மாணவர் நடத்தை மீறலைப் புரிந்துகொள்வது எப்படி?
விழிப்புணர்வுத் தொடர் 23
குழந்தைகளின் மனதை வாசிக்கத் தெரிந்தவரே இன்று சரியான ஆசிரியராக இருக்க முடியும். - லிசா அரோன்சன் (The Teacher’s Why Book)
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாகத் தண்டிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பலதரப்பட்ட மனநிலை உள்ள மாணவர்களைப் பற்றிய புரிதல் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். * நான் அடிக்கும் ஆசிரியர் அல்ல, ஆனாலும் வகுப்பறையில் சில சமயம் என் பொறுமையைச் சோதித்துவிடுகிறார்கள். * கண்டிப்பாக அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது என நினைத்தாலும் ஓரிரு மாணவர்களின் துர்நடத்தை என்னை அவ்விதம் செய்ய வைத்துவிடுகிறது. * எது நடந்தாலும் கண்டுகொள்ளாமலே இருக்க நான் என்ன ஜடமா?
- இப்படியாகத்தான் இன்று ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். மாணவர்கள் வகுப்பில் நடத்தை மீறல்களில் ஈடுபடுவது ஏன்? எனும் மையக் கேள்விக்குச் செல்வோம். அதற்குக் குழந்தை உளவியல் சொல்லும் காரணங்கள் யாவை?
ழின் பியாகட் தொடங்கி பல உளவியலாளர்கள் குழந்தைகளின் நடத்தை மீறல்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள். ரஷ்யக் கல்வியாளர் ஆண்டன் மக்கெரன்கோவின் மிகப் பிரபலமான வாசகத்தோடு நாம் தொடங்குவோம். குழந்தைகளின் நடத்தை மீறல் ஒவ்வொன்றின் பின்னேயும் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது.
இது எவ்வளவு உதவிகரமான வாசகம்! மாணவர்களில் சிலர் வகுப்பில் கத்துகிறார்கள், சிலர் வகுப்பறை ஒழுங்கை முற்றிலும் குலைக்கிறார்கள். ஆசிரியர் பற்றி கீழ்த்தரமாக எதையாவது செய்கிறார்கள் சிலர். தங்களைத் தாங்களே பிளேடால் கிழித்துக்கொள்வது, ஊரை விட்டு ஓடுவது எனப் பலவித ஆபத்துகளில் சிலர். பிற மாணவர்களுக்கு பலவாறு தீங்கு இழைத்தல், வேண்டுமென்றே காரணமின்றிப் பாடத்தில் கவனம் செலுத்தவிடாமல் செய்தல் எனப் பலவாறு அவர்களின் நடத்தை மீறல்கள் இருப்பதைக் காணலாம்.
லிசா அரோன்சன் எனும் கல்வி-உளவியலாளர் மேலும் சிலரோடு இணைந்து ‘ஆசிரியரின் ஏன்? புத்தகம்’ (The Teacher’s Why Book) என்ற நூலை வழங்கியிருக்கிறார். இந்த நூல் குறித்து இங்கு விரிவாகக் குறிப்பிடுவது உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த நூலில் லிசா அரோன்சன் மிகவும் சிக்கலான நம் பிரச்னையின் ஆணிவேரை நோக்கிப் பயணிக்க வைக்கிறார்.
குழந்தைகளின் நடத்தை மீறல் நடக்கும்போது வகுப்பறையில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் - ஆசிரியராக உங்களுக்கு ஏற்படும் மனநிலையை வைத்து, அந்த நடத்தை மீறல்களின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்பது அவரது கருத்து. கீழ்க்கண்ட அட்டவணை நமக்கு அதை விளக்குகிறது.
ஆசிரியருக்குத் தோன்றும் உணர்வு மாணவர் நடத்தை மீறலின் நோக்கம் 1. எரிச்சலாக உள்ளதுகவனத்தை ஈர்த்தல் 2. கோபம் ஏற்படுகிறது (ஆத்திர உணர்வு)வகுப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் 3. மனவேதனை தருகிறது பழி வாங்குதல் 4. ஆர்வக்குலைவு (எப்படியோ ஒழி)தோல்வியிலிருந்து தப்பி ஓடுதல் நோக்கம்
மேற்கண்ட அட்டவணை சிலருக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால், நம்மால் ஒவ்வொன்றையும் தனித்தனியே விளக்கமுடியும். இவற்றைத் தவிர குழந்தைகளுக்கு வேறு நோக்கங்கள் இல்லை. கவனச்சிதைவு, பிற-பால் (ஆண்/பெண் உறவு சார்ந்த) கவர்ச்சி, நட்பு வட்டம், வீட்டுச் சிக்கல்கள் என்று பலவிதமான பின்னணியிலிருந்து நாம் தனித்தனியே குழந்தைகளைப் பிரித்துப் பகுத்தாய வேண்டும் என்றாலும், ஒரு வகுப்பறையில் மேற்கண்ட எண்ணங்கள் ஆசிரியர்களுக்குத் தோன்றும்போது அவர்கள் தன்னிலை இழக்கின்றனர். சுயகட்டுப்பாடு, பின்விளைவு என எல்லாவற்றையும் மறந்து குழந்தைகளைத் தண்டிப்பது எனும் ஒரே தவறான தீர்வை ஆசிரியர் கையில் எடுக்கிறார்.
(அ1) முதலில் ‘கவனத்தை ஈர்க்கும்’ பிரச்னைக்கு வருவோம். *ஒவ்வொரு சராசரி மாணவரும் தனக்கெனக் கவனத்தை எதிர்பார்க்கிறார். *அது இல்லை என தோன்றும்போது நடத்தை-மீறி அதைப் பெறுகிறார். *எப்போதும் நடுநாயக அந்தஸ்தில் (Centre of Attraction) இருக்கத் துடிப்பவர்களும் உண்டு. *முழு வகுப்பே அவரைத் திரும்பிப் பார்க்காத வரை ஓயமாட்டார்.
(அ2) சரி, இத்தகைய மாணவரைக் கையாள்வது எப்படி? கீழ்க்கண்ட விஷயங்களைப் பரிசீலிக்கலாம். *கவனத்தை ஈர்க்காதபோது அவர்களை வரிந்து பாராட்டுதல். *அவர்களின் நடத்தை மீறலைக் கவனியாமல் - புறக்கணித்து பாடத்தின் மீதே கவனம் ஏற்பட வைத்தல். *எதிர்பார்க்காதபோது அவர்மீது அதீத கவனத்தை செலுத்துதல். *முழு வகுப்பின் ஆதரவு நாடி - கவனம் பெற வைக்கும் அவரது நோக்கத்தை உடைத்தல். (ஆ1) அடுத்து நாம் ‘அதிகாரத்தை’ (power) பெறத் துடிக்கும் மாணவர் பிரச்னைக்கு வருவோம். *சில மாணவர்கள் தாங்கள்தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். *அதிகாரம் தேடிப் பரிதவிக்கும் அவர்கள் உங்கள் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதே அதற்கான ஒரே வழி என நினைக்கிறார்கள். *வகுப்பறையில்தான் இருக்கிறோம் எனும் உணர்வே, அது தன் கட்டுப்பாட்டில் உள்ளது என அவர்கள் நம்பும்போது மட்டுமே என நினைக்கிறார்கள். (ஆ2) இத்தகைய மாணவர்களைக் கையாள்வது எப்படி? கீழ்க்கண்ட விஷயங்களைப் பரிசீலிக்கலாம். *நமது அதிகாரம் - உரிமை கேள்விக்கு உட்படுத்தப்படுவதால் அளவற்ற கோபத்தில் உடனடியாக அடி-உதை என்ற சபலம் ஏற்படும், சுயகட்டுப்பாடு தேவை. *இவ்வகை அதிகாரம் தேடும் குழந்தைகளை (‘அப்படித்தான் செய்வேன்.. இப்ப.. என்னங்கறீங்க..?’ எனும் நிலையில்) சமாளித்து வகுப்பை கட்டுக்குள் கொண்டு வரும் ஒரே தீர்வு - பிரச்னையிலிருந்தும் நாம் (ஆசிரியர்) வெளிவந்து விடுதல். (‘சரி.. இப்ப உட்கார்ந்து எழுது.. வகுப்பு முடிந்ததும் என்னை வந்து.. பாரு’) (ஒரு சண்டைக்கு இருவர் தேவை அல்லவா)அதிகாரத்தைக் கொடுங்கள்: ‘நாளைக்கு வகுப்பில் நீதான் வீட்டுப்பாட நோட்டுகளை எல்லாரிடமும் பெற்று அடுக்கி வைக்க வேண்டும்...’ ‘நீ நாளை வருகைப் பதிவேடு எடு...’, ‘நாளை முதல் நீ ஒரு மாதம் லீடராக இருக்க வேண்டும். செய்வாயா?’ (இ1) அடுத்து பழி தீர்த்தலைப் (Revenge) புரிந்துகொள்வோம்: *மாணவர்கள் உங்களால் அவமானப்படுத்தப்பட்டதாகவோ, தோற்கடிக்கப்பட்டதாகவோ, எல்லா துன்பங்களுக்கும் நீங்களே காரணம் என நினைத்தாலோ உங்களைப் பழிவாங்க (அறிந்தோ, அறியாமலோ) முடிவு செய்கிறார்கள். *பழி தீர்ப்பது என்பது உங்களுக்கு உடல்வலி ஏற்படுத்துதல், வார்த்தைகளால் சுடுதல், எதையாவது பேசி வகுப்பையே உங்களுக்கு எதிராகத் திருப்புதல், சுவரில் உங்களைப் பற்றி எழுதுதல், உங்கள் பொருட்களை (வாகனம் உட்பட) சேதப்படுத்துதல் மற்றும் வகுப்பில் கலந்துகொள்ளாமல், பிடிவாதமாகச் சும்மா இருத்தல் எனப் பலவகைகளில் வெளிப்படும். *உங்கள் அபிமானம் பெற்ற மாணவர்களை அவமதித்தல், சில சமயம் (சென்னையில் நடந்தது போல) குழந்தைகள் கத்தியோடு ரத்த வெறி கொண்டு பாய்வது என்பது அவர்களது உச்சகட்ட வெறுப்பின் வெளிப்பாடு. (இ2) பழிதீர்க்கும் மனநிலை குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி? கீழ்க்கண்ட விஷயங்களைப் பரிசீலிப்போம் *ஒன்றை