வெளிச்சத்தின் நாயகன்



எனர்ஜி தொடர் 23

‘எனக்கு அறிவியலில்தான் ஆர்வம். நான் அதைத்தான் படிக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதி தேவை.’ என்று கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தான் அந்த மாணவன். பதில் வரவில்லை. மீண்டும் ஒரு கடிதம்.

பதில் இல்லை. மீண்டும் மீண்டும் கடிதங்கள் Central Board of Secondary Educationக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தான் அந்த மாணவன். அவன் தன் முயற்சியை ஒருபோதும் கைவிடுவதாக இல்லை.அவன் பெயர் கார்த்திக் சாஹ்னே. அவனது தந்தை ரவிந்தர், டெல்லியில் லாஜ்பத் நகரில் கார் உதிரிப் பாகங்கள் விற்கும் கடை ஒன்று நடத்திவந்தார்.

தாய் இந்து இல்லத்தரசி. கார்த்திக்குக்கு ஓர் அண்ணன் உண்டு. இரட்டையாகப் பிறந்த ஒரு சகோதரியும் உண்டு. ஆனால், பிறவியிலேயே கார்த்திக் பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தான். அவனுடைய பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய இயலாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

  பால்யத்திலிருந்தே இருள் அவனுக்குப் பழகிப்போனது. டெல்லியிலுள்ள ‘நேஷனல் அசோசியேஷன் ஃபார் தி ப்ளைண்ட்’ என்ற அமைப்பு கார்த்திக்கின் தன்னம்பிக்கை குலையாமல் இருக்க உதவியது. படிப்பில் அதிகம் கவனம் செலுத்தினான்.

சவால்களையெல்லாம் தாண்டி, பார்வையுள்ள ஒரு சாதாரண மாணவன் போலவே நன்றாகப் படித்தான்.இந்தியக் கல்வி முறை, பார்வையற்ற குழந்தைகளுக்கு எதிரானது. எட்டாவது வரை அவர்கள் மற்ற குழந்தைகள் போலப் படிக்கலாம். அதற்குப் பின் அறிவியலோ, கணிதமோ படிக்க இயலாது. ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ... கலை, இலக்கியம், இசை என்று ஏதாவது ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டியதுதான். அவ்வளவுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.

கார்த்திக் அறிவியல் மேல் அவ்வளவு ஆர்வம் வைத்திருந்தான். அறிவியல் படித்து பட்டம் வாங்க வேண்டுமென்பது அவனது பெருங்கனவு. அதற்காகத்தான் பதினொன்றாம் வகுப்பில், சி.பி.எஸ்.இ. உடன் கார்த்திக் போராட வேண்டியதிருந்தது. பார்வையற்ற மாணவன் ஒருவன் அறிவியல் படிக்க முடியாது என்றார்கள். ஆய்வுக்கூடப் பரிசோதனை உண்டு. டயாகிராம் எல்லாம் உண்டு. பார்வையற்ற மாணவன் அதெல்லாம் செய்ய முடியாது என்று ரெட் சிக்னலே காண்பித்தார்கள்.

‘எனக்கு அறிவியல் பிடிக்கும். நான் அதைப் படிக்க விரும்புகிறேன். அதில்தான் எனது +2 தேர்வுகளை எழுத விரும்புகிறேன். அதற்கு அனுமதி கொடுங்கள்’ என்று கார்த்திக் மீண்டும் மீண்டும் கடிதம் மூலமாக வலியுறுத்திக் கேட்டான். அந்த விடாமுயற்சியால் ஒருவழியாக அனுமதி கிடைத்தது. ஆனால், பார்வையற்ற ஒரு மாணவன் படிப்பதற்கேற்ப சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் இல்லை.

பத்தாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் கிடைத்தன. அவற்றை ‘டெக்ஸ்ட் டூ ஸ்பீச்’ ஆக மாற்றிக் கேட்டுப் படித்துக்கொண்டான் கார்த்திக். +1, +2 புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் கிடைக்கவில்லை. பார்வை இல்லையென்றாலும் கார்த்திக் தட்டச்சு செய்வதில் திறமை கொண்டவன். பாடங்களை யாரையாவது வாசிக்கச் சொல்லி, தினமும் பல பக்கங்கள் டைப் செய்து வைத்துக்கொண்டான். பின் ஆடியோவாக அதைக் கேட்டுப் புரிந்துகொண்டான்.

பள்ளியில் ஆசிரியர்களும் சக மாணவர்களும், வீட்டில் பெற்றோர்களும் உதவினார்கள். ஆய்வகத்தில் ஆசிரியர்களின் உதவியுடன் பரிசோதனைகளை மேற்கொண்டான். சி.பி.எஸ்.இ. +2 பொதுத்தேர்வில் கார்த்திக், 479 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினான். அதில் கம்ப்யூட்டர் சயின்ஸில் 99. இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் என அனைத்திலும் 95. இந்தியாவில் பார்வையற்ற ஒரு மாணவன் +2 பொதுத்தேர்வில் அறிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சாதனையை கார்த்திக் நிகழ்த்தினான்.

