தன்னம்பிக்கை மிளிரும் சிந்தனைதான் சுயமதிப்பு!
உளவியல் தொடர்
உடல்... மனம்... ஈகோ!
உலகத்தை வெல்வதைக்காட்டிலும், மனிதன் தன்னை வெல்வதே மிகச் சிறந்த வெற்றி - புத்தர் - ஈகோ மொழி
மனிதர்களுக்குச் சுயம் (Self) என்பது இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்த இனிப்பான வார்த்தைதான். அந்தச் சுயம் என்ற வார்த்தை... ‘நான்’. நான் என்ற வார்த்தையைத் தனியே உச்சரிக்கும்போதோ, மற்றவர் குறிப்பிட்டுப் பேசும்போதோ, மனித மனம் தன்னுள் மிகப்பெரிய மனக்கிளர்ச்சி யைத் தோற்றுவித்துக்கொண்டு, சந்தோஷத்தை எதிர்கொண்டு நிற்கும்.
அதே நேரம் இந்த ‘நான்’ மற்றவர்களாலோ, சூழ்நிலைகளாலோ தாக்குதலுக்கு ஆட்படும்போது, அது பலவீனப்பட்டு, துக்ககரமான உணர்ச்சி நிலையாக மாறி வேதனைப்பட்டும் நின்றிருக்கும். அந்தச் சூழ்நிலைகளில், உணர்ச்சி அலைகள் ஒன்று திரண்டு, ஓர் உருவம் பெற்று, ஒரு பிம்பமாக மாறி நிற்கிறது. மனதினின்றும் வெளிப்பட்டு நிற்கும் அந்தப் பிம்பத்தின் மறுபெயர்தான் ஈகோ.
உள்ளார்ந்து பார்த்தால் மனித மனதிற்குள் சந்தோஷத்திற்கும், துக்கத்திற்குமான தன்மையைத் தீர்மானிப்பதே இந்த ‘நான்’ என்ற சுயம்தான். அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு பிரதிபலிப்பதைப் பொறுத்தே அதன் வெளிப்பாடு அமைகிறது. அதுவே ஈகோவின் செயல்பாடாக மாறுகிறது. பொதுவாகவே மனிதமனம் வளர வளர உயர்வான நிலையை அடையவும், அதைச் சந்தோஷமான நிலையிலேயே வைத்திருக்கவும்தான் விருப்பம் கொள்கிறது. அந்த சந்தோஷ மனநிலைக்கு வலு சேர்ப்பது போல் அமைவது சுயத்தின் மதிப்பு. இந்த மதிப்பைக் கொண்டுதான் ‘நான்’ என்ற சுயத்தை எடைபோட்டுப் பார்க்கிறது மனம்.
எத்தனை விசித்திரம் பாருங்கள்... மனதினின்றும் எட்டிப் பார்க்கும் ஒரு பிம்பமே, மனதை எடைபோட்டுப் பார்க்கிறது. இந்த மனித மனதின் பிம்பமான ‘நான்’ என்பதன் மதிப்பு, இரு நிலைகளாக இருக்கிறது. ஒன்று, தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளும் பிம்பம். இரண்டாவது, மற்றவர் நம் மீது மதிப்பிட்டு வெளிப்படுத்தும் பிம்பம். அதைச் சுயமதிப்பு (SELF WORTH), சுயமரியாதை (SELF RESPECT) என்று இரண்டு விதங்களாகப் பிரித்துக்கொள்கிறது மனம். சுயமதிப்பு என்பது ஒரு மனிதன் தன்மீது கொள்ளும் மதிப்பு. சுயமரியாதை என்பது ஒரு மனிதன் மீது மற்றவர் காட்டும் மதிப்பு.
