வருமானத்தை இழக்காமல் மதுவிலக்கை அமல்படுத்தலாம்!



‘‘தி முக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம்’’ என்று அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் கலைஞர். நேற்றுவரை ‘மதுவிலக்கு வேண்டும்’ என்று கேட்ட பலரும், ‘‘அப்படியானால் அரசுக்கு வருமானம் எங்கிருந்து வரும்?’’ என ‘நடுநிலையோடு’ கேட்கிறார்கள். ஆளும்கட்சியும், ‘‘மதுவிலக்கு சாத்தியமில்லை’’ என்கிறது.

சில பொருளாதார நிபுணர்களும் அதையே வழிமொழிகிறார்கள். காரணம், தமிழக அரசின் மொத்த வருவாயில் 31% மது விற்பனை மூலம் கிடைக்கிறது. ‘‘டாஸ்மாக்கை மூடினால் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும். மாநிலமே திவாலாகி விடும்’’ என்ற குரலும் கேட்கிறது. என்றால், மதுவிலக்கு சாத்தியமே இல்லையா?

தமிழக அரசின் சொந்த வரி வருவாய், ரூ.96,082 கோடி. இதில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வணிக வரி மற்றும் கலால் வரி ரூ.29,672 கோடி. தமிழக அரசு நிறுவனங்களில் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரும் நிறுவனம் வேறில்லை. வரவை மீறி செலவு அதிகரித்து விட்ட நிலையில் ஒவ்வோராண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டே போட வேண்டியