மனசுக்கு பிடிச்சதை மட்டுமே செய்வேன்



விஜய்சேதுபதி

‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ - இந்த டயலாக் தமிழ்நாட்டில் ஆல் டைம் ஃபேவரிட். புதிதாய்க் கிளம்பி வந்த நட்சத்திரங்களில் விஜய்சேதுபதிக்கு கிடைத்தது பெரும் அங்கீகாரம்! ‘ஆரஞ்சு மிட்டாய்’ முடித்து ரிலீஸுக்கு காத்திருக்க, நம்மிடம் பேசினார் சேதுபதி.‘‘நினைச்சா இப்பவும் ஆச்சரியமா இருக்கு. அக்கவுன்டன்ட்டா இருந்தவன் எப்படி சினிமாவுக்கு வந்தேன்னு தெரிய மாட்டேங்குது. தங்கச்சி, தம்பி, அண்ணனெல்லாம் கேட்பாங்க...

‘நீ எப்படிடா இந்த சினிமாவுக்கு வந்தே’ன்னு! அவங்களுக்கும் ‘தெரியலை’ன்னுதான் பதில் சொல்வேன். இவ்வளவு படம் பண்ணிட்டு இப்படிச் சொல்றது திமிர்னு நினைக்காதீங்க. கொஞ்ச நாள் இருந்துட்டு வேற வேலையைப் பார்க்கப் போயிடலாம்னு வந்ததுதான். ஆனா, இந்த இடம் விட மாட்டேங்குது. அலைந்து, திரிந்து களைச்ச பிறகுதான் நம்பிக்கையே வருது. இந்த இடத்தில் ஜெயிச்சுக் காட்டணும்னு வெறி வருது.

 ஆனா, இந்த  இடம் ரொம்ப ட்ரிக்கியான இடம். எப்ப வேணும்னாலும், யார் வேணும்னாலும் இங்கிருந்து தூக்கி வீசப்படலாம். எல்லாத்துக்கும் ரெடியா இருந்தபடிதான் இங்கே ஜெயிச்சுக் காட்டணும்.

பொய் சொல்லாம சொன்னால், சினிமாவுக்கு வந்தது ஆர்வக் கோளாறால்தான். நம்மகிட்டேயும் ஹீரோ மெட்டீரியல் இருக்குங்கறதெல்லாம் அப்புறம் கண்டுபிடிச்சதுதான்!’’‘‘உங்க முதல் தயாரிப்பு, வசனம் வேற... டிரெய்லரெல்லாம் கலர் கொடுக்கிறது... எப்படியிருக்கும் ‘ஆரஞ்சு மிட்டாய்’?’’

‘‘ரொம்ப மெனக்கெட்டு வராதீங்க. கருத்தெல்லாம் சொல்லாது படம். ஆனால், எமோஷனல் சீன்ஸ் இருக்கு. இது ஒரு பயணம். நம்மில் நிறைய பேருக்கு, பக்கத்தில் இருக்கும்போது ஒருத்தரோட அருமை தெரியாது. கவனிக்காம விட்டிருப்போம். அலட்சியப்படுத்தியிருப்போம். மனுஷ இயல்பு அது. மத்தவங்களை விட ஒரு படி மேல இருக்கணும்னு நினைக்கிறதுனால வர்ற இயல்பான குணம் அது. அப்படித் தவறவிட்ட ஒருத்தரை அதே சாயலில் மீண்டும் பார்த்தால், நம்ம வாழ்க்கையில் அவர் திரும்பவும் வந்தால் எப்படியிருக்கும்... அதுதான் படம்.

ஒரு பயணத்தின் நடுவில், ‘ஏண்டா வண்டியில் இவரை ஏத்தினோம்’னு யோசிக்கிறதுக்குள் அந்த மனுஷன் செய்கிற அட்டகாசங்கள், அதனால் புரிகிற சில விஷயங்கள்னு படம் அடுத்தடுத்து போகும். ரொம்ப தன்மையான படம்னு என்னால் சொல்லிக்க முடியும்.

