நால்வகை நிலங்களையும் ஆக்கிரமிக்கும் கருவேலமரங்கள்



உறக்கம் கலையுமா அரசு?

தமிழ் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்த நம் முன்னோர்கள், ஒவ்வோர் நிலத்துக்குமான மரங்களையும் பகுத்து வைத்தார்கள். குறிஞ்சி நிலத்துக்குச் சந்தனமும், முல்லை நிலத்துக்குக் கொன்றையும், பாலை நிலத்துக்கு ஓமையும், மருத நிலத்துக்குக் காஞ்சியும், நெய்தல் நிலத்துக்குப் புன்னையும் தாவர அடையாளங்கள்.

ஆனால் இந்த எல்லா அடையாளங்களையும் அழித்து விட்டது சீமைக் கருவேல மரம். முல்லை தொடங்கி நெய்தல் வரைக்கும் எந்த நிலத்தையும் விடாமல் ஆக்கிரமித்து உயிர்ச்சூழலையே அழித்துக்கொண்டிருக்கும் இதன் விபரீதத்தை அரசும் மக்களும்  இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் பெரும் சோகம்.

PROSOPHIS JULIFLORA... தமிழ் நிலத்தைக் கொள்ளை கொண்டுள்ள சீமைக் கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் இதுதான். பெரு நாட்டில் பிறந்த மரம் இது. இந்தக் கொடூரத் தாவரம் இந்தியாவுக்குள் வந்த கதையை விவரிக்கிறார் பெரம்பலூர் ரோவர் வேளாண்மைக் கல்லூரியின் வனவியல்துறை உதவிப் பேராசிரியர் ஆனந்தன்.

‘‘1877ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கொடூர நச்சுதான் இந்த சீமைக் கருவேல மரம். வறட்சியில் தவித்த தமிழகத்தின் ராமநாதபுரம், ராஜஸ்தான் மாநிலம் மற்றும் சிந்து போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், மின்சார உற்பத்திக்குத் தேவையான கரியைத் தயாரிக்கவும் சீமைக் கருவேல விதையைக் கொண்டு வந்து கொட்டினார்கள். எந்த வறட்சியையும் தோற்கடித்து வளரும் சீமைக் கருவேலம் நிலத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

பல்வேறு விதங்களில் இந்த மரம் தனித்தன்மை மிக்கது. இது வாழும் நிலப்பகுதியை ‘தனி உயிரினத்தின் சாம்ராஜ்யம்’ என்று உயிரியலாளர்கள் சொல்வார்கள். பக்கவாட்டில் வளரும் தன்மைமிக்க இந்த மரம், தனக்குக் கீழும், அருகாமையிலும் எந்த தாவரத்தையும் வளரவிடாது. எளிதில் இதை அழிக்கவும் முடியாது. கரிக்குத் தவிர வேறெதற்காகவும் இந்த மரத்தைப் பயன்படுத்த முடியாது. நிலத்தின் உயிர்ச்சூழலை அழிப்பதோடு, நீர், காற்று ஆகியவற்றையும் இந்த மரம் சிதைத்துவிடும். விதைகளைச் சாப்பிடும் கால்நடைகளையும் மலடாக்கும்...’’ என்கிறார் ஆனந்தன்.

வேல மரம் என்பது தமிழகத்தின் பாரம்பரிய மரம். இதில் கருவேலம், வெள்வேலம் என இருவகை உண்டு. சீமைக்கருவேல மரத்துக்கும் நம் மண்ணுக்கும் தொடர்பில்லை. ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 71 நாடுகள் இந்த மரத்தை ‘மிகவும் அபாயகரமான களை’ என்று தடை செய்துள்ளன. நம் அருகாமையில் இருக்கிற கேரளா, கருவேல மரங்களுக்கு எதிராக சட்டமே இயற்றியுள்ளது.

ஆனால், தமிழகத்தின் நீர்நிலைகள், சமவெளிப்பகுதிகளில் இருக்கும் கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உறக்கத்தில் இருக்கிறது தமிழக அரசு. “கிழுவை, கள்ளி, நொச்சி, பூவரசு என நம் நிலத்தில் ஏராளமான உயிர்வேலிகள் இருந்தன.

இன்று அனைத்தையும் அழித்துவிட்டு சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதன் விதை, கால்நடைகளுக்கு விருப்பமான உணவாக மாறியிருக்கிறது.  கால்நடைகளின் வயிற்றில் செறிவூட்டம் அடைகிற விதைகள், விழும் இடங்களிலெல்லாம் முளைக்கின்றன.

தவிர காற்றின் வழியாகவும் விதைகள் பரவுகின்றன. ஒரு கணக்கெடுப்பு, தமிழகத்தில் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சீமைக் கருவேலம் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது. இந்த மரம் மற்ற தாவரங்களை விட மூன்று மடங்கு அதிக தண்ணீரை உறிஞ்சுகிறது. இதனால் நீரின் தன்மை மாறுவதோடு, நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், விலங்குகள் சரணாலயங்களி–்லும் இந்த மரங்கள் அடர்ந்து வளர்கின்றன.

கோடைக் காலத்தில் பிற மரங்கள் இலைகள் உதிர்ந்து காய்ந்துவிடும். ஆனால் சீமைக் கருவேலம் பசுமையாக தழைத்து நிற்கும். மான்கள், யானைகள் போன்ற விலங்குகள் இதைச் சாப்பிட்டு இறந்து விடுகின்றன.

அண்மைக்காலத்தில் இறந்துபோன நிறைய யானைகளின் இரைப்பையில் சீமைக் கருவேல இலைகள் செரிமானமாகாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தவிர கிராமப்புற பகுதிகளில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலப்பரப்புகளையும் இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த மரத்தின் கரிக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் விபரீதம் புரியாமல் இம்மரத்தை வளர்க்கிறார்கள்.

குழிவெடிச்சான், குறுவைக் களஞ்சியம் போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் விளைந்த ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட விளைநிலங்களில் இப்போது சீமைக் கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அரசு உடனடியாக கருவேல மரங்களை வேரறுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தின் நால்வகை நிலப்பரப்புகளையும் சீமை கருவேலம் ஆக்கிரமித்து அழித்துவிடும்...’’ என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா.

2013ம் ஆண்டில், வைகை ஆற்றில் நிறைந்திருந்த கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி ‘சம உரிமை அமைப்பு’ உயர் நீதிமன்றத்தை அணுகியது. ‘பெரும் அபாயம் பொருந்திய கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்’ என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘அனைவரும் ஹெல்மெட் போட வேண்டும்’ என்ற உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அரசு, அந்த ஜீவாதார உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டது.

அவ்வழக்கைத் தொடுத்த சம உரிமை அமைப்பின் நிறுவனர் ஆனந்தராஜ், ‘‘தமிழகத்தின் இயற்கை வளங்களை மெல்லக் கொல்லும் விஷமாக இது ஊடுருவி வருகிறது. ஆனால் அரசு இந்த விபரீதத்தைப் புரிந்துகொள்ளவில்லை’’ என்று வருந்துகிறார்.‘‘சீமைக் கருவேல மரம் 15 அடி உயரத்துக்கு மேல் வளராது. ஆனால் வேர் 60 முதல் 70 அடி வரை பூமிக்குள் ஊடுருவும்.

அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் இந்த மரம் பாலைவனத்தில் கூட வளரும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கிராமசபைகளில் கருவேல மரங்களை அகற்றுவது பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‘34 லட்சம் சதுர மீட்டர் பரப்புக்கு மரங்களை அகற்றி விட்டோம்’ என்று அரசு அறிவித்தது. அந்தப்பணி தொடரவில்லை. மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருக்கிறோம்...’’ என்கிறார் ஆனந்தராஜ்.ஏற்கனவே விளைநிலங்களைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு எப்போதோ ஊன்றப்பட்ட இந்த விஷ விதை... உறக்கம் கலையுமா அரசு?

‘அனைவரும் ஹெல்மெட் போட வேண்டும்’ என்ற உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அரசு, ‘சீமைக் கருவேல மரங்களைப் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்’ என்ற ஜீவாதார உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டது!

விபரீதங்கள் என்ன?

*நிலத்தடி நீரை பெருமளவு உறிஞ்சுகிறது
*கடும் வெப்பம் பரப்புகிறது
*மேய்ச்சல் நிலங்கள், விளைநிலங்களை ஆக்கிரமித்து அழிக்கிறது
*கால்நடைகளை மலட்டுத்தன்மை அடையச் செய்கிறது
*வனவிலங்குகளின் உணவுச்சூழலை பாதிக்கிறது
*மூலிகைகள், பிற தாவரங்கள் வளராமல் உயிர்ச்சூழலையே அழிக்கிறது
*நீர்நிலைகளை ஆக்கிரமிக்கிறது
*இதன் இலைகள், விதைகள் மண்ணில் மக்கினால் பிற விதைகள் மலடாகி விடும்
*பறவைகள் சரணாலயத்தில் பரவி பறவைகள் வருகையைத் தடுக்கிறது

- வெ.நீலகண்டன்
படம்: பாலமுத்துகிருஷ்ணன்