சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர் 14

சூரிய நமஸ்காரம் என்றதும் பலருக்கு மந்திரங்கள் நினைவுக்கு வரும். பலர் மந்திரம் என்றதும் விலகி ஓடுவதைக் கண்டிருக்கிறேன். மந்திரம் என்றாலே ஒரு தவறான பார்வை வேரூன்றி விட்டது. அது மிகவும் கடினமானது, புரியாதது, மதம் சார்ந்தது என்றெல்லாம் பலவாறு கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. நான் அறிந்தவரையில், யோகாவில் பயன்படுத்தப்படும் ஒலி - மந்திரங்கள் - கருத்துகள் பெரும் பங்களிப்பாய் அமைந்து வருகின்றன.

ஆழமாய் போகவும் அந்தக் கால சிந்தனை வளத்தை தொட்டுணரவும் இவை உதவுகின்றன. காலம் வழங்கிய எல்லாமும் நின்று நிலைப்பது இல்லை. வெகு சிலவே காலம் கடந்து, தலைமுறை கடந்து, தம் இருப்பை நிலை நாட்டி வருகின்றன. அவற்றை அறிவது என்பது யாருக்கும் வீணான ஒன்றாக அமைய வாய்ப்பில்லை.

சூரிய நமஸ்காரத்தில் சூரியனைப் போற்றி மந்திரங்கள் ஒலிக்கும்போது, அதை ஒரு மதத்தின் அடையாளமாகப் பார்க்கும் நிலை உள்ளது. ஆனால் அவை எல்லாமே சூரியனைப் பாராட்டிப் போற்றும் வார்த்தைகள்.

அவை சமஸ்கிருதத்தில் இருக்கின்றன; அவ்வளவே! காலை நேரம் யோகப் பயிற்சியில் நல்ல எண்ணங்களும், பாராட்டும் வார்த்தை ஒலிப்புகளும் இருப்பது மனதை ஆரோக்கியமாக்கும். உற்சாகம் பொங்கச் செய்யும். நல்ல வார்த்தைகள் ஒலிக்கப்படும்போது அதைக் கேட்கும் முதல் நபராக இருப்பது, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்தானே!

ஒரு நல்ல விஷயத்தைக் காலை நேரத்தில் பேசக் கிடைக்கும் வாய்ப்பாக இதைப் பார்க்கலாம். அந்த சூரியப் பெரும் சக்தியோடு நம்மைத் தொடர்பு படுத்தக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பமாகப் பார்க்கலாம்.

சூரிய நமஸ்கார மந்திரத்தை ஒலிப்பது சிலருக்கு முதலில் சற்று சிரமமாக இருக்கலாம். அவர்கள் சிறிது காலப் பயிற்சிக்குப் பின் இதைச் சொல்லலாம்; தேவையெனில், முதலில் சூரிய நமஸ்காரத்தை சாதகமாய்ப் பார்த்து, வசதிக்கு ஏற்ப உற்சாகமாய் பயிற்சி செய்யத் தொடங்கி விடுங்கள். சில நேரம் அதுவே உங்களை அடுத்த  கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

யோகாவுக்கு வரும் புதியவர்களுக்குப் பெரும்பாலும் மூச்சு குறைவாகவே இருக்கும். அவர்களுக்கு நீண்ட உள்மூச்சு, வெளிமூச்சு விடுவதுகூட கடினமாக இருக்கும். காரணம், பல காலமாக மூச்சு தொடர்புடைய வேறு பயிற்சிகளைச் செய்திருக்க மாட்டார்கள். அதனால் இயல்பான மூச்சின் அளவுக்கு மேல் மூச்சை எடுப்பது என்பது உணர்வு நிலைப்பட்ட நேரங்களில் தெரியாமல் நடந்திருக்கலாம்.

இன்றைய வாழ்க்கை முறையின் அவசரம், உடற்பயிற்சி செய்யாத நிலை எல்லாம் சேர்ந்து மூச்சை மேலும் சுருக்கி யிருக்கும். அதாவது உள்மூச்சும் வெளிமூச்சும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில் சூரிய நமஸ்காரப் பயிற்சி முதலில் சற்றுக் கடினமாக இருக்கலாம். சில வாரப் பயிற்சிக்குப் பின்னே அது இயல்பாகும். சிலருக்கு சில மாதங்கள் கூட ஆகும். இது இயல்பானது.

