கமல் படத்தை நான் இயக்காததே வெற்றிதான்!
மிஷ்கின் அதிரடி
‘பிசாசி’ன் நல்ல கவனிப்பிற்குப் பிறகு மிஷ்கின் பற்றிய தகவல்கள் இல்லை. திடீரென்று ‘சவரக்கத்தி’ என அடுத்த படத்தின் டைட்டில் பரபரக்கிறது.எப்படி இருக்கிறார் மிஷ்கின்?அறையெங்கும் ஆகச்சிறந்த புத்தகங்கள். நிறைய படிக்கப்பட்ட அடையாளங்களுடன் காணப்படுகின்றன.
 வாசற்கதவில் ஆரம்பித்து சகல அறைகளிலும் ஓவிய மனிதர்களும், அகிரா குரசோவாவும் நம்மை உற்றுப் பார்க்கிறார்கள். முன் நெற்றியிலிருந்து பிடரி வரை அலை பாயும் முடி கோதியபடி வந்து அமர்கிறார் மிஷ்கின். அவரது உரையாடல் எப்பொழுதும் பொருள் மீறி அமையும்!
‘‘ ‘பிசாசு’ முடிச்ச பிறகு ரெஸ்ட் எடுத்துக்க நினைச்சேன். என் அசிஸ்டென்ட் ஆதித்யா, ‘ஒரு ஹ்யூமர் ஸ்கிரிப்ட் எழுத முடியுமா’ன்னு கேட்டான். எனக்கு அது சின்ன தீப்பொறி வச்ச மாதிரி இருந்தது. இதில் என் வாழ்க்கையில் பார்த்த வேடிக்கையான மனிதரைச் சொல்லியிருக்கேன். எனக்கு முடி வெட்டியவர்.
 அவரிடம் 15 நிமிஷம் தலையைக் கொடுத்தால் அதற்காக எல்லாமே பேசுவார். பாலிடிக்ஸ், தத்துவம், பொருளாதாரம், எங்க ஏரியாவில் சந்துபொந்துகளில் இருக்கிற கிசுகிசு எல்லாத்தையும் சொல்வார். கேட்க சுவையாக இருக்கும். ஆனால், அவர் சொல்வதில் 99% பொய்யாகத்தான் இருக்கும்.
அவர் பேசுவதைக் கேட்பதற்காகவே மாதத்தில் ரெண்டு முறை முடிவெட்டப் போவோம். ‘அந்த மூணாவது தெருவில் நாலாவது வீட்ல இருக்கற பையன் ஓவரா பண்றான்னு...’ என ஆரம்பிப்பேன். அப்படியொரு ஆள் அங்கே இருக்கவே மாட்டான். சொல்லி முடிச்சதும், ‘தம்பி, அவனைக் கொஞ்ச நாளாகவே பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்’னு ஒரு சுவாரசிய கிசுகிசு சொல்வார்.
365 நாளும் கடையில் இருக்கிற கேரக்டர். ஆனால், ரொம்ப நல்ல மனிதர். சின்ன தீங்கு நினைக்கமாட்டார். அவரை எனக்குப் பிடித்திருந்தது. அவருக்கு ஒரு பிரச்னையைக் கொடுத்திட்டு, அவருடைய பொய்களால் அதை விட்டு வெளியே வர முடியுமான்னு யோசிச்சேன். கூடவே இன்னொரு மனிதன் கற்பனையில் வந்தான். அவன் ‘மங்கா’. நானேதான் அது. அந்த முடிவெட்டுபவர் டைரக்டர் ராம்!’’
‘‘நீங்களும் டைரக்டர் ராமும்... காம்பினேஷனே களை கட்டுதே?’’‘‘எங்க இரண்டு பேரையும் இரு துருவங்களா நிற்க வச்சு, நான் தாயக்கட்டையை உருட்டி விட்டிருக்கேன். அது ஓடிக்கிட்டே இருக்கு.
நான் எழுதும்போதே விழுந்து விழுந்து சிரிச்சேன். படிச்சவங்களும் சிரிச்சாங்க. நான்தான் அந்த முடிவெட்டுபவரா செய்ய நினைச்சேன். ஆனால், எழுதி முடிச்சதும் ராம் மனசில் வந்தான். எனக்கு ரொம்ப தெரிஞ்சவன். அவனை அனுமானிக்கவே முடியாது. முதலில் ‘வேண்டாம்’னு சொன்னான். ஸ்கிரிப்ட்டை படிச்சதும் ‘முழுக்க மானுடம் இருக்கு’ன்னு சொன்னான்!’’
