தமிழுக்கு ஒரு திரைக்கதை... மலையாளத்துக்கு ஒரு ஸ்கிரிப்ட்... ஆனா, ஒரே நேரத்துல ரிலீஸ்!



‘‘ஒரு பொண்ண கண்டுபிடிக்கணும்... எங்க போனா... என்ன ஆனான்னு தெரியலை... அங்க அப்படி ஒரு பொண்ணு இருந்ததுக்கான தடயமே இல்லையே...’’இப்படி டீஸரிலே பலவாறு நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து, ஆர்வத்தைத் தூண்டுகிறது ‘யூகி’ திரைப்பட டீஸர். ‘‘இந்தப் படம் மூலமா பிரதாப் போத்தன் சார் கூட சேர்ந்து வேலை செய்கிற பாக்கியம் கிடைச்சது. லெஜெண்டரி நடிகர் மற்றும் இயக்குநர். ஆனால், எங்கேயும் அவருடைய தலையீடு இல்ல.

நானே எதாவது சார் சொல்வாரா... மாத்தணும்னு கேட்பாரான்னு நினைச்சேன். இல்லவே இல்ல. நிறைய அவர்கிட்ட கத்துக்க நினைச்சேன்... ஆனா...’’ முதல் படம் முழுமையாகி வெளியாகப் போகும் மகிழ்ச்சியிலும், பிரதாப் போத்தனின் மறைவை இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாதவராகவும் இருக்கிறார் இயக்குநர் ஜாக் ஹாரிஸ். இயக்குநராக முதல் படம் கடந்து வந்த பாதை எப்படி இருக்கு?

இப்போ யோசிக்கும் போது காத்திருந்தது வீண் போகலைன்னு தோணுது. கேரளா, திரிச்சூர்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயதில் இருந்தே சினிமா மேலே காதல். அதற்காகவே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து படிச்சேன். கொஞ்ச நாள் வேலை கூட செய்தேன். மலையாளத்தில் முதல் படம் ஆண்டனி வர்கீஸ் கூட ‘தேவ் ஃபாகிர்’ படம் செய்ய வேண்டியது. ஆனால், கொரோனா, ஊரடங்குன்னு அந்தக் கனவு கனவாவே போயிடுச்சு. அடுத்து நானும் என் நண்பரும் சேர்ந்து விளம்பரப் படங்கள் எல்லாம் செய்துட்டு இருந்தோம்.  சில படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராகவும் வேலை செய்துட்டு இருந்தேன்.

அப்பதான் நண்பர் பாக்கிராஜ் - என் கூட இன்ஸ்டிடியூட்டில் ஒண்ணா படிச்சவர் - எழுதியிருந்த ஒரு கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அந்த கதைக்கு திரைக்கதை எழுதினேன் அதுதான் ‘யூகி’. கதைக்களம் என்ன? ஆரம்பத்தில் இந்த படத்துக்கு வைச்ச பெயர் ‘கெஸ்’. ஏன் தலைப்பு தமிழிலேயே வைக்கக் கூடாதுன்னு யோசிச்சோம்... அதுதான் ‘யூகி’. தவிர ‘யூகி’னா புத்திசாலி என்கிற பொருளும் வருது.

படம் முழுக்க கேரக்டர்கள் ஒவ்வொண்ணும் யூகிச்சுதான் ஒவ்வொரு முடிச்சா அவிழ்ப்பாங்க. பரபர திரில்லரான கதைக் களம்தான் இந்த படம். ஒரு பெண்ணுக்கான தேடல்... அதை பல கோணத்தில் தேடுறாங்க... ஏன் எதுக்கு அப்படிங்கறதுதான் கதை. கதிர், நரேன், நட்டி நட்ராஜ்... நடிப்பிற்காகவே பெயர் போன மூவரையும் ஒரே படத்தில் அடக்கி இருக்கிறீர்களே?

இவங்க மூணு பேர்தான் முக்கிய ரோல்.

‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்தப்பவே கதிர் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அப்படிதான் நரேன் மற்றும் நட்டி சாருடைய நடிப்பும் ரொம்ப வித்தியாசமா உணர்ந்தேன். இவங்க மூணு பேரும் ஒரே படத்துல நடிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். இந்தக் கதைக்கும் அவங்க மூணு பேருமே செட் ஆனாங்க.

