நல்ல விஷயம் 4
வளாகம்
வாசிக்க வேண்டிய வலைத்தளம்: http://www.kalvikural.com/
கல்வி வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்துத் தகவல்களின் களஞ்சியமாக விளங்குகிறது இவ்வலைத்தளம்.வேலைவாய்ப்பு செய்திகள், அரசாணைகள், கல்விச்செய்திகள், பள்ளிக்கல்வித்துறை நிகழ்வுகள் என ஆசிரியர், மாணவர், வேலை தேடும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற செய்திகள் இதில் வலம் வருகின்றன. 10,12ம் வகுப்பின் காலாண்டு அரையாண்டு தொடங்கி டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. தேர்வுகள் என அரசுப் பணி சார்ந்த எல்லா தேர்வுகளுக்கும் மாதிரி வினா-விடைகளைப் படிக்கும் வகையில் பயனுள்ள இணையதளமாக இது உள்ளது.
படிக்க வேண்டிய புத்தகம்: சட்டக் கேள்விகள்-100
‘சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் அந்த இருட்டைப் போக்கும் விளக்கு’ என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப வழக்குரைஞர் வெ. குணசேகரன், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரியும் வண்ணம் இந்நூலை எழுதியுள்ளார். மக்கள் தாங்கள் நீதி சார்ந்து எதிர்கொண்டு கஷ்டப்படும், திசை தெரியாமல் தவித்தபடி கேட்கும் கேள்விகளுக்குச் சரியான முறையில் எளிமையான, புத்திசாலித்தனமான, தீர்வு கிடைக்கும் வண்ணம் கேள்வி-பதில் வடிவில் எழுதியுள்ளார்.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் எளிய முறையில் நேர்மையான பாதையில், சாமர்த்தியமாக, விரைவாக, வீணாகப் பணம் செலவு செய்யாமல் நம் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை சட்ட ரீதியாக நிவர்த்தி செய்ய ஓர் எளிய தீர்வாக ‘சட்டக் கேள்விகள் - 100’ என்ற இந்த நூல் அமையும். சட்ட அறிவு எனும் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கும் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இந்நூல் விளங்கும். விலை: ரூ.150, வெளியீடு: லாயர்ஸ் லைன். 72/3 ஆனந்த் அப்பார்ட்மென்ட். வடபழனி, சென்னை-26.
அறிய வேண்டிய மனிதர்: ராஜாஜி
சி.ராஜகோபாலாச்சாரி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் 10, டிசம்பர், 1878ல் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பாற்றினார் இவர்.
கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தபோதும் தந்தை பெரியாருடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர் ராஜாஜி. அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்கப் போராடியவர். சேலத்து மாம்பழம் எனச் செல்லப் பெயரும் கொண்டவர். காங்கிரசில் சேர்ந்து ரௌலட் சட்டத்திற்கு எதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார்.
1930ம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையையொட்டி வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மந்திரியாகப் பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். 1952ம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபோது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1972ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25ம் தேதி 94 வயதில் சென்னையில் காலமானார். ராஜாஜி பற்றி மேலும் தெரிந்துகொள்ள https://en.wikipedia.org/wiki/C._Rajagopalachari
பார்க்க வேண்டிய இடம்:கழுகுமலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கழுகுமலை. இதன் பழைய பெயர் அரைமலை. இது ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்று விக்கபட்டவை. சமணர்களின் முக்கியப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்திலுள்ள மலையின் சரிவில் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்குத் தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குச் சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இதன் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. கலைநயம் மிக்க இடம் இது. இந்த இடம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள https://en.wikipedia.org/wiki/Kalugumalai
|