பழைய வில்லனின் புது முகம்...



சமீபத்திய WHO அறிக்கை, கோவிட் தொற்றுக்குப் பிறகு காசநோய் அதிகரித்திருப்பதாக சொல்கிறது... என்ன காரணம்..?  அதிகரித்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது...  இதில் தமிழகத்தில் காசநோய் எப்படி இருக்கிறது..?  நாம் என்ன செய்ய வேண்டும்..?

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் போலத்தான் இருக்கிறது.இரண்டு வருடங்கள் நம்மை முற்றிலும் முடக்கிய கொரோனா... பின்னர் புதிதுபுதிதாகக் கிளம்பிய குரங்கம்மை, தக்காளிக் காய்ச்சல்... இதோ இந்த மழைக்காலம் தொடங்கும் முன்னரே புறப்பட்டு விட்ட ஃப்ளூ, டெங்கு... இன்னும் பல மர்மக் காய்ச்சல்கள் நம்மை உடலளவிலும் மனதளவிலும் பலவீனப்படுத்தி வரும் சூழ்நிலையில் -பழைய வில்லன் ஒன்று புதிய வேடம் தரித்துப் புறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு..!அதுதான் காசநோய் எனும் டிபி (Tuberculosis).

ஆம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களிடையே உழன்று, ஒரு ஸ்லோ-பாய்சன் போல மனிதர்களை பலியெடுத்து வரும் காசநோய்தான் அந்த வில்லன். உண்மையில் காசநோய் மற்றும் கொரோனா ஆகிய இரண்டுமே மனிதர்களின் நுரையீரலை பாதிக்கக்கூடியவை. இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல்கள் போன்ற அறிகுறிகள் எல்லாமே இரு நோய்களுக்குமே பொதுவானவை. இரண்டுமே எளிதில் பரவக்கூடியவை என்றாலும் காசநோய் கொரோனாவை விடக் கொடியது.

ஏனென்றால் காசநோய்க் கிருமிகள் உள்ளே நுழைந்தால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும் வரை ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறது. பிறகு மெல்ல பரவத்தொடங்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா நோயாளிகளை விட அதிக நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டும். பொதுவாக, இருமல் மற்றும் சளியின் மூலம் காற்றில் பரவும் இந்த டிபி நோய்; மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்கள், காற்றோட்டமில்லாத சுரங்கத் தொழிற்சாலைகள், சிமெண்ட் ஆலைகள், பஞ்சாலைகள் போன்ற இடங்களிலும்; ஹெச்ஐவி தொற்று, சர்க்கரை நோய், ஆஸ்துமா, புற்றுநோய், கோவிட் தொற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டு; நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, வயோதிகம், புகை பிடித்தல், கீமோதெரபி, ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்பவர்களையும் எளிதில் தாக்குகிறது.

கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான மனிதர்களைக் கொன்று குவித்திருக்கும் இந்தக் காசநோயால் இந்தியாவில் மட்டும் தினசரி 1300க்கும் அதிகமானவர்களும், ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பேரும் இறக்கிறார்கள் என்பதுடன் இதில் 10% வரை குழந்தைகளும் இருக்கலாம் என்கிறது புள்ளிவிவரம். அத்துடன் உலகின் ஐந்தில் ஒரு காசநோயாளர் இந்தியர் என்றும், இதில் ஒவ்வொருவரும் தனித்தனியே 10 - 15 பேர் வரை நோயைப் பரப்புகின்றனர் என்பதுடன், கோவிட் பெருந்தொற்றுக்குப் பின், MDR TB எனப்படும் இந்த பன்மருந்து எதிர்ப்பு காசநோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்திருப்பதும்; குணப்படுத்த, கட்டுப்படுத்தக் கூடிய இந்தக் ‘காசநோயை 2030க்குள் முற்றிலும் ஒழிப்போம்’ (End TB by 2030) எனும் நிலையை நாம் எட்டவே முடியாது என்ற உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சிகரத் தகவல்களால் காசநோய் இப்போது கவனம் பெற்றுள்ளது.

நமக்கெல்லாம் எதையும் தாங்கும் இதயம் உள்ளதோ இல்லையோ, இந்த டிபி நோய்க்குக் காரணமான ‘மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium tuberculosis) பாக்ட்ரீயாவுக்கு வெப்பம், குளிர், காற்று, அமிலத்தன்மை, கார்ப்புத்தன்மை என அனைத்தையும் தாங்கும் ஆற்றல் உள்ளதாலேயே, எளிதில் அதனை வெல்லமுடியாமல் இருக்கிறது என்றுகூறும் நுண்ணுயிரியலாளர்கள், இதற்கான பன்முனைத் தாக்குதல் நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கின்றனர்.

