இஞ்சி இடுப்பழகி விமர்சனம்
கூடிப்போன உடல் கனத்தினால், ஒரு பெண்ணுக்கு என்னவெல்லாம் இடைஞ்சல்கள் ஏற்படும் என்பதை சுவாரஸ்ய கணங்களோடு சொல்ல முயல்வதே ‘இஞ்சி இடுப்பழகி’. மெல்லிய மனது, இளகிய இதயத்தோடு இருக்கும் அனுஷ்கா, தன் வெயிட் தோற்றம் பற்றிய கவனம் இல்லாமல் இருக்கிறார். தாயார் ஊர்வசி, மகளின் திருமணம் கைகூடாததற்கு கனமும் ஒரு காரணம் என வருந்தத் தொடங்குகிறார். அனுஷ்காவின் பார்வை ஆர்யா மீது விழ, அவரோ ஸ்லிம் பியூட்டி சோனல் சௌஹானைக் காதலிக்கிறார். உடனே ஜீரோ சைஸுக்கு வழி தேடுகிறார் அனுஷ்கா. அனுஷ்காவின் காதல் நிறைவேறியதா... ஜீரோ சைஸுக்கு அனுஷ்கா திரும்பினாரா என்பதே முழுப் படம்!
அனுஷ்காவுக்கு ‘லட்டு’ மாதிரி ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட். திரை அகலத்திற்கு அனுஷ்கா தோன்றினாலும், பார்க்கவே தூண்டுகிறது அந்த முகம். முழுப் படத்தையும் ஹீரோவைத் தாண்டி அனுஷ்கா சுமக்கிறார். ஹீரோயின் என்றாலும் காமெடி வரையிலும் தன் வீச்சைக் கொண்டு செலுத்துவதில் உறுத்தாமல் பொருந்துகிறது அனுஷ்காவின் துடிப்பு. பெண் பார்க்கும் படலங்களில் அவர் தடுமாறி சரிவது செம சிரிப்பு லகலக! உடம்பை திடீரென்று இளைக்க வைக்கும் உத்திகளில் நிறைந்திருக்கும் ஆபத்தை, புரியவும் தெளியவும் வைக்கும் இடங்களில் அனுஷ்கா கொடுப்பது த்ரில் அனுபவம்!
படத்தின் இணைநாயகன்தான் ஆர்யா... எந்த ஹீரோத்தனமும் காட்டாமல் அனுஷ்காவிற்கு அடங்கியே நடிக்கிறார். வேறு எந்தத் தமிழ் ஹீரோவும் தயங்குகிற கேரக்டருக்கு ஆர்யா முன்வந்திருப்பது ஆச்சரியம். அவரைத் தள்ளிவிட்டு அனுஷ்கா ‘ஒன் வுமன் ஷோ’ ஆக்குவதை சந்தோஷமாக ஏற்கிறார் மனிதர். அனுஷ்காவின் மொத்தக் குடும்பமும் அன்பினால் பின்னப்பட்டு இருப்பது ரொம்பவும் புதுசு. அதுவும் தாத்தா கொல்லப்புடி மாருதிராவ் நிறைய இடங்களில் பதம், இதமான நெகழ்ச்சி தருகிறார்.

உடம்பை இளைக்கச் செய்யும் மோசடி - தகிடுதத்த பேர் வழியாக பிரகாஷ்ராஜ். இதெல்லாம் அவருக்குக் கைவந்த கலை. ஊதித் தள்ளுகிறார். மோசடியை மறைக்க அவர் தரும் ரீயாக்ஷன், ஆக்ஷன் எல்லாமே நச்! அம்மாவாக ஊர்வசியின் வார்த்தைகளில் அடிக்கடி பவுன்சர். எதிர்பாராத இடங்களில் திடுக் காமெடி தருவதில் அவருக்கு இணை இப்போதைக்கு யாரும் இல்லை. கீரவாணியின் பாடல்கள் தமிழுக்குப் பொருந்தவே இல்லை. அவரும் தமிழைப் பற்றி கவலைப்படவே இல்லை என்பது கண்கூடு. ஆர்யா - அனுஷ்கா போர்ஷன் தவிர மற்றெல்லா இடங்களிலும் தெலுங்கு வாசம்! டப்பிங் படம் பார்க்கிறோமோ என்ற நினைவு அடிக்கடி வந்து நினைவைத் தட்டுகிறது!
நாகார்ஜுனா, ஜீவா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ராணா, ரேவதி என கேமியோ முகங்கள் படையெடுத்தாலும், பெரிதாக படத்திற்குக் கை கொடுக்கவில்லை. ஆர்யா தன் பழைய காதலிலிருந்து பின்வாங்குவதும், அனுஷ்கா நிச்சயதார்த்தம் வரைக்கும் போய்த் திரும்புவதும் போங்கு! ஒட்டவும் இல்லை... அதனாலேயே கடைசி நேர பரபரப்புக் கணங்கள் எல்லாம் சவசவ! இடைவேளை வரை பரவாயில்லாமல் பயணிப்பவர்கள் அதற்குப் பிறகு எதைப் பற்றியும் கவலையே படவில்லை! நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பெரும் ஆறுதல். ‘இஞ்சி இடுப்பழகி’ எடையைக் குறைக்காமல் சுவாரஸ்யத்தைக் குறைத்திருக்கிறார்கள்!
- குங்குமம் விமர்சனக் குழு
|