எந்த நாடு செல்ல வேண்டும்? என்ன படிக்க வேண்டும்?
வெளிநாட்டுக் கல்வி
தீர்க்கமாக முடிவு செய்யுங்கள்!
நம் நாட்டில் கற்றுக்கொண்ட படிப்போடு வெளிநாட்டுப் படிப்பையும் கற்க விரும்பும் மாணவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டிவரும் இந்தப் பகுதியில், அயர்லாந்து செல்வதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதள லிங்க், விசா பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.வெளிநாடு செல்ல ஆர்வம் கொள்ளும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்...
தவறான வழிகாட்டும் வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை நிறுவனங்களிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது. இதை மீண்டும் மீண்டும் சொல்லக் காரணம், முறையாக வழிகாட்டும் கல்வி ஆலோசனை நிறுவனங்களும் உள்ளன. மாணவர்களின் ஆர்வத்தைப் பணமாக்கிக்கொள்ள நினைக்கும் கல்வி ஆலோசனை நிறுவனங்களும் உள்ளன.
முறையாகச் செயல்படக்கூடிய கல்வி ஆலோசனை நிறுவனங்களை அணுகி பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட்டின் முதல் பக்கம் - கடைசிப் பக்கம், ஒரு புகைப்படம், 2 சிபாரிசுக் கடிதம் (மிக முக்கியம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்), STATEMENT OF PURPOSE - SOP (MOTIVATION LETTER), IELTS சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்றால் அவர்களே முழுமையாக விண்ணப்பங்களை நிரப்பி, நீங்கள் செல்லவேண்டிய நாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துவிடுவார்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தகவல் தொடர்ப்புக்கு கல்வி ஆலோசனை நிறுவனத்தின் மெயில் ஐ.டி. கொடுக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடு செல்ல நினைக்கும் மாணவரின் மெயில் ஐ.டி. அவசியம் கொடுக்கப்பட வேண்டும். கடிதத் தொடர்புகள் உங்களுக்கும் தெரிய வேண்டும். ஏனென்றால் சில ஆலோசனை நிறுவனங்கள் மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அதைத் தாங்களே பெற்றுக்கொண்டு அதிக பணம் வசூலிக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. அதனால் முழுக் கவனத்தோடு செயல்படவேண்டும்.
பொதுவாக மாணவர் சேர்க்கையானது அயர்லாந்தைப் பொறுத்தவரை செப்டம்பர், ஜனவரி ஆகிய இருமுறை நடைபெறும். ஆகவே, மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பாகவே பாஸ்போர்ட், சான்றிதழ்கள், கடிதங்களை எல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாமல் போய்விடும். அட்மிஷன் ஜூலையிலேயே முடிந்துவிடும்.
அயர்லாந்தைப் பொறுத்தவரை விண்ணப்பங்களை அனுப்பிய பிறகு வாய்ப்பு இருந்தால் கடிதம் அனுப்புவார்கள். அப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டாலும்கூட அதை மனம் நோகாத அளவுக்கு, ‘மன்னிக்கவும், மீண்டும் அடுத்த முறை பார்க்கலாம்’ என்று தெரிவித்துவிடுவார்கள். ‘உங்களைவிட தகுதியானவர்கள் வந்ததால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதாகிவிட்டது’ என்று தெரிவிப்பார்கள்.
அப்படி வாய்ப்பு கிடைக்காதபட்சத்தில் மீண்டும் நாம் அடுத்த ஆண்டிலும் முயற்சி செய்யலாம். விண்ணப்பத் தொகையாக 100 யூரோ முதல் 500 யூரோ வரை வசூலிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. நம் நாட்டுப் பணத்தில் ரூபாய் 7,500 முதல் 35,000 ரூபாய் வரை ஆகும்.
விண்ணப்பிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் கூட விண்ணப்பிக்கலாம். ஆனால், அப்படி விண்ணப்பிப்பது வீண். எந்த நாட்டுக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறோமோ, எந்தப் பல்கலைக்கழகத்தில் என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைத் தீர்க்கமாக முடிவு செய்து முயற்சி செய்யவேண்டும்.
அயர்லாந்தில் படிக்கச் செல்லும் மாணவர்கள் எல்லா சான்றிதழ்களோடும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்த பிறகு வாய்ப்புக் கடிதம் வந்தவுடன் அதில் எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் என்பதைப் பற்றி இருக்கும் அந்தக் கட்டணத்தை ஆன்லைனில் கட்டிய பிறகு, அங்குச் சென்று தங்குவதற்கான செலவுக் கட்டணத்தை கட்டச் சொல்வார்கள். எஜுகேஷன் லோன் வாங்கியும் இந்தத் தொகையைக் கட்டலாம். அதையும் கட்டிய பிறகு, அங்குச் சென்று படிக்கக்கூடிய அளவு பண வசதி உள்ளது என்பதைக் காட்ட வேண்டும்.
பின்புதான் விசா பெறுவதற்கான கடிதம் வரும். கட்டணம் கட்டியதற்கான சான்று, பேங்க் லோன் வாங்கிய சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் இணைத்து https://www.visas.inis.gov.ie/avats/OnlineHome.aspx என்ற இணையதளத்தில் விசா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விசா விண்ணப்பத்தில் பெற்றோர் பற்றிய குறிப்புகளை அவசியம் குறிப்பிட வேண்டும். குறிப்பாக வருமானச் சான்று கொடுக்க வேண்டும்.
வங்கிக் கணக்கில் 3 அல்லது 4 லட்ச ரூபாயாவது பெற்றோருக்கு இருக்க வேண்டும். இவை அனைத்தையும் சமர்ப்பித்தால்தான் விசா கிடைக்கும். அயர்லாந்தைப் பொறுத்தவரை நிறைய பேர் இங்கிருந்து கடனை வாங்கிச் சென்றுவிட்டு, அங்கு போனதும் படிப்பதை விட்டு வேலைக்குச் செல்வதில் கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்பதால்தான் பொருளாதார வசதியைப் பற்றி சான்றுகள் கேட்கப்படுகிறது. அயர்லாந்தில் சென்று படிப்பதற்கு தேவையான மேலும் சில அடிப்படை முன்னேற்பாடுகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்...
ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்
|