முள்ளும் மலரும் காளி ரீ என்ட்ரி!
ரஜினி சர்ப்ரைஸ்
‘லிங்கா’வினால் ரஜினிக்கு ஏற்பட்ட சரிவை, பா.ரஞ்சித் சரி செய்து சூப்பர்ஸ்டாருக்கு மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என்பதுதான் ரஜினி ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு! அதற்காக இப்போதே தங்கள் காலண்டரில் ஆகஸ்ட்டை கிழித்து வைத்துக் காத்திருக்கிறார்கள் பலர்.
 ஆகஸ்ட் முதல் வாரத்தில்தான் மலேசியாவில் பரபரவென தொடங்குகிறது பா.ரஞ்சித் இயக்கும் ரஜினி படம். ‘பாகுபலி’ வெற்றி விழாவில் இயக்குநர் லிங்குசாமி, ‘‘ஷங்கர் டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் ‘எந்திரன்2’வும் இதேபோல பிரமாண்ட வசூலைக் குவிக்கும்’’ எனப் பேசி ‘எந்திரன்2’வையும் உறுதிப்படுத்தியிருக்கிறார். பா.ரஞ்சித், ஷங்கர் என ரஜினியின் அடுத்தடுத்த பிரமாண்டங்களைப் பற்றிய லேட்டஸ்ட் பரபர தகவல்கள் இங்கே...
 *‘‘பலரையும் தாண்டி ரஜினி படம் எப்படி ரஞ்சித்திற்கு கிடைத்தது?’’ - கோடம்பாக்கத்தின் கோரஸ் கொஸ்டின். சமீபத்திய விழா ஒன்றில் ரஞ்சித் பட்டும் படாமலும் சொன்னது இது. ‘‘ ‘மெட்ராஸ்’ படம் ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவர் ரெண்டு முறை அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். ‘நாம ஒரு படம் பண்ணலாம்’னு ரஜினி சார் சொன்னதும், ‘என்னால் முடியுமா’ன்னு தயங்கினேன்.
‘நோ ப்ராப்ளம். ‘மெட்ராஸ்’ மாதிரி நல்ல ஸ்டோரியோட மேக்கிங் இருக்கணும். கேரக்டர்கள் யதார்த்தமா இருக்கணும். அதைத்தான் விரும்புறேன்’னு ரஜினி சார் சொன்னாங்க. அப்படித் தொடங்கினதுதான் இந்தப் புராஜெக்ட். ‘முள்ளும் மலரும்’ காளி கேரக்டரை இதில் பார்க்கலாம்!’’
* படத்தில் ரஜினிக்கு இரண்டு கெட்டப்புகள். ‘முள்ளும் மலரும்’ காளி போலவே வரும் ரஜினியின் கேரக்டருக்குப் பெயரும் ‘காளி’ என்றே வைத்திருக்கிறார்கள். அநேகமாக படத்தின் பெயரும் ‘காளி’ என்றே இருந்தாலும் ஆச்சரியமில்லை. இதுவும் பழைய ரஜினி பட டைட்டில்தான். ஆனால் 80களில் வெளியான ‘காளி’ அப்படி ஒன்றும் பெரிதாக ஓடிய படமில்லை என்பதால் சென்டிமென்ட்டாக ரஜினி தயங்குவதாக தகவல்.
*ரஞ்சித் படம் யதார்த்தமான அரசியல் பேசும் படம் என்பதால், கதையோடு இணைந்த வீரியமான பன்ச்சுகள் ரஜினிக்கு இருக்கும். தாதா கெட்டப்புக்காக தாடி வளர்க்க ஆரம்பித்து, இப்போது வெண் தாடியில் செம லுக்கில் இருக்கிறார் ரஜினி.
* இந்தப் படத்தை ‘கலைப்புலி’ தாணு தயாரிப்பது தெரிந்த செய்திதான். ‘மெட்ராஸ்’ டீமில் இருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டர் எல்.பிரவீன், ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவு தவிர பிரகாஷ்ராஜும், கலையரசனும் கமிட் ஆகியுள்ளனர். புதுமுகங்களுக்கு கணக்கே இல்லை!
*படத்தில் ஹீரோயின் உண்டு. ஆனால், டூயட் இருப்பது டவுட். வித்யா பாலனை அணுகியபோது அவர் தேதிகள் இல்லை எனச் சொல்லிவிட்டார். ராதிகா ஆப்தே நடிப்பது குறித்து எதுவும் முடிவாகாத நிலையில், ரஜினி ரசிகர்களே ராதிகா ஆப்தே நடிப்பதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.
* மலேசியாவில் லொக்கேஷன் பார்த்திருக்கும் ரஞ்சித், இதுவரை அங்கு தமிழ்ப்படங்கள் எதற்கும் ஷூட்டிங் நடத்தாத ஏரியாக்களையும் பார்த்து வந்திருக்கிறார். ஒரே ஷெட்யூலாக தொடங்கி மலேசியாவில் தொடர்ந்து 40 நாட்கள் ஷூட்டிங் நடக்கிறது. பொங்கல் அல்லது தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸ் டார்கெட்!
* ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ என தன் படங்களுக்கு ஷூட்டிங் தொடங்குவதற்கு முன், சில மாதங்கள் ரிகர்சல் வைத்துவிட்டு, அதன்பிறகே படப்பிடிப்புக்கு கிளம்பிப் போனார் ரஞ்சித். ரஜினி படத்துக்கும் இப்படி ரிகர்சல் வைத்தால் ஷூட்டிங்கில் ரிஸ்க் இருக்காது என்று நினைத்த ரஞ்சித் இப்போது ரிகர்சல் நடத்தி வருகிறார்.
ரஜினியின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு பக்கமாகத்தான் ரிகர்சல் நடக்கிறது. படத்தில் ஃப்ரெஷ்ஷான முகங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ரிகர்சல் விஷயத்தை ரஜினியிடம் சொன்ன ரஞ்சித், ‘‘இது மற்றவங்களுக்குத்தான் சார்! நீங்க நேரே ஷூட்டிங் வந்தா போதும்’’ எனச் சொல்ல, புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார் ரஜினி.
ஆனால், ரிகர்சல் தொடங்கிய ஓரிரு நாட்களில் அங்கே சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார் ரஜினி. கொஞ்ச நேரம் கவனித்துவிட்டு கிளம்பிவிடுவார் என அங்கிருந்தவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நடிப்பில் லயித்த ரஜினி, ‘நானும் நடிச்சுப் பார்க்குறேன்’ எனக் களமிறங்கிவிட்டார். விதவிதமான பாடி லாங்குவேஜ், மாடுலேஷனில் நடித்துக் காட்டி, ‘‘இப்படிப் பண்ணினா சரியா இருக்குமா? இது சரிவருமா?’’ என ரஞ்சித்திடம் கேட்டுத் திணறடித்திருக்கிறார். இன்னும் அங்கே அந்த பிரமிப்பு மாறாமல் இருக்கிறார்கள்.
*ஷங்கரின் ‘எந்திரன்2’விற்கு வருவோம். படத்தின் பட்ஜெட் கொஞ்சம் ஹெவிதான். சமீபத்தில் ‘பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியா? ஷங்கரா?’ என டாக் வந்ததால், ‘பாகுபலி’யை விட மிரட்டலான டெக்னாலஜி, விஷுவலோடு செம வெயிட் காட்ட திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். அநேகமாக விக்ரம் இதில் ரஜினிக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக நடிக்கக்கூடும் என்கிறார்கள். அட்ராக்ஷன் மேல் அட்ராக்ஷன் கூடுவதால் இந்த புராஜெக்ட்டை தயாரிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டன.
அனேகமாக ஜனவரியில் ஷூட்டிங் கிளம்பலாம். ஹாலிவுட் லெவலில் படத்தின் ஸ்டன்ட்களை ஷங்கரே வடிவமைத்து வருகிறார். அவர் சொன்னதைக் கொண்டு வர பீட்டர் ஹெயின். கத்ரினா கைஃப் அல்லது தீபிகா ஹீரோயினாக இருந்தால் இந்தி மார்க்கெட்டிற்கு கொஞ்சம் உதவுமே என சூப்பர் ஸ்டார் நினைக்கிறார். ஷங்கரின் சாய்ஸ் இன்னும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது.
- மை.பாரதிராஜா
|