முதலாவதாக உள்ள சுயமதிப்பின் பிம்பமானது, தனி மனித மனம் தனது உள் அடுக்குகளுக்குள் எழும் உணர்ச்சி நிலையால் வெளிப்படும் ‘நான் சிறந்தவன்’ என்ற பிம்பத்தையே பிரதானமானதாக எடுத்துக்கொள்கிறது. பொதுவாக தன்னம்பிக்கை கொண்ட மனிதன் ‘நான் உயர்ந்தவன்’, ‘நான் சிறப்பானவன்’, ‘என்னால் முடியும்’ என்று சூழ்நிலைக்குத் தக்கபடி சீரான மனநிலையிலேயே சிந்தித்திருப்பான். இந்தத் தன்னம்பிக்கை மிளிரும் சிந்தனைதான் ‘சுயமதிப்பு’ என்னும் கணக்கில் சேர்ந்துகொள்கிறது. அதுவே, தன்முனைப்பாக மாறி, மதிப்பான மனிதராக மனதுக்குள் நிறுத்திக்கொள்கிறது.
இரண்டாவது, சுயமரியாதை எனும் பிம்பம். இது மற்றவர் நம் மீது வைத்திருக்கும் பிம்பம். மனித செயல்பாட்டால், வாழ்க்கை முறையால், சூழ்நிலைக்குத் தக்கபடியேயான நடவடிக்கையால், உடல் மொழியால்... ஒன்றுதிரண்டு, நம்மைப் பற்றி மற்றவர் தங்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
அந்த பிம்பத்தைக் கொண்டே எடை போட்டு மதிப்பிட்டுக் கொண்டு, அதைச் சுயமரியாதையாக மனதிற்குள் நிலைநிறுத்துகிறது மனம். ‘அவன் பரவாயில்லை’ என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டாலும், ‘இதுக்கு அவன் லாயக்கில்லை’, ‘இதுக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான்’ என்று அழுத்தமாய்ச் சொல்லப்படும் சொற்களால் உருவாகிறது, ஒரு மனிதன் மீதான சக மனிதனது பார்வை. அதன் பலனாய் மனதுள் திரளும் முழு உருவம்தான் சுயமரியாதை.
இப்படி, தனி மனித மனம் எதிர்கொள்ளும் இரண்டு பதங்களான சுயமதிப்பும், சுயமரியாதையும் இணைந்து ஒன்றுகலந்து நிற்கையில்தான் வடிவம் பெறுகிறது ஒரு மனிதனின் ‘ஈகோ’ எனும் பிம்பம். எல்லா சூழ்நிலைகளிலும் ஈகோ, சுயமதிப்பையும், சுயமரியாதையையும் தராசில் நிறுத்தி, எந்தத் தட்டின் மதிப்பு கனமாக இருக்கிறதோ அதற்குத் தக்கபடி சூழ்நிலைகளை எதிர்கொள்கிறது.
ஒருவனது சுயமதிப்பு உயர்வாக இருந்து, சுயமரியாதை குறைவாக இருந்தால் அவனது ‘நான்’ அடிபட்டதாக இருக்கும். உதாரணமாக, ஒரு மனிதன் ஒரு வேலைக்குச் செல்கையில், தான் மதிப்பானவன், திறமையானவன் என்பதை உணர்ந்து தான் மாதம் ரூ.30,000 சம்பளம் பெறத் தகுதியானவன் என்று எண்ணியிருக்கையில், வேலை வழங்கும் நிறுவனமோ அதை மறுத்து, மாதம் ரூ.18,000 என்று சம்பளம் நிர்ணயம் செய்தால், அந்தச் சுயமதிப்பிடலைக் கண்டு அவன் மனம் சுருங்கி முகம் வாடிவிடுகிறது.
இந்த உணர்ச்சி அலைகளின் எதிர்கொள்ளல்களால், அவனது சுயம் காயப்படுவது நூறு சதவீதம் உண்மை. அவனது உள்மனதில் ‘தனக்கு அத்தனை மதிப்பில்லையா? தனது மதிப்பு அத்தனை குறைவானதா?’ என்பதையே சிந்தித்துக்கொண்டு இருப்பதால், உணர்ச்சி அலைகளின் தூண்டுதல்களால் முகம் வாடிவிடுகிறது. மனம் சோர்ந்துவிடுகிறது.
‘நான்’ குறித்தான மதிப்பு பணத்தையோ/நாணயத்தையோ அளவீடாகக்கொண்டதாக விலை மதிப்பீடு செய்வதாக இருக்கவேண்டும் என்பதில்லை, விலைக்குள் அடங்காத மதிப்பாகவும் இருக்கலாம். எப்படியென்றால், ஒரு மனிதன் தனது செயல்பாட்டின் மதிப்பை உணர்ந்து, தான் அலுவலகத்தில் நுழைந்ததும் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களும், மற்றவர்களும் தனக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணும்போது, அதேபோல், அவன் மதிக்கப்படும்போது அவன் மனம் பூரிப்படைகிறது. அதே சமயம் அவ்வாறு நிகழாதபோது, அவன் மனம் வேதனைப்படுகிறது. அதைவிட, தான் மதிக்கப்படாமல், உதாசீனப்படுத்தப்பட்டோம் என்கிற நிலையில் சிந்திக்கத் தொடங்கி விடுகிறது.
இதனால் ‘நான்’ கொள்ளும் பாதிப்பு... சுயம் காயப்பட்டதாக, ஈகோ அடிபட்டதாக மாறி, சூழ்நிலைக்குத் தக்கபடி தடித்த வார்த்தைகளைப் பிரயோகிக்கவும், கோபத்தையும் ஆத்திர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவும் செய்துவிடுகிறது.எல்லாச் சூழ்நிலைகளிலும் இதுபோன்ற சீர்தூக்கிப் பார்க்கும் தன்மையும், அதன் பலனும் மனதுள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், அதை உணர்ந்து சூழ்நிலைகளின் பாதிப்புகளுக்கு ஆட்படாமல் நிலைமையை சாதகமாக்கிக்கொள்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிப்போகிறது.
சுயமதிப்பிற்கும், சுயமரியாதைக்குமான இடைவெளி எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சூழ்நிலை சாதகமாகவே இருக்கும். சூழ்நிலை சாதகமாக இருந்தால் மனம் அமைதியாக இருக்கும்.சமவெளிப் பாதை பயணங்களின் மத்தியில் குறுக்கீடுகள் எதிர்ப்படும்போது இடைவெளிகள் குறுகலாய் இருந்தால், சுலபமாய்த் தாண்டிவிட முடியும். இடைவெளிகள் பெரிதாகத் தாண்ட இயலாதவைகளாக இருந்துவிட்டால் என்ன செய்வது? அடுத்த இதழில் பார்க்கலாம்...
குரு சிஷ்யன் கதை
குரு தன்னுடைய சிஷ்யர்களுடன் ஒரு ஏரிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். தன்னுடைய சிஷ்யர்களில் ஒருவரை அனுப்பி, குடிப்பதற்கு ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். ஒரு சிஷ்யன், பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நடந்தான். அந்த நேரத்தில், மாட்டுவண்டி ஒன்று, ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றது. ஏரி நீர் கலங்கலாகிவிட்டது. ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
‘இந்தக் கலங்கிய நீர் எப்படி குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படி குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது?’ என்று தண்ணீர் எடுக்காமல் திரும்பி வந்து, அதைத் தன் குருவிடமும் தெரிவித்தான். குரு எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு, ஒரு மணி நேரம் கடந்த பின், தன்னுடைய சிஷ்யனை மீண்டும் ஏரிக்குச் சென்று நீர் எடுத்துவர சொன்னார். நீர்நிலை அருகே சென்று சிஷ்யன் பானையில் தண்ணீரை முகர்ந்துகொண்டு குருவிடம் திரும்பினான்.
குரு தண்ணீரைப் பார்த்து, சிஷ்யனிடம் கேட்டார், “தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?’’ என்று. “நான் ஒன்றும் செய்யவில்லை குருவே!’’ என்றான் சிஷ்யன். உடனே குரு, “நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா? நம் மனமும் அப்படிப்பட்டதுதான்.
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அந்த கால அவகாசத்தில் அது தனக்குத்தானே சரியாகிவிடும். அதுவாக அமைதியாகிவிடும். இது தன்னிச்சையாக நடக்கும் செயல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!’’ என்றார். உண்மையை உணர்ந்த சிஷ்யன், “இப்போது புரிந்தது குருவே!” என்றான்.
(தொடரும்...)
ஸ்ரீநிவாஸ் பிரபு
|