வடிந்த வெள்ளம்... மகிழ்ந்த மக்கள்!



சென்னை வெள்ள நீர் தடுப்பில் தமிழக அரசு சிறப்பாகப் பணியாற்றிய விதத்தை விவரிக்கிறார் நீரியல் மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மை நிபுணரான டாக்டர் சக்திவேல் பீமராஜா

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியவுடனே கலங்கிவிடுவார்கள் சென்னை மக்கள். ஏனெனில், 2015ல் ஏற்பட்ட பெரும்வெள்ளம் அவர்களை இந்த மனநிலைக்குத் தள்ளிவிட்டது. தவிர, கடந்த ஆண்டு தெருக்களிலும், சாலைகளிலும் தேங்கிய மழைநீரால் பெரும் மனச்சுமைக்கு ஆளாயினர்.
இந்த ஆண்டு முதல்கட்டத்திலேயே சுமார் 20 செமீ மழைப்பொழிவைக் கொட்டி சென்னைவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது இயற்கை. ஆனால், கடந்த ஆண்டு போலில்லாமல் இந்த ஆண்டு சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. தேங்கிய இடங்களில் கூட விரைவாக நீர் வடிந்திருக்கிறது. வேகமாக மழைநீரை வெளியேற்றியும் இருக்கின்றனர் சென்னை பெருநகர மாநகராட்சிப் பணியாளர்கள்.

காரணம், தமிழக அரசு எடுத்த முன்நடவடிக்கைகள். வடசென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது உண்மைதான். இதனை துரிதமாகச் செயல்பட்டு தேங்கிய தண்ணீரை வேகமாக அகற்றி பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது சென்னை பெருநகர மாநகராட்சி. கடந்த ஆண்டு பல இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னை வெள்ளக்காடானது. அப்போது தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழுவை அமைத்தது. அந்தக் குழு கடந்த ஜனவரி மாதம் ஓர் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், புறநகர்ப்பகுதிகளில் வடிகால்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், மழைநீர் வடிகால்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டுமெனவும், வீடுகளில் மழைநீர் கட்டமைப்புகள் செய்யப்பட வேண்டும் என்றும், அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆகிய ஆறுகளிலும், பக்கிங்ஹாம் கால்வாயிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆண்டுதோறும் வடிகால்களை முறையான வகைகளில் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்றும் அரசுக்குப் பரிந்துரைத்தது.

இதனை வேகமாகச் செயல்படுத்த உத்தரவிட்டது தமிழக அரசு. அதன் ஒருபகுதியாக மழைநீர் வடிகால் பணிகள் சென்னை முழுவதும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த எட்டு மாதங்களாக நடந்த பணிகளின் விளைவுதான் இன்று பல இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருந்ததற்குக் காரணம்.  இதுகுறித்து நீரியல் மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மை நிபுணரான டாக்டர் சக்திவேல் பீமராஜாவிடம் பேசினோம். ‘‘முதல்ல சென்னையின் நிலஅமைப்பு பற்றி சொல்லிவிடுகிறேன். இப்ப சென்னை மாநகராட்சி ஏரியா மட்டும் 426 சதுர கிமீ அளவுல இருக்கு. சென்னை மாநகர பரப்புனு பார்த்தால் 1189 சதுர கிமீ வரும். அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு அடங்கிய பகுதிகள்.

சென்னை நகருக்குள் கொசஸ்தலை, கூவம், அடையாறுனு மூன்று ஆறுகள் ஓடுது. இதுதவிர நகரி, நந்தி, ஆரணினு மூன்று ஆறுகள் புறநகர்ப் பகுதிகள்ல தொடங்கி மேற்சொன்ன சென்னையின் ஆறுகள்ல முடிவடையுது. இவை அனைத்தும் வடிநிலப் பகுதிகள். இதனுடன் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளும், பூண்டி நீர்த்தேக்கமும் இருக்குது. இவ்வளவு இருந்தும் ஏன் மழைநீர் தேங்குது? முதல் காரணம், சென்னையின் நிலப்பரப்பு சமதளமானது. சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 மீ முதல் 2 மீ வரையே உயரம் கொண்டது. அதேநேரம், 940 குளங்களைக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டமும், 1890 குளங்கள் கொண்ட திருவள்ளூர் மாவட்டமும் கடல் மட்டத்தில் இருந்து 14 மீ முதல் 25 மீ உயரத்தில் இருக்கு.

அதனால, அங்கிருந்து வெளியேறும் மழைநீர் முழுவதும் சென்னை வழியாகச் செல்லும் மூன்று ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் மூலம் கடல்ல கலக்கணும். அப்ப மழைக்காலங்கள்ல சென்னை நகருக்குள் அதிகப்படியான வெள்ளம் ஏற்படுது. அடுத்து, கடல் அலைகள்ல உயர் அலை, குறைந்த அலைனு ரெண்டு இருக்கு.

