சமந்தாவுக்கு என்ன பிரச்னை..?



சாப்பிட மறக்கிறாரோ இல்லையோ... தூங்க மறக்கிறாரோ இல்லையோ... சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் தட்டிவிட மட்டும் சமந்தா மறப்பதேயில்லை.அப்படிப்பட்டவர் கடந்த சில மாதங்களாகவே சோஷியல் மீடியாவில் மிஸ்ஸிங்.
அதுமட்டுமல்ல... படங்களில் அவர் நடித்து வருவதாகவும் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதாகவும் கூட செய்திகள் கசியவில்லை.போதாதா? சமந்தாவுக்கு என்ன ஆச்சு... என கோலிவுட், டோலிவுட்டில் கேட்கத் தொடங்கிவிட்டனர். அவருக்கு இந்தப் பிரச்னை... அந்தப் பிரச்னை... யெஸ்... யெஸ்... சருமப் பிரச்னை... சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றிருக்கிறார்... என்றெல்லாம் வதந்திகள் எட்டுத் திக்கும் பரவின.

இந்தச் சூழலில்தான் கடந்த வாரம் தன் இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்...‘‘‘யசோதா’ படத்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் காட்டிய வரவேற்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகம். இந்த அன்பும் உறவும்தான் என்னை உங்களோடு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வைத்திருக்கிறது.சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ‘ஆட்டோ இம்யூன்’ பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பிரச்னையை ‘மயோசிடிஸ்’ என்பார்கள். எனக்கு உண்டான பிரச்னை ஓரளவுக்கு குறைந்த பின்னரே அதைப் பற்றி இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு மயோசிடிஸ் பிரச்னை இருக்கிறது; சிகிச்சைக்குப் பிறகு சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், நினைத்ததைவிட மயோசிடிஸ் பிரச்னை இழுத்துக் கொண்டே போகிறது. மீண்டு வர நாட்களாகும். ஆனால், இதிலிருந்து நான் மீண்டு வந்துவிடுவேன் என மருத்துவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நல்ல நாட்கள் இருந்திருக்கின்றன. அதேபோல் மோசமான நாட்களும் கடந்திருக்கின்றன. இதெல்லாம் கடந்து விட முடியுமா என்று யோசித்தபோது அவை கடந்து போயிருக்கின்றன.

இப்போது ஆட்டோ இம்யூன் பிரச்னையிலிருந்து மீண்டு வர நாட்கள் நெருங்கிவிட்டது என நம்புகிறேன். உங்கள் எல்லோரையும் நான் மனமார நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்...’’
அந்த ஸ்டேட்டஸில் பதிவேற்றிய புகைப்படத்திலும் கூட சமந்தா தனது முகத்தைக் காட்டவில்லை. டப்பிங் பேசிக் கொண்டிருப்பவருக்கு சலைன் வேறு ஏறிக்கொண்டிருந்தது.
அந்தளவுக்கு பிரச்னையா என்று கோலிவுட்டை விட டோலிவுட் பதறிப் போயிருக்கிறது.சமந்தாவுக்கு மயோசிடிஸ் பிரச்னை வர என்ன காரணம்?

பொதுவாகவே ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்பவர்களுக்கு இப்பிரச்னை வரக்கூடும் என்கிறார்கள். அதாவது தொடர்ந்து வொர்க் அவுட் செய்பவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு அவசியமான அம்சங்களையும் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் மயோசிடிஸ் பிரச்னை வரலாம்.அடுத்து அதிகப்படியான மது மற்றும் போதை ஆகியவற்றாலும் கூட இப்பிரச்னை வர வாய்ப்புகள் உள்ளன. அதாவது அளவுக்கு அதிகமாக மது குடித்தாலோ, போதை ஏற்றிக்கொண்டாலோ ஆட்டோ இம்யூன் நிலை உண்டாகலாம் என மருத்துவ இதழ்கள் கூறுகின்றன.இப்படி காரணங்கள் சொல்லப்பட, சமந்தா விஷயத்தில் வொர்க் அவுட்டினால் ஆட்டோ இம்யூன் பிரச்னை உண்டாகியிருக்கக் கூடும் என்கிறார்கள்.

