Must Watch



த கோஸ்ட்

லாஜிக்கை மறந்து ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘த கோஸ்ட்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப்படம்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த கலவரத்தில் பத்து வயதே ஆன விக்ரமின் அம்மா கொல்லப்படுகிறாள். இறந்து போன அம்மாவின் அருகில் அமர்ந்திருக்கும் விக்ரமை ஒருவன் கொல்ல வரும்போது, அவனை துப்பாக்கியால் சுட்டு விக்ரமை காப்பாற்றுகிறார் கர்னல்.

விக்ரம் வளர்ந்து பெரியவனானதும் சர்வதேச போலீஸ் அதிகாரியாகிறான். துபாயில் இந்தியப் பணக்காரர் ஒருவரின் மகன் கடத்தப்படுகிறான். கடத்தல்காரர்களிடமிருந்து குழந்தையை மீட்கச் செல்கிறார் விக்ரம். கடத்தல்காரர்களைத் துவம்சம் செய்தாலும் குழந்தையை உயிருடன் விக்ரமால் மீட்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தால் குற்றஉணர்வுக்கு ஆளாகிறார் விக்ரம். அண்டர்வேர்ல்டு சாம்ராஜ்யத்தை கூண்டோடு அழிக்க கிளம்புகிறார் விக்ரம். தெறிக்கிறது ஆக்‌ஷன் திரைக்கதை. பழைய மசாலாவை வைத்து புது சுவையுடன் கொடுத்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகள் அப்ளாஸை அள்ளுகின்றன. விக்ரமாக ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார் நாகார்ஜுனா. படத்தின் இயக்குநர் பிரவீன் சட்டாரு.

எனோலா ஹோம்ஸ் 2

இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘எனோலா ஹோம்ஸ்’ என்ற ஆங்கிலப்படம் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதன் அடுத்த பாகமான ‘எனோலா ஹோம்ஸ் 2’வும் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி டிரெண்டாகிவிட்டது.ஷெர்லாக் ஹோம்ஸின் சகோதரிதான் எனோலா ஹோம்ஸ். சகோதரனைப் போலவே துப்பறிவதில் திறமைசாலி. எனோலா ஹோம்ஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்னும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறாள் எனோலா. அவள் அலுவலகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஷெர்லாக்கின் உதவியையே கேட்கின்றனர்.

பெண்ணுக்குத் துப்பறியும் வேலையெல்லாம் சரிப்பட்டு வராது; ஒரு பெண்ணால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாது என்று எனோலாவை விமர்சனம் வேறு செய்கின்றனர். ஒரு வாடிக்கையாளர் கூட கிடைக்காமல் திணறுகிறாள் எனோலா. அலுவலகத்தை மூடிவிடலாம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.அப்போது பெஸ்ஸி என்ற சிறுமி  காணாமல் போன தனது சகோதரியைக் கண்டிபிடிப்பதற்காக எனோலாவின் உதவியை நாடி வருகிறாள்.  உற்சாகமடையும் எனோலா எப்படி தனது துப்பறியும் திறமையை நிரூபிக்கிறாள் என்பதே திரைக்கதை.

ஒரு துப்பறியும் கதை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு சமீபத்திய உதாரணமாகத் திகழ்கிறது இப்படம். எனோலா ஹோம்ஸாக கலக்கியிருக்கிறார் மில்லி பாபி பிரவுன். படத்தின் இயக்குநர் ஹாரி பிராட்பீர்.   

த ரவுண்ட் அப்

இந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த தென் கொரியப் படங்களில் முதலிடத்தில் இருக்கிறது ‘த ரவுண்ட் அப்’.  ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. தென் கொரியாவிலேயே திறமையான டிடெக்டிவ் போலீஸ் மாசியோ. ஒரு கடையில் திருடன் புகுந்து அட்டூழியம் செய்யும்போது அசால்ட்டாக திருடனைப் பிடிக்கும் மாசியோ, கொலைகாரனையும் சுலபமாக தன் வலைக்குள் வீழ்த்துகிறார். அவரது திறமை வியட்நாம் வரை பரவுகிறது.

ஒரு வழக்கு சம்பந்தமாக வியட்நாமுக்குச் செல்கிறார் மாசியோ. அவருடன் கேப்டன் ஒருவரும் செல்கிறார். இருவரும் வியட்நாமிற்கு வருகை தரும் நிறைய கொரியன்களை சந்திக்கின்றனர்.
வியட்நாமிற்குச் சுற்றுலா வரும் கொரியன்கள் கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்துக்கொண்டே செல்வதை மாசியோ அறிகிறார். தன் நாட்டு மக்களைக் கொலை செய்யும் குற்றவாளியை மாசியோ எப்படி பிடிக்கிறார் என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை.

அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்கிற ஆவலை கிளைமேக்ஸ் வரை தக்க வைத்திருக்கிறது திரைக்கதை. 2008 முதல் 2012 வரை பிலிப்பைன்ஸில் கொரியன் இராணுவ வீரர்கள் கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் நடந்திருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து இயக்குநர் லீ சங் யங் இயக்கியிருக்
கிறார்.  

டுவென்டிஒன் கிராம்ஸ்

திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை அள்ளிய மலையாளப்படம், ‘டுவென்டிஒன் கிராம்ஸ்’. ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. மகள் இறந்த துக்கத்தில் இருக்கிறார் டிஎஸ்பி நந்தகிஷோர். மகள் இறந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள் நந்தாவின் மனைவி. இந்தச் சம்பவத்தால் மேலும் உடைந்துபோகிறார் நந்தா.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அடுத்த நாளில் அந்த இளம்பெண்ணின் அண்ணனும் கொல்லப்படுகிறார். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு நந்தாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்னைகளால் தடுமாறுகிறார் நந்தா. ஆனால், கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கிறது. முழுமூச்சுடன் களத்தில் இறங்கும் நந்தா, எப்படி கொலைகாரனைக் கண்டுபிடிக்கிறார் என்பதே திரைக்கதை.

ஒரு திரில்லிங் கதையை எடுத்துக்கொண்டு, பின்னணியில் சமூகத்தில் நடக்கும் முக்கியமான அவலத்தை வெளிக்கொண்டு வந்திருப்பது இந்தப் படத்தின் சிறப்பு. கதையை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல பக்கபலமாக நிற்கிறது பின்னணி இசை.நந்தாவாக அனூப் மேனன் கச்சிதம். படத்தின் இயக்குநர் பிபின் கிருஷ்ணா.

தொகுப்பு: த.சக்திவேல்