‘‘நான் ஐ.ஐ.டி-யில் படிக்க விரும்புகிறேன்’’ - கார்த்திக்கின் அடுத்த இலக்கு அது.‘பார்வையற்ற ஒருவர், IITக்கான JEE தேர்வு எழுத முடியாது. அதற்கு அனுமதி இல்லை’ என்று மறுத்தார்கள். எவ்வளவோ போராடியும், அதிக மதிப்பெண்கள் வைத்திருந்தும் அதற்குரிய அனுமதியை கார்த்திக்கால் பெற முடியவில்லை.‘பார்வையற்ற மாணவர் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்றால், அதற்கு உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். விதிமுறைகளின்படி அதை அனுமதிக்க முடியாது.

அதில் ஏமாற்றுவதற்கு வழிவகுத்ததுபோல் ஆகிவிடும்’ என்று ஒரேயடியாக மறுத்தது ஐ.ஐ.டி.‘நீங்களே ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவரை நியமனம் செய்யுங்கள். அதற்குரிய கட்டணத்தை நாங்கள் செலுத்திவிடுகிறோம். நுழைவுத்தேர்வு எழுத அனுமதியுங்கள்’ என்றும் கார்த்திக் சார்பில் மன்றாடிக் கேட்டார்கள். மூன்று ஆண்டுகள் போராடியும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை எழுத கார்த்திக் அனுமதிக்கப்படவில்லை.

திறமையானவர்களை உருவாக்கும் ஐ.ஐ.டி. அசாத்திய திறமை கொண்ட ஓர் இந்திய மாணவருக்குத் தன் கதவுகளையே திறக்கவில்லை. பார்வையற்ற ஒருவருக்காகத் தன் விதிகளையும் தளர்த்திக்கொள்ளாமல் கடுமை காட்டியாது. கார்த்திக் குடும்பத்தினர் நொந்துபோயிருந்த சூழலில், அமெரிக்காவில் இருந்து ஓர் அழைப்பு வந்தது.

அங்கே ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கார்த்திக் படிப்பதற்காக அனுமதி கிடைத்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு. அதுவும் ஸ்காலர்ஷிப்புடன். விமானம் ஏறுவதற்கு முன்பாகவே மனத்தால் பறக்க ஆரம்பித்தார் கார்த்திக்.‘தங்கள் மகன் அங்கே தனியாகச் சென்று கஷ்டப்படுவானே, இதெல்லாம் சரிப்படுமா’ என்று குடும்பத்தினர் முதலில் தயங்கினார்கள். ஆனாலும் கார்த்திக்கின் ஆசைக்காக அவரை அனுப்பி வைத்தார்கள். பார்வையற்றவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை. அவர்களுக்கேற்ற வசதிகள்.

கார்த்திக் இப்போது ஸ்டான்ஃபோர்டில் படித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட கனவுகள் இருக்கின்றன. குறிப்பாகத் தன்னைப் போலப் பார்வையற்றவர்கள் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் மேற்படிப்பு படிப்பதற்கேற்ற வசதிகளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குத் தேவையான மென்பொருள்களை வடிவமைக்க வேண்டும். அதை நோக்கித்தான் முழு முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

கார்த்திக்கின் திறமையை உணர்ந்துகொண்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அவருக்குப் பயிற்சி கொடுக்க முன்வந்துள்ளது. வருங்காலத்தில் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து பணியாற்றுவது, பார்வையற்றவர்களுக்கான மென்பொருள்களை உருவாக்க வேண்டுமென்பது கார்த்திக்கின் லட்சியம்.

எதிர்காலத்தில் அவரால், இந்தியாவில் பார்வையற்ற பலரும் அறிவியில் துறையில் பட்டப்படிப்பைப் படிக்கும் நிலை நிச்சயம் உருவாகும். அரசும் ஐ.ஐ.டி-யும் பார்வையற்றவர்களுக்கென காட்டாத வழியை, வெளிச்சத்தை, கார்த்திக் நிச்சயம் உண்டாக்குவார். அவர் பார்வையற்றவர்களின் கலங்கரை விளக்கம்.

‘பார்வையற்றவர்கள் என்றால் அவர்களால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதுதான் படிக்க முடியும் என்று எல்லை வகுத்திருக்கிறார்கள். எங்கள் பலத்தை நாங்கள்தான் வரையறுக்க வேண்டும். நீங்கள் நினைப்பதைவிட நாங்கள் வலிமையானவர்கள்! எந்தக் குறைபாடும் எங்கள் கனவை அடைவதற்கு ஒருபோதும் தடையாக இருக்காது. ஏனெனில் எங்களுக்கு நம்பிக்கை அதிகம்!’ என்பதே கார்த்திக்கின் அனுபவ மொழி.

(வளர்வோம்…)

முகில்