இரு வாரங்களுக்கும் மேலாக சளியுடன் கூடிய இருமல், ரத்தம் கலந்த சளி, மாலைநேரக் காய்ச்சல், திடீர் எடைக்குறைதல், ரத்த சோகை போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் முதல்கட்ட தடுப்பு நடவடிக்கையாக சளியில் இதற்கான கிருமிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுடன் ரத்தப் பரிசோதனைகள், மேன்ட்டூ (Mantoux) தோல் பரிசோதனை, எக்ஸ்-ரே அல்லது ஸ்கேனிங் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்படி காசநோய் கண்டறியப்பட்டால், நோயாளிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், DOTS எனப்படும் குறுகிய கால கூட்டுமருந்து சிகிச்சையை, மருத்துவ உதவியாளர்களின் கண்காணிப்புடன் தடையின்றி இலவசமாக வழங்குவதும்; அதேபோல பிறந்த குழந்தைக்கு காசநோயைத் தவிர்க்க உதவும் பி.சி.ஜி. தடுப்பூசி வழங்குவதும் போன்ற காசநோயைக் கட்டுப்படுத்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

உண்மையில், நமது நாட்டில் காசநோயை ஒழிக்க 1993ம் ஆண்டு முதலே இவற்றையெல்லாம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் RNTCP எனும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு அமைப்பு, இப்போது அந்த நோயின் முகம் மாறியிருப்பதுதான் பெரிய பிரச்னை என்று கூறுகிறது.ஆம். காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் உடனிருக்கும் ஆரோக்கியமான குடும்பத்தினருக்கும் இந்த நோய்த்தொற்று எளிதில் ஏற்படுகிறது என்றாலும், அது வெளியே எந்தவொரு அறிகுறியைக் காட்டாமலும் பாதிப்புகளை ஏற்படுத்தாமலும் உள்ளே பொறுமையுடன் தங்கியிருந்து (latent TB), அவர்கள் பலவீனமாகும்போது வெளிப்பட்டு தாக்குகிறது. அத்துடன் அவர்களை மரணம் வரை கொண்டு செல்வதால்தான், இன்றைய இந்த நிலைமையை ‘த சைலண்ட் பேண்டமிக்’ என்றே குறிப்பிடுகின்றனர் நுரையீரல் நிபுணர்கள்.

அதிலும் கொரோனா சமயத்தில் இந்த டிபி நோய் பரவுதல் சற்று குறைந்து காணப்பட்டது போன்றதொரு தோற்றத்தைத்தான் அளித்துள்ளது என்றுகூறும்
இந்நிபுணர்கள், உண்மையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நுரையீரல்களை வெகு எளிதாகவும், வேகமாகவும் டிபி கிருமிகள் தாக்கியதோடு, மற்றவர்களுக்கு பரவச்செய்து உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

‘‘காசநோயை இந்தியாவில் முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் உலகளவிலும் அந்த நோயை அகற்றமுடியாது...’’ என்பதுதான் நிதர்சனம் என்றிருக்க, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறதல்லவா..?அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன என்கிறது நமது தேசிய நோய்த் தடுப்பு அமைப்பு.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனிருந்து நோய்த் தொற்றுக்கு ஆளாகியும் வெளித்தெரியாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான புதிய காசநோயாளிகளைக் கண்டறியும் புதியதொரு முயற்சிக்கு ‘மிஸ்ஸிங் மில்லியன்ஸ்’ என்று பெயரிட்டு தேடிச்சென்று மருத்துவம் செய்யும்  முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் சளி பரிசோதனைக்கு பதிலாக, அதனைக்காட்டிலும் எளிதான, ஆனால், திறமிக்க விலையுயர்ந்த பரிசோதனை முறையான டிபி-நேட் (Nucleic Acid Amplification Test) முறையையும்; இக்ரோ முறையையும் மருத்துவர்கள் கையாள்வதுடன், அவ்வாறு கண்டறியப்படும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதுடன் அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கு, டிபிடி எனும் காசநோய் தடுப்பு சிகிச்சையை (TB Preventive Therapy) வழங்கியும் அந்த  நோயை வெளியே பரவாமல் கட்டுக்குள் வைக்கின்றனர்.

இந்திய அளவில் 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமலேயே இருக்கின்றனர் என்று கணக்கிட்டிருக்கும் மத்திய அரசு இந்த நோயைத் தடுக்க நாடு மொத்தமும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘இல்லம்தோறும் பரிசோதனை’ முறை.தமிழகத்தில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல் எண்ணிக்கை கோவிட் காரணமாக 2020ம் ஆண்டு சற்றே குறைந்தபோதும் (55%), சென்ற ஆண்டிலேயே 62%மாக அதிகரித்து, இப்போது பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதுடன், இல்லம்தோறும் செல்லும் நேரடி காசநோய் பரிசோதனைகளும் இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க இருக்கின்றன என்றுகூறும் காசநோய்க்கான மாநில இணை இயக்குனர், இவையனைத்தும் உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய வெளியீட்டிற்கு முன்பாகவே தமிழகத்தில் தொடங்கிவிட்டன என்றும், இந்தியாவிலேயே End TB எனும் நிலையை அடையும் முதல் மாநிலமாக தமிழகம்தான் இருக்கும் என்றும் புன்னகையுடன் கூறுகிறார்!

என்னதான் அரசு இத்தனை பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது என்றாலும், பொதுமக்களாகிய நாம் அனைவரும், காசநோய் பரவுதல் மற்றும் அதன் தடுப்புமுறைகளை அறிந்து செயல்படுவோமேயானால், புதிதாகப் புறப்பட்டு வரும் பழைய வில்லனை மட்டுமல்ல, எத்தனை புதிய வில்லன்கள் வந்தாலும் ஒன்றாக வெற்றிகொள்ள முடியும் என்பதே உண்மை!
தலைமுடி மற்றும் நகத்தைத் தவிர அனைத்து இடங்களையும் தாக்கும் இந்த காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் ‘End TB’ என்பது வெறும் வரிகளாக மட்டுமல்லாமல் நிகழ்வாகவும் இருக்க நாமும் இணைந்து செயல்படுவோம்.காசநோய் இல்லாத எதிர்காலத்தை வடிவமைப்போம்..!

 டாக்டர் சசித்ரா தாமோதரன்