ற வரிகள் என்பவை இந்தப் பாடல்களில் இருந்தே எடுக்கப்படும்.

 எனவே தமிழ் அறிஞர்கள், முதுபெரும் தமிழறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என்ற தலைப்புகளில் தேர்வர்கள் தயார் செய்யும் போது இவர்களைப் பற்றி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பாடப்பகுதித் தகவல்களை மட்டுமே படித்துக்கொண்டால்கூட போதும்.இங்கு நிறைய குறிப்புகள் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது.

தேர்வர்கள் நிறைய படிக்கிறார்கள். பல நாட்கள் தூங்காமல், சரியாக சாப்பிடாமல் கூட படிக்கிறார்கள். ஆனால், எப்படிப் படிப்பது என்று தெரியாமல், படித்துக்கொண்டே போகிறார்கள். ஒவ்வொரு தகவல் படிக்கும்போதும் ‘இது எவ்வாறு கேள்வியாகக் கேட்கப்படும்’ என்ற கோணத்தில் படிக்கவேண்டும். நாம் இங்கே தரும் ஒவ்வொரு வரித் தகவலுக்கும் பத்துக் கோணங்கள் இருக்கின்றன.‘திருவருட்பா’ என்பது இராமலிங்க அடிகளார் எழுதிய நூல், என்பதுதான் ஒரு வரி. இதைக் கொண்டு எப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படலாம் என்று பார்ப்போம்.

1. திருவருட்பா - பிரித்து எழுதுக
2. திருவருட்பாவில் எத்தனை பாடல்கள் உள்ளன?
3. திருவருட்பா நூலாசிரியர் யார்?
4. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல் எது?
5. வள்ளலார் என்று அழைக்கப்பட்டவர் யார்?
6. வள்ளலார் வாழ்ந்த காலம் எது?
7. வள்ளலாரின் தத்துவம் என்ன?
8. வள்ளலாரின் வழிபாட்டு முறை எதை வலியுறுத்துகிறது?
9. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியவர் யார்?
10. ‘புது நெறி கண்ட புலவர்’ என்று பாரதியார் யாரைப் பாடுகிறார்?
- என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படும். அடுத்த இதழில் தமிழ் இலக்கியத்திற்கு பக்தி இலக்கியவாதிகளின் பங்களிப்பைப் பற்றிப் பார்க்கலாம்.
 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான மாதிரி வினா-விடை அடுத்த பக்கத்தில்...

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்