வொர்க் அவுட்டின்போது பல கிலோ எடையுள்ள டெட்லிஃப்ட்களை அசால்ட்டாக தூக்குவதை வழக்கமாக வைத்திருந்தார் சமந்தா.அதே நேரம் விவாகரத்து அவரை ரொம்பவே பாதித்திருக்கிறது என்கிறது அவருக்கு நெருங்கிய நட்பு வட்டம். இதனால் மன உளைச்சலில் சமந்தா இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.

மற்றொரு பக்கம், இப்போது வெளியாக உள்ள ‘யசோதா’ படத்துக்காக அட்ரினலினை சுரக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்ததும், வருண் தவானுடன் நடிக்கும் வெப் சீரிஸுக்காக சண்டைக் காட்சிகளில் ரொம்பவே மெனக்கெட்டதும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

வொர்க் அவுட், ஆக்‌ஷன் காட்சிகளுக்கான ஷூட் என பிஸியாக இருந்த போது சமந்தாவுக்கு தசை பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதை சரியாக கவனிக்காமல் விட்டிருந்தால் கூட இப்படி தசைகள் செயலிழக்கும் வாய்ப்புகள் அதிகம்.சமந்தாவுக்கு மட்டும்தான் இந்த ஆட்டோ இம்யூன் பிரச்னையா என்றால், மருத்துவர்கள் ஒரு பட்டியலை நீட்டுகிறார்கள்.

பிரபல பாடகி செலேனா கோமெஸ், ஜிஜி ஹேடிட், லேடி காகா, நிக் ஜோனாஸ், சல்மான் கான்... என இந்தப் பட்டியல் நீள்கிறது.பதற வைக்கும் ஆட்டோ இம்யூன் பிரச்னையான மயோசிடிஸ் என்றால் என்ன?நம்முடைய உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஒருவேளை இன்ஃபெக்‌ஷனானால் மயோசிடிஸ் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சமந்தாவுக்கு பாதிப்பை உண்டாக்கியிருக்கும் மயோசிடிஸ் கீழ்க்கண்ட இரண்டு வகைகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்பது டாக்டர்களின் கணிப்பு.முதலாவது வகை பாலிமயோசிடிஸ்.நம்முடைய உடலில் இருக்கும் பல்வேறு வகையான தசைகள் இந்த பாலிமயோசிடிஸினால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தொடை, இடுப்பு, தோள் பகுதியில் இருக்கும் தசைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. பெண்களுக்கு இந்த பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. 30 முதல் 60 வயதுடையவர்களுக்கு இப்பிரச்னை அதிகம் வர வாய்ப்புகள் இருக்கின்றன.

தசைகளில் வலி, தசை வலுவிழந்து போவது, உட்காருவதில் சிரமம், உணவை விழுங்குவதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் எழலாம்.இரண்டாவதாக டெர்மடோமயோசிடிஸ்.இந்தப் பிரச்னையால் உடலில் தடிப்புகள் உண்டாகலாம். பொதுவாக பெண்களை இப்பிரச்னை வெகுவாகத் தாக்கும். சில நேரங்களில் குழந்தைகளையும் கூட இது பாதிக்கக்கூடும்.

இதன் அறிகுறிகள் பாலிமயோசிடிஸ் போன்று இருந்தாலும், சருமத்தையும் இது பாதிக்கக்கூடும். தசையில் வலி உண்டாவதற்கு முன்பாக, சிவப்பு, பர்ப்பிள், கருப்பு நிற தடிப்புகள் வரலாம். கன்னம், மூக்கு, இமைகளில் தடிப்புகள் உருவாகும். அதேபோல் முழங்கால் மூட்டு, மார்பின் மேற்பகுதி, இடுப்பு பகுதிகளில் இவை வரக்கூடும். இந்த தடிப்புகள் பார்ப்பதற்கு உகந்ததாக இருக்காது.

கூடவே அரிப்பும் இருக்கும்.இப்படியொரு கடினமான சூழலில் சமந்தா இருக்கும் போது அவருக்கு ஆதரவாக, மீண்டுவர தெலுங்கு நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் தங்களது அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.ஆனால், அவரது முன்னாள் கணவர் நாகசைதன்யாவோ அல்லது முன்னாள் மாமனார் நாகார்ஜுனாவோ இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை; ஆறுதலும் கூறவில்லை.வாழ்க்கையில் எண்ணற்ற புயல்களைக் கடந்தவர் சமந்தா. அந்தளவுக்கு மன உறுதி மிக்கவர். அப்படிப்பட்டவர் இதிலிருந்தும் மீண்டு வருவார்.

ஜான்சி