அடடா, ஒரு நல்ல படம் செய்திட்டோம்னு எப்பவும் மனசில் நிறுத்தி வைக்க முடியும். வெற்றி, தோல்வி எல்லாம் மகாஜனங்கள் செளகரியம். ஆனால், ஒரு நல்ல விஷயம் செய்து கொடுத்துட்டோம்னு திருப்தி இருக்கு!’’‘‘கவலையே படாமல் வயதானவர் கெட் அப் போடுறீங்க, நண்பர்கள் சொன்னா ஒரு சின்ன கேரக்டரில் வந்துட்டு போறீங்க... எதற்கு இதெல்லாம்?’’

‘‘இந்தக் கேரக்டரில் கூட வேற ஒருத்தரைத்தான் நினைச்சிருந்தேன். 55 வயசு நபரா வரணும்னு சொன்ன பிறகு அவர் பிஸி ஆயிட்டாரு. சில கதைகள் நம்ம போக்கில் வந்திருச்சுன்னா, அதை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்க முடியாது. உடனே செய்திடணும். கொஞ்சம் வெயிட் போட்டு, ரெண்டு மணி நேரம் மேக்கப் போட்டால் என்னையே அந்த வயசில் சொல்லலாம் போல இருந்துச்சு.

பண்ணிட்டேன். இது விஜய்சேதுபதி கொடுத்த வித்தியாசமில்லை, டைரக்டர்கள் கொடுத்த த்தியாசமில்லை. இது இப்ப ரசிகர்கள் கேட்கிற வித்தியாசம். ‘புரிஞ்சுக்கோ... புரிஞ்சுக்கோ...’ன்னு கஷ்டப்படுத்தாம, திணிக்காம ஒரு நல்ல படம். பிஜூ விஷ்வநாத்தை எனக்கு ரொம்ப நாளாகத் தெரியும். நான்தான் வேணும்னு கேட்ட சில புரொடியூசர்களிடம் இவரை விட்டு கதை சொன்னேன்.

அவங்க தயங்க, நானே முதல் தயாரிப்பில் கொண்டு வர்றேன். கோபமா, சீரியஸா சொல்றதை, கலாட்டா பண்ணி, சிரிக்க வச்சு சொன்னா சுலபமா புரியும். நல்லா இருக்குன்னா ‘படம் நல்லா இருக்கு’ன்னு மக்கள் ஊர் முழுக்க சொல்வாங்க.

அப்படிப் பரவித்தான் இப்ப படங்கள் ஓடுது. இப்ப படங்களில் சின்னதா அறிவுரை சொல்லி, சின்னதா பொழுதுபோக்கு காட்டி, அதிலும் சின்னதா பிரச்னைகள் பேசலாம். அவ்வளவுதான் முடியும்!’’‘‘நல்ல சினிமாவைத் தேடணும்கிற உங்க அக்கறை ஆச்சரியப்படுத்துதே..!’’

‘‘ ‘புறம்போக்கு’ - நான் செய்த படங்களில் ரொம்ப முக்கியமான படம். தூக்கு போடுகிற தொழிலாளியா நடிப்பது எல்லாம் மறுபடியும் கிடைக்கும்னு சொல்லிட முடியாது. நிஜத்துலயே அப்படி மனிதர்கள் இப்போ இல்லை.

ஜனநாதன் சார் எவ்வளவு உழைச்சிருக்கார்னு எனக்குத் தெரியும். உலகெங்கும் மரண தண்டனையைப் பத்தி பேசிட்டு இருக்கும்போது, என்னாலான பங்களிப்பு இதுதான். ‘ஆரஞ்சு மிட்டாய்’ கூட அதே ரீதியிலான ஒரு பிரயாணம்தான்!’’

‘‘ ‘பண்ணையாரும் பத்மினி’யும் மாதிரி பல சிரமங்களோட ஒரு படம் செய்து, அது சரியாப் போய்ச் சேரலைன்னா மனசு தளர்ந்துடாதா?’’

‘‘அதை சரியான சமயத்தில் கொண்டு வந்திருக்கலாம். கொஞ்சம் கோபமும், நிறைய வேதனையும் வரும். ஆனால், அடுத்த விஷயத்தில் அக்கறைப்பட்டு நகர்ந்திட வேண்டியதுதான். சினிமா பண்ணுவதுதான் என் வேலை.

 நான் சொல்வதுதான் நியாயம்னு நிரூபிக்கிறதில்லை. ஏதாவது எண்ணம் இருந்தால் சொல்லுவேன். சரியில்லைன்னா ‘அப்படிங்களா... சரி... மாறிடுவோம்’னு அடுத்த படத்திற்கு போயிட வேண்டியதுதான்.

சில படங்களை செய்யும்போது  ‘வேண்டாம்டா’ன்னு பல பேர் சொல்லியிருக்காங்க. மீறி செய்து அடியும் வாங்கியிருக்கேன்; அப்ளாஸும் வாங்கியிருக்கேன். இப்பத்தான் என்னை ஒரு நடிகனா மேம்படுத்துற காலங்கள் வந்துக்கிட்டு இருக்கு. மனசுக்குப் பிடிச்சதை, மனசுக்குப் பட்டதை மட்டுமே பண்றேன்!’’

‘‘உங்களோட வந்த சிவகார்த்திகேயன் திட்டமிட்டு போகிறார். நீங்க அப்படியில்லாத மாதிரி தோணுது..?’’‘‘உங்களுக்கு சரியாகத்தான் தோணியிருக்கு. நம்மகிட்ட திட்டமே கிடையாது. எது நடக்கும், என்ன நடக்கும்னு தெரியாதபோது திட்டம் போட்டு என்ன பயன்? வந்ததில் நல்லதா பண்றேன். பர்சனலா தமிழ் மக்கள் என்னை அன்பா வச்சிருக்காங்க.

நான் எதை நோக்கி உழைச்சேனோ, அதற்கான பலன்களை அனுபவிக்கிறேன். நான் எதையும் கணக்கு வச்சிருக்கறதில்லை. எனக்கு முந்தி வந்தவங்க பலர் இப்ப களத்தில் இல்லை. அவங்களுக்கு எந்த ப்ளானும் இருந்திருக்காதுன்னு சொல்ல முடியாது. இதுக்கு என்ன சொல்ல முடியும்? என்னால் ஒரு கோடு போட்டு அது மாதிரி பழகி வாழ முடியாது!’’

‘‘சக ஹீரோக்கள் பாராட்டுகிறார்களா?’’‘‘மதிக்கிறாங்க. அது அவங்க சொல்ற ரெண்டு மூணு வார்த்தைகளில் தெரிஞ்சிடுது. அது போதாதா?’’‘‘குடும்பம் பத்தி...’’‘‘மனைவி... 6வது படிக்கிற பையன், ஒரு பொண்ணு.

தம்பி, தங்கச்சி, அண்ணன்னு பெரிய குடும்பம். மனைவிக்கும், பொண்ணுக்கும் ‘புறம்போக்கு’ பார்த்துட்டு வாங்கன்னு டிக்கெட் கொடுத்தேன். பார்த்துட்டு வந்த பொண்ணுகிட்ட ‘எப்படி நடிச்சிருக்கேன்’னு கேட்டேன். ‘மூணு பேரும் நல்லா நடிச்சிருக்கீங்க’ன்னு சொல்லுச்சு. இந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை!’’

இப்ப படங்களில் சின்னதா அறிவுரை சொல்லி, சின்னதா பொழுதுபோக்கு காட்டி, அதிலும் சின்னதா பிரச்னைகள் பேசலாம். அவ்வளவுதான் முடியும்!

- நா.கதிர்வேலன்