படு டெடிகேஷனான நடிகர்கள். இவங்க இல்லாம இதுவரையிலும் பார்த்திராத கோணத்தில் நடிகை ஆனந்தியை பார்க்கலாம். அதேபோல இதற்கு முன்னாடி பவித்ரா லட்சுமியை ‘நாய் சேகர்’ படத்தில் ஜாலி , பியூட்டி, யங் கேர்ளா பார்த்திருப்பீங்க. இந்தப் படத்துல ரொம்ப முக்கியமான ரோல் பண்ணியிருக்காங்க.

வினோதினி மேம், முனிஸ் காந்த், ஜான் விஜய் எல்லாருமே கொஞ்ச சீன்கள் வந்தாலும் பிராமிசிங் ரோல் செய்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேலே ஆரம்பத்தில் சொன்னது போல் பிரதாப் போத்தன் சாருக்கு ரொம்ப முக்கியமான ஒரு ரோல். முன்னாடியே அவர் போர்ஷன்களை முடிச்சிட்டோம். இப்படி திடீர்ன்னு நம்மளை விட்டு போவார்ன்னு நினைக்கவே இல்ல.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி சொல்லுங்க..?

‘ஜோசப்’, ‘நைட் டிரைவ்’... உள்ளிட்ட பல வித்தியாசமான மலையாளப் படங்களுக்கு மியூசிக் செய்த ரஞ்சின் ராஜ்தான் இந்தப் படத்திற்கும் இசை. இந்தப் படத்துல இரண்டு பாடல்கள். இரண்டுமே கதையின் ஓட்டத்திற்கு உதவியா இருக்கும். பேக்ரவுண்ட் ஸ்கோர், டான் வின்சென்ட். இந்தப் படம் தமிழ், மலையாளம் இப்படி இரண்டு மொழிகளிலும் உருவாகியிருக்கிறதால தமிழ்ல பாடல்களுக்கு வரிகள் கபிலன்.

புஷ்பராஜ் சந்தோஷ் சினிமாட்டோகிராபி. எடிட்டிங் ஜாமின். இதற்கு முன்னாடி இவர் ‘டிக்கிலோனா’ படம் செய்திருக்கார், என்னுடைய நண்பர். தமிழ் வசனங்களை ராமலிங்கம் எழுதியிருக்கார். ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி படத்திற்கு கதை பாக்கிராஜ். 11:11 புரொடக்‌ஷன்ஸ் பிரபு திலக் இந்தப் படத்தை தயாரிச்சிருக்கார்.

‘யூகி’ படத்திற்கு என்ன எதிர்பார்த்து வரலாம்?

பாக்கிராஜ் இந்தக் கதையை என்கிட்ட கொடுக்கும் பொழுதே இதுக்கு இப்படி ஸ்கிரீன்ப்ளே எழுதினால் ரொம்ப நல்லா இருக்கும்ன்னு சொன்னேன். அவருக்கு என் மேல ஒரு பெரிய நம்பிக்கை. ரெண்டு பேருடைய எண்ண ஓட்டங்களும் சரியா இருந்துச்சு.

அதேபோல இந்தக் கதைக்கு தமிழ், மலையாளம்னு ரெண்டு விதமான ஸ்க்ரீன்பிளே எழுதி இருக்கேன். தமிழ்ல நீங்க பார்க்கற திரைக்கதைக்கும் மலையாள திரைக்கதைக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். பரபரப்பான ஒரு த்ரில்லர்... அடுத்து என்ன அப்படின்னு யோசிச்சு படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இந்தப் படத்துக்கு வரலாம். அந்த எதிர்பார்ப்பை ‘யூகி’ படம் பூர்த்தி செய்யும்ன்னு நம்புறேன்.

உங்க அடுத்தடுத்த படங்கள் எப்படி இருக்கும்?

முதல் படம் இனிமேதான் வெளியாகப் போகுது. இந்தப் படம்தான் அடுத்து நான் யார் அப்படிங்கறதைத் தீர்மானிக்கும். அதற்கு அப்புறம்தான் அடுத்த படம் பத்தி யோசிக்கணும்.

ஷாலினி நியூட்டன்