முதலில் நினைவில் வையுங்கள், நம்மைப் பழிதீர்க்க நினைக்கும் ஒரு குழந்தை ஏற்கனவே அளவற்ற மனவேதனையில் மனவலியில் துடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது அதற்குத் தேவை ஆதரவு. அன்புறவு மற்றும் பாதுகாப்பு அவற்றை வழங்கும் பெருங்கடமை நமக்குண்டு. எனவே, திருப்பித் தாக்க நினைக்காதீர்கள். *நம்பிக்கை தரும் நல்லுறவை அவரோடு ஏற்படுத்திக்கொள்ளுதல் உங்களது நோக்கமாக இருக்க வேண்டும். *அவரை நீங்கள் பழிதீர்க்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. அது அவரை உங்கள் பாடத்தை (Subject) விட்டே வெறுத்து ஒதுங்க வைத்துவிடும். அவரது வாழ்க்கையையே அது பாதிக்கும். *மற்றவர்கள் முன் அவரைச் சின்னச் சின்ன வெற்றிகளுக்குக் கூட பாராட்டிப் புகழ்ந்து தக்க வைப்பதே புத்திசாலித்தனம். *மனம் விட்டுப் பேசிட அவருக்கு உதவுங்கள். உடனே அவர் மாறுவதை நீங்கள் பார்க்கலாம். (ஈ1) தோல்விப் பயத்தில் நம்மைப் புறக்கணிக்கும் குழந்தையைப் பற்றி இப்போது பார்ப்போம். *சில குழந்தைகள் தங்களால் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை - கல்வி விஷயத்தில் - ஈடு செய்ய முடியாத மனவலியோடு இருப்பார்கள். *தொடர்ந்து விடுப்பு எடுத்தல் - அல்லது வகுப்பின் முக்கிய அம்சங்களைக் கவனியாமல் விட்டு பிறகு எதையும் பின் தொடர முடியாது போனதால் வந்த ‘எனக்கு புரியாது’ எனும் மனநிலைக்கு ஆளாகி, ‘மீண்டும் மீண்டும் தோற்பதை விட முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது’ என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். *படிப்பைப் பாதியில் கைவிடுவது உழைப்பை விட எளிதானது. முயற்சி செய்து தோற்பதை விட இது எவ்வளவோ பரவாயில்லை எனும் மனநிலை. *பிற மாணவர்கள் மீதான தாக்குதல் (Sullying) உட்பட பலவகை தவறு களின் மூலம் தங்களுக்கு வடிகால் தேட அவர்கள் முயற்சிப்பார்கள். (ஈ2) கற்றலில் இருந்து தப்புதல் - தோல்விப் பயம் மற்றும் போதாமை - குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி? கீழ்க்கண்டவற்றைப் பரிசீலிப்போம். *பொறுமையுடன் அவர்களுக்கான பாடப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். *அவர்கள் எந்த இடத்தில் (கல்வியைப் பொறுத்தவரை) இருக்கிறார்களோ அங்கிருந்து தொடங்க வேண்டும். எங்கே எப்படி இருக்க வேண்டுமோ அங்கிருந்து அல்ல! *அவர்களின் வேலைகள் மீதான உங்கள் விமர்சனங்கள் கிண்டல்கள் அனைத்தையும் நிறுத்துங்கள். *சிறிய முயற்சியையும் பாராட்டுங்கள். *வேண்டுமென்றே சிறு சிறு வேலைகளில் ஈடுபட வைத்து அதனை ஊக்கப்படுத்தி மட்டுமே பெரிய வேலைகளில் ஈடுபாடு வர வைக்க முடியும். எனவே, மாணவர்களின் நடத்தை மீறல்களின் பின்னே உள்ள நோக்கத்தை நன்கறிந்து நாம் அவற்றிற்கு ஏற்ப வளைந்துகொடுத்து வகுப்பறையைக் கற்கும் சொர்க்கபுரியாக மாற்றமுடியும்.
நர்ஸ் வேலை என்றாலே ரத்தம் கண்டு, மலஜலம் கண்டு அருவருக்காமல் பொறுமையோடு நோயாளியே குறியாக இருந்து பணியாற்றுவது போலவே, ஆசிரியர்களான நாம் குழந்தைகளே முக்கியம், எல்லாக் குழந்தைகளும் ஒன்று போல அல்ல என்பதை உணர்ந்து, சகிப்புத் தன்மையுடனும், ஏராளமான பொறுமையுடனும் ஈடுபாட்டோடும் நம்மை அர்ப்பணித்தால் மட்டுமே வன்முறையே இல்லாத வகுப்பறைகள் சாத்தியம்.
(23ம் பாடவேளை முடிந்தது)
‘ஆயிஷா’ இரா. நடராசன்
|