ஆகவே, முதலில் சூரிய நமஸ்காரத்தை உடல் அளவில் நன்றாகச் செய்யவும் பிறகு மூச்சைச் சரி செய்யவும் நீங்கள் திட்டமிடலாம். உடல் அளவில், மூச்சு அளவில் சூரிய நமஸ்காரம் கை வந்து, அதன்மூலம் பலன்கள் பெறுவதே சிலருக்குப் போதுமானது! அதற்கு மேல் சென்று அடுத்தடுத்த சாத்தியங்களை அடைய முயற்சிப்பவர்களுக்கு சிறுசிறு ஒலிகளும், மந்திரங்களும் நல்ல வாய்ப்பு.

முதலில் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஓர் ஒலியை வெளி மூச்சின்போது பயன்படுத்தலாம். இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்; வெளி மூச்சின் நேரம் அதிகமாகும்; உங்களின் கவனம் முழுதாகப் பயிற்சியில் இருக்கும்.

பிறகு ஒரு வார்த்தை, அதன் பிறகு இரண்டு வார்த்தை... என்று மெல்ல முன்னேறலாம். இவற்றில் நல்ல பயிற்சியை எட்டிய பின்பு மந்திரங்களுக்குப் போகலாம்.இப்போது சூரிய நமஸ்கார மந்திரங்களையும் அவற்றின் அர்த்தத்தையும் காண்போம்...

1. ஓம் மித்ராய நம: எல்லோருக்கும் நண்பராக இருப்பவருக்கு வணக்கம்
2. ஓம் ரவயே நம: மாற்றங்களுக்கு மூல காரணமாக இருப்பவருக்கு வணக்கம்.
3. ஓம் சூர்யாய நம: எல்லோரையும் செயல்பட வைப்பவரே, வணக்கம்.
4. ஓம் பானவே நம: ஒளியைத் தருபவருக்கு வணக்கம்.
5. ஓம் ககாய நம: ஆகாயத்தில் தோன்றுபவரே, வணக்கம்.
6. ஓம் பூஷ்ணே நம: எல்லா நல்ல விஷயங்களுக்கும் காரணமானவருக்கு வணக்கம்
7. ஓம் ஹிரண்ய கர்ஹாய நம: எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டவரே, வணக்கம்
8. ஓம் மரீச்சயே நம: ஒளிக்கதிர் களை உடையவரே, வணக்கம்.
9. ஓம் ஆதித்யாய நம: தேவர்களுக்கு எல்லாம் தேவராக இருப்பவருக்கு வணக்கம்.
10. ஓம் ஸிவித்ரே நம: எல்லாவற்றையும் உண்டாக்குபவரே, வணக்கம்.
11. ஓம் அர்க்காய நம: போற்றுதலுக்கு உரியவரே வணக்கம்.
12. ஓம் பாஸ்கராய நம: ஒளிக்கு மூலமானவருக்கு வணக்கம்.

சில யோகா ஆசிரியர்கள் ‘ஓம்’ ஒலிக்குப் பிறகு ‘ஹ்ராம்’, ‘ஹரீம்’, ‘ஹ்ரூம்’, ‘ஹ்ரைம்’, ‘ஹ்ரெளம்’, ‘ஹ்ரஹா’ போன்ற வார்த்தைகளை முதல் ஆறு மந்திரங்களில் சேர்ப்பார்கள். பிறகும் இதே வரிசையை அடுத்த ஆறு மந்திரங்களோடு சேர்ப்பர்.

அதேபோல் மந்திர ஒலிப்பிலும் பலவிதங்கள் உண்டு. மூச்சின்போது ஒலித்தல், மூச்சை இழுத்து பின், மூச்சை வெளியே விட்ட பின், கண்களை மூடி மன அமைதியோடு சொல்லுதல், உரக்கச் சொல்லுதல், மென்மையாய் ஒலித்தல், மனதோடு ஒலித்தல்... என்று பலவிதங்கள்.

பொதுவாக  ஒலியையோ, மந்திரத்தையோ, எடுத்த உடனே தர மாட்டார்கள். சூரிய நமஸ்கார நிலைகளை நன்கு பரிச்சயப்படுத்தி, மூச்சோடு நன்கு பயிற்சி செய்தபிறகுதான் தருவார்கள். நிலைகளில் நிற்பது, மூச்சை சில நிலைகளில் நிறுத்துவது, பிற ஆசனங்களை சூரிய நமஸ்காரத்திற்குள் கொண்டு வருவது போன்றவையும் அப்போதுதான் நடக்கும். இப்படிப் பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்; அனுபவிக்கவும் முடியும். ஒரு நல்ல விஷயத்தைக் காலை நேரத்தில் பேசக் கிடைக்கும் வாய்ப்பாக இதைப் பார்க்கலாம்.

(உயர்வோம்...)

ஏயெம்

மாடல்: சத்யா
படங்கள்: புதூர் சரவணன்