பொதுவாக காற்றழுத்த தாழ்வு, புயல்கள் உருவாகும்போது கடல்நீர் மட்டம் அதிகரிக்கும். அந்நேரம் உயர் அலைகள் உருவாகும். அப்போது சென்னை நகர்ல சேர்கிற மழைப்பொழிவு வெள்ள நீர் கடல் உள்ளே போக இயலாது. உயர் அலைகள் தணிந்தபிறகே உள்புகும். அதனாலேயே, மழைநீர் வடிய வழியில்லாமல் தெருக்கள், சுரங்கங்கள், சாலைகள்ல தேங்கி, பிறகு வடிகிறது.  

கடந்த காலங்கள்ல சென்னையில் நிறைய ஏரிகளும், குளங்களும் இருந்தன. பருவமழை பொழிவின்போது இவை வடிநிலப் பகுதிகளாக செயல்பட்டன. அப்போது மக்கள்தொகையும் குறைவு. ஆனா, இப்போது மக்கள்தொகை பெருக்கத்தால் கட்டடங்கள் பெருகிடுச்சு. நீர்நிலைகள் குறைஞ்சு போச்சு. எல்லாமே காங்கிரீட்டாக மாறிவிட்டதால் மழைநீர் நிலத்தில் உட்புகும் இடங்களும் குறைஞ்சிடுச்சு. நீர்ப்பிடிப்புப்பகுதியின் தன்மையும் பாழ்பட்டுவிட்டன.

உதாரணத்துக்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 5 ஆயிரம் ஹெக்டேர் இருந்திருக்கு. இந்த சதுப்பு நிலம் மழைநீரை அதிகளவு தக்க வைக்கும் தன்மை கொண்டது. சென்னைக்குக் கிடைத்த வரப்பிரசாதம் இது. இன்னைக்கு அறுநூறு ஹெக்டேராக சுருங்கிப்போச்சு. இவையெல்லாம் மழைநீர் தேங்க குறிப்பிடத்தக்க வேறுகாரணங்களாகும்.

அப்புறம் ஏரிகளின் நீர் வரத்து கால்வாய், போக்கு கால்வாய் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. கடைசியாக காலநிலை மாற்றம். முன்னாடி வடகிழக்குப் பருவமழை அக்டோபர்ல தொடங்கி டிசம்பர் வரை இருக்கும். சராசரியா 45 நாட்கள் மழை விட்டு விட்டு பெய்யும். ஆனா, இன்னைக்கு காலநிலை மாற்றத்தால் 10 நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஒரு நாள்ல ஒரு மணி நேரத்துல கொட்டித் தீர்த்திடுது. அதனால, வெள்ள நீர் வடிய நேரமாகுது.  

இப்ப தமிழக அரசு, மீட்டெடுக்கும் பணியைத் துரிதப்படுத்தி ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்டெடுத்து வருகிறது. முன்னாடி நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, சுற்றுச்சுழல் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை எல்லாம் தனித்தனியாக பணிகள் செய்தாங்க. இப்ப இந்தத் துறைகள் எல்லாம் ஒருங்கிணைந்து சென்னை மாநகராட்சியுடன் கைகோர் த்து வெள்ள நீர் மேலாண்மைக்கான பணிகளை முன்னெடுக்கிறாங்க.

இந்த நல்ல முயற்சியின் பலன்தான் முதல்கட்ட மழைக்கு பல இடங்கள்ல நீர் தேங்காமல் இருந்தது...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.  ‘‘இன்னைக்கு அரசு மூணு கட்ட விஷயங்களை முன்னிறுத்தி பணிகளை மேற்கொண்டு வர்றாங்க. முதல்ல வெள்ள நீர் பாதுகாப்பு.

இதன்படி குளங்கள் மற்றும் ஏரிகளின் சூழலை மறுசீரமைப்பு செய்றதும், நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துறதும், இதன்வழியாக நிலத்தடி நீரை அதிகரிப்பதும், புதிய நீர்நிலைகளை உருவாக்குறதும், இருக்கிற கால்வாய்களை தூர்வாரி இணைப்பதுமாக செயல்படுத்தப்படுது. அப்ப வெள்ள நீர் தெருக்களிலோ சாலைகளிலோ தேங்காமல், அதிகப்படியாகக் கடலில் கலக்காமல் பாதுகாக்கப்படும்.  

இரண்டாவது, காலநிலை தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்றாங்க. அதாவது, காலநிலை மாற்ற விளைவுகளைத்  தாங்கும் வகையில் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு வளம் குன்றா காலநிலை மாற்ற விரிதிறன் (Sustainable climate change resilience), சிறந்த நீர் மேலாண்மையினை (Smart water management) உருவாக்க நடவடிக்கைகள் எடுத்திட்டு இருக்காங்க.

இன்னும் ரெண்டு ஆண்டுகள்ல இதற்கான பணிகளும் நிறைவடையும். அதன்பிறகு காலநிலை மாற்றத்தால் வெள்ளநீர் அதிகரித்தாலும் அதைத் தாங்கும் நகராக மாறும். உலகளவில் வெள்ள மேலாண்மையில் வளர்ந்த நகரங்கள்ல ஒன்றாக சென்னை மாநகர் மிளிரும். மூன்றாவதாக, நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணிகளை செய்றாங்க. இதுல ஓடைகள், வடிகால்களை மேம்படுத்துறதும், புதிய கால்வாய்களை உருவாக்குறதும், வடிகால் அமைக்கிறதும், ஆறுகள், கால்வாய்களை அகலப்படுத்துறதுமான பணிகள் செய்யப்பட்டு வருது.

இப்போதைக்கு பல பணிகளைப் போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி முன்னெடுத்து செய்திருக்காங்க. திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையிலான வெள்ளத் தடுப்புக் குழுவின் ஒத்துழைப்பாலும், வழிகாட்டுதலிலும் சிறப்பா செய்ய முடிஞ்சிருக்கு. இருந்தும் தண்ணீர் ஒன்றரை அடி முதல் 3 அடி வரை தேங்குது. அதுவும் இரண்டு நாட்கள்ல வடிஞ்சிடும். ஆனா, வெள்ளமே வராதுனு சொல்ல முடியாது. இப்போதைக்கு நாம் அதிகப்படியான சேதாரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கோம். மழை நின்று ஒன்றோ அல்லது இரண்டு மணி நேரத்திலோ மழைநீர் வடிந்தாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான்.

இப்போதைய அரசு நிர்வாக அமைப்பில் மழைநீர் வெள்ள வடிகால் உள்கட்டமைப்பை நிர்மாணிக்கும் மேலாண்மையில் நடப்பு நிதியாண்டில் சிங்காரச் சென்னை திட்டப்பணிகள் மற்றும் பெருநகர உள்கட்டமைப்பு மழைநீர் வடிகால் கடடுமானப் பணிகளில் பெரும்பான்மையான பணிகளை நிறைவேற்றி உள்ளனர். கூவம் ஆற்றில் உலக வங்கி நிதியுடன் மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்படுது. கோவளம் வடிநிலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இன்னும் நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கு.

குறிப்பாக, வடசென்னை வசிப்பிட மக்களின் தீர்வுக்கென கொசஸ்தலை ஆற்றில் மழைநீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்க, நவீன அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியில், சிறந்த வடிவமைப்புடன் பொறியியல் உள்கட்டமைப்பு பணிகள் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் மேலாண்மைப் பணிகளாக நடந்து வருகின்றன.

வரும் 2024 - 2025ம் ஆண்டுக்குள் மேற்குறித்த அனைத்துப் பணிகளும் நிறைவுபெறும். பிறகு சென்னை பெருநகரம் மழைநீர் வடிகால் மேலாண்மையில் இந்தியாவில் சிறந்த நகரமாக உருவாகும்.   

நம்மால் நகர்ப்புற வெள்ளத்தைத் தடுக்க முடியாது. அதனை மேலாண்மை மட்டுமே செய்ய முடியும். அதனால், சென்னையைப் பொறுத்தவரை மழை பெய்தால் மழைநீர் தேங்கி நின்றே வெளியேறும். இதனை சென்னை மக்கள் புரிஞ்சுக்கணும்.

அப்புறம் மக்களும் அரசு முன்னெடுக்கும் இந்த மகத்தான பணியில் பங்களிப்பு செய்யணும். குறிப்பாக, மழைநீர் வடிகால்கள்ல குப்பை கொட்டக்கூடாது. அதனுடன் கழிவுநீர் கலக்க அனுமதிக்கக் கூடாது. மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை கண்காணிப்புடன் பாதுகாப்பான வழிகளில் தூர்வாரி பராமரிக்கணும்.

சிங்கப்பூர், பர்மா, ஹாங்காங், வியட்நாம் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே இன்னைக்கு நாம் சந்திக்கிற பிரச்னையை சந்திச்சாங்க. அப்ப அதிலிருந்து மீள பல்வேறு உள்கட்டமைப்பு உருவாக்கும் திட்டப் பணிகளை மக்களின் பங்களிப்புடன் முன்னெடுத்தாங்க. அதனால இப்பவரை வெற்றிகரமாக செயல்படுத்திட்டு வர்றாங்க. நாமும் அதேபோல முன்னெடுக்கும்போது நீடித்த வெற்றி கிடைக்கும்...’’ என்கிறார் டாக்டர் சக்திவேல் பீமராஜா.

பேராச்சி கண்ணன்