‘‘மிஷ்கினிடமிருந்து காமெடியா..?’’‘‘என் ஆதர்ச மனிதர் சாப்ளின். ஒரு மனிதனை கேலி பண்றதோ, மனசு புண்பட பேசுறதோ காமெடி கிடையாது. நல்ல ஹாஸ்யம் நம்ம மனசைக் கழுவிடும். ஒவ்வொரு மனிதனும் சிரிக்கும்போது இந்த உலகம் வெளிச்சப்படுகிறது. ஒருத்தனை தலையில் அடிச்சு, எட்டி மிதிச்சு, ‘வழுக்கைத் தலையா’னு திட்டுவது நாகரிகமற்ற அசிங்கமான காமெடி.
நிஜவாழ்க்கையும், சுயமும் கலக்க முடியாமல் போகிற கஷ்டத்திலிருந்து பெறுவதுதான் காமெடி. வயதானவர் சேரில் உட்காரும்போது, ஒரு இளைஞன் சேரை இழுத்து விட்டு, பெரியவர் விழுந்தால் அது அசிங்கமான காமெடி. அதையே நாலு வயசுக் குழந்தை இழுத்து இரண்டு பேரும் சேர்ந்து சிரித்தால் அங்கே நல்லாயிருக்கும்!’’
‘‘நிறைய ஹீரோயின்கள் நடிக்க மறுத்துட்டாங்கன்னு சொன்னீங்க...’’‘‘ரெண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், ஒன்பது மாத கர்ப்பிணியாவும் நடிக்க யார் வருவாங்க? ‘இப்படி நடிச்சிட்டு, அடுத்ததா ஒரு ஹீரோவோடு டூயட் பாடுறது எப்படி’ன்னு கேட்டாங்க. நியாயம்தான்.
காதும் கேட்காத பொண்ணு வேற. பூர்ணா கதையைக் கேட்டதும் ‘நான் செய்றேன்’னு மனப்பூர்வமா முன்வந்தாங்க. இதை ஒரு ஸ்மிதா பாட்டீல், ஷபனா ஆஸ்மி, சாவித்திரியம்மாதான் மனசு வந்து செய்ய முடியும்!’’‘‘உங்க படத்தில் எல்லா கேரக்டரும் நீங்களே நடிக்கிற மாதிரி இருக்கே..?’’
‘‘நான் பெரும்பாலும் அமெச்சூர் நடிகர்களையே நடிக்க வைக்கிறேன். நான் சொல்லிக் கொடுக்கிறதை அவங்க புரிஞ்சுக்கிறாங்க. ஒரு நல்ல படம் ஓடும்போது இதையெல்லாம் யாரும் பார்க்கமாட்டாங்க.
என்னுடைய கதை மாந்தர்கள் சாமானியர்கள். அவர்களின் ஆளுமையை அதிகப்படுத்துவதே என் வேலை. இதை மாத்தவும் மாட்டேன். என்னுடைய கதாபாத்திரம் என்னை மாதிரிதான் இருக்கும். அவை என் குழந்தைகள்!’’‘‘சினிமா மாறிடும்னு நம்பிக்கிட்டே இருக்கோமே...’’
‘‘அது ஒரு வார்த்தைதான். அதைப் பத்தி கவலைப்படக் கூடாது. கோயிலுக்கு போறவங்க கம்மிதான். தொன்றுதொட்டு சாராயக் கடைக்கு போறவங்க அதிகம். ‘எரிந்து போன வீட்டில் இங்குமங்கும் மலர்கள்’னு ஒரு கவிஞன் சொல்றான்.
அது மாதிரி நல்ல சினிமாக்கள் பூத்துக்கிட்டே இருக்கும். அப்படித்தான் பூக்கணும். எல்லா இடத்திலும் பூ பூத்திருந்தா அலுத்துவிடும். பூந்தோட்டத்தில் இருக்கிற பூக்களை விடவும் காடுகளில் இயல்பாகப் பூக்கிற பூதான் அழகு!
நான் உலகம் பூராவும் சுத்திக்கிட்டே இருக்கேன். பிரான்ஸுக்குப் போனால் அங்கே தியேட்டர் இருக்கைகள் பாதி காலியாத்தான் இருக்கு. யுஎஸ்ஸிலும் ரொம்ப கம்மி. இந்தியாவில்தான் ஒருத்தனுக்கு எழுந்திருச்சதும் சினிமா ஞாபகம் வருது.
தலையை சீவ ஆரம்பிக்கும்போதே ‘இந்த நடிகன் மாதிரி இருக்கேன்’னு நினைச்சுப் பார்க்கிறதிலிருந்து, அம்மாகிட்டே பேசுற டயலாக்கிலிருந்து எல்லாமே சினிமாதான். செத்த வீட்டில் சிவாஜி மாதிரியே அழுகிறவர்கள் உண்டு. ரோட்டில் போய்க்கிட்டு இருக்கிறவன் ஏதாவது நல்லது செய்தால், ‘ஹீரோ மாதிரி பண்ணிட்டான்’னு சொல்றாங்க!’’‘‘சினிமாவில் சமூக மாற்றம் வருமா?’’
‘‘கலை நம்மளை மாத்த முடியும்னு நினைத்தால் அது பரிதாபமான நம்பிக்கை. 1000 வருஷமா அரிச்சந்திர மயான காண்டம் நடந்தது. ஒரே ஒரு மனிதனைத்தான் அது மாத்திச்சு. அதைப் பார்த்துட்டு காந்திதான் பொய் சொல்லக்கூடாதுன்னு நினைச்சார். ஒரு கலை ஒருத்தனைத்தான் கண்டுபிடிக்கும்.
அது சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், உலகத்தில் சிறு மாற்றங்கள்தான், பிறகு பெரும் மாற்றத்தைக் கொடுத்திருக்கு. ‘பதேர் பாஞ்சாலி’, ‘உதிரிப் பூக்கள்’ மாதிரி எப்ப வேண்டுமானாலும் ரசிக்க முடிகிற படங்களை, சாவதற்கு முன்னாடி எடுத்திட முடியுமான்னு யோசித்துக்கொண்டே இருக்கிறேன்!’’
‘‘இப்போ சாதாரண படங்கள் கூட ஓடுகிறதே?’’‘‘ஜவுளிக் கடையில் புகுந்திட்டா எதையாவது வாங்கிட்டுத்தான் வெளியே வரணும். இங்கே நம்மாளுங்க எதையும் பெரிய குறையா எடுத்துக்கிறதில்லை.
கொஞ்சம் சிரிச்சா, மனசு உள்ளே போயிட்டா போதும்ங்கிறாங்க. அது ஒரு பெருந்தன்மை. எல்லா படங்களும் ஓடட்டும். எப்பவும் ‘சேது’, ‘தேவர் மகன்’, ‘சிறை’, ‘முள்ளும் மலரும்’ வரும்னு காத்திருந்தால் முடியாது. ஒரு படம் சரியா ஓடலைன்னா குறைந்தது 10 குடும்பமாவது ரோட்டுக்கு வந்திடுது. அது பெரிய அவலம்!’’‘‘உங்க படங்கள் மறைமுகமாகவே நிறைய உணர்த்துதே...’’
‘‘எனக்கு என்ன உறுத்தல்னா நாம் சில மதங்களையும், சாதிகளையும் குறிப்பிட்ட கொள்கைகளையும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருக்கோம். இதுதான் இங்கே எல்லோர் இடையிலும் வன்மத்தை உருவாக்குகிறது. விரிச்ச கையில் காசை வைத்தாலும் அப்படியேதான் இருக்கும்.
ஆனால், அதை இறுக்கிப் பிடிச்சிட்டு இருக்கோம். என் அம்மா என்னை வலியில் பெத்த மாதிரி என் வலியில் படங்களை தந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும்!’’‘‘யாரும் உங்களை பெரிசா கொண்டாடவில்லையே...’’
‘‘கொண்டாடியிருந்தால் கேவலமா போயிருப்பேன். நல்ல கலைஞன் இறந்து போன பின்புதான் தெரிகிறான். வாழ்க்கையில் எந்த விருதும் வாங்காமல் நான் சாகணும்னு ஆசைப்படுறேன். 70 வயதில் ஒரு நல்ல படம் எடுக்க முடிஞ்சாலும், நான் சந்தோஷமா இருப்பேன். படைப்பாளிகள் சாகணும். அப்பத்தான் அவங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
குரசோவாவின் ‘சாமுராய்’, ராபர்ட் பிரசான்னின் ‘பிக்பாக்கெட்’ மாதிரி என்னால் ஒரு படமாவது எடுக்க முடியுமானு தெரியலை. கதையைப் புதுசா எழுத உட்காரும்போது வேறொரு வாழ்க்கை அப்படியே நம்ம கண்ணில் வரணும். இதற்கு வேறொரு மனநிலை வரணும். நிறையப் படங்களில் கருணையையும், அன்பையும் மட்டுமே மறைமுகமா சொல்லிக்கிட்டே இருக்கேன்!’’
‘‘நீங்களும் கமலும் சேர்ந்து படம் செய்வதாக அட்வான்ஸ் கூட கமல் கொடுத்தார். பிறகு நின்று விட்டது. அந்தப் படம் வந்திருந்தால் ஒரு நல்ல காம்பினேஷன் கிடைத்திருக்குமோ..?’’‘‘என் படங்களில் கதைதான் உயிர். அதில் யாரை வேண்டுமானாலும் வைக்கலாம். அவங்க இயல்பா அதில் உட்கார்ந்துட்டுப் போனால் போதும். நானும் கமலும் படம் செய்திருந்தால் மிகப் பெரிய ஃப்ளாப் ஆகியிருக்கும். அதிலிருந்து நான் தப்பித்துவிட்டேன். அந்தப் படத்தை எடுக்காமலேயே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அந்தப் படம் எடுக்காததை, என் வாழ்க்கைக்கும், உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகப் பாவிக்கிறேன்!’’
- நா.கதிர்வேலன்
|