பொய்



‘எத்தனை வரன்களை தட்டிக் கழிப்பது?  இந்தத் தடவை எப்படியும் அந்தப் பையனை என் தலையில் கட்டி விடுவார்களே. என்ன  செய்வது?’ என்று கலங்கினாள் துளசி.அப்போது அவள் செல்போன் சிணுங்கியது.

‘‘என்னடி?  கவலைப்படாதே! நான் சொன்னபடி நீ இப்ப மாசமா இருக்கிறதா சொல்லு. அப்புறம் பார்... வந்தவன் தலை தெறிக்க ஓடியே போயிடுவான். உன் காதல்  நிறைவேறும்!’’ என்று அவள் காதலுக்கு நம்பிக்கை நீர் தெளித்துப் பேசினாள் தோழி வடிவு.அடுத்த நாள்... பூ, பழத்தட்டுகளுடன் தடபுடலாக வந்து இறங்கினார்கள் மாப்பிள்ளை வீட்டார்.உபசரிப்புகள் பலமாக இருந்தன.

‘‘பொண்ணைப் பார்த்து ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்’’ என துளசி இருக்கும் அறைக்குள் போனான் மாப்பிள்ளை அகிலன்.துளசி தடுமாறினாள். ‘‘நான் இப்போ இருக்கிற நிலைமையை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிக்கிறேன்’’ என்று புதிர் போட்டாள்.
அகிலனுக்கு அந்த தயக்கத்திலேயே விஷயம் என்னவென்பது புரிந்துவிட்டது.

‘‘எது  வேணும்னாலும் சொல்லுங்க. என்னைப் பிடிக்கலைன்னு கூட சொல்லுங்க. ஆனா, உங்க அம்மா, அப்பாவைக் கேவலப்படுத்துற மாதிரி ‘நான் கர்ப்பமா இருக்கேன்’ங்கிற புளிச்சுப் போன பழைய பொய்யை மட்டும் சொல்லாதீங்க. உங்க காதல் கைகூட என் வாழ்த்துக்கள்!’’ - சொல்லிவிட்டு அதிரடியாக வெளியேறினான் அகிலன்.     

உடுமலை துரையரசன்