மழைக்காலத்தில் குழந்தைகள்...எச்சரிக்கை!



சில்லென்ற காற்று, குளிர்ச்சியான சூழல் தரும் மழைக்காலம்தான் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களையும் தருகிறது. இந்த நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அவர்களைக் காக்க என்ன செய்யலாம்?முதலில் அடிக்கடி தண்ணீர் கொடுங்கள்.
பொதுவாக மழைக்காலங்களில் அதிக தாகம் எடுக்காது. இதனால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்காவிட்டால், அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கட்டாயப்படுத்தியாவது அடிக்கடி காய்ச்சிய தண்ணீரை குடிக்க வையுங்கள். கொதிக்கவைத்த தண்ணீரை பாட்டிலில் கொடுத்து வெளியிடங்களுக்கு அனுப்புங்கள்.

அடுத்து, கொசுக்களால் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் என்பதால் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அழுக்குத் துணிகளை வீட்டில் சேர்த்து வைக்காமல் இருத்தல், குப்பை கூளங்களை உடனடியாக அப்புறப்படுத்துதல் ஆகியவை அவசியம். மூன்றாவது, பழங்கள்.

மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என நினைத்து அவர்களுக்கு பழங்களைக் கொடுக்காமல் தவிர்க்காதீர்கள். வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்களின் சாறுகள் மற்றும் பால் ஆகியவற்றை குழந்தைகளுக்கு அதிகம் வழங்கவேண்டும். தினமும் அவர்களுக்கு வழங்கும் உணவுகளில் இஞ்சி, பூண்டு, துளசி ஆகியவற்றை சிறிதளவாவது கலந்து கொடுக்க வேண்டும்.

நான்காவதாக, மழை நின்றபிறகு அல்லது மழை வராமல் இருக்கும்போது வெளியில் விளையாடச் செல்லும் குழந்தைகளின் உடலை முழுமையாக மூடும்படி ஆடைகளை அணிவித்து அனுப்புங்கள். முக்கியமாக வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாடி முடித்து வந்ததும் வெந்நீரில் அவர்களைக் குளிக்க வைப்பது நல்லது.

ஐந்தாவதாக, மழைக்காலம் என்றில்லை எப்பொழுதுமே சாலையோர உணவுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள். சூடாக சாப்பிட குழந்தை விரும்பினால் வீட்டிலேயே பஜ்ஜி, போண்டா, பக்கோடா ஆகியவற்றை தயாரித்து கொடுங்கள்.  இறுதியாக, குழந்தைகள் அணியும் உடைகளில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு குளிரக் கூடாது என்பதற்காக ஒருசில பெற்றோர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடைகளை அவர்களுக்கு அணிவித்து அதற்கு மேல் ஸ்வெட்டர்களையும் போடுவார்கள்.

இது தவறு. அளவுக்கு அதிகமான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அவர்கள் உடல் அதிக சூடாகி வியர்வை வரும். அதிக வியர்வை வருவதாலும் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் கதகதப்பான ஏதாவது ஒரு ஆடையை மட்டும் அவர்களுக்கு அணிவிப்பது நல்லது.

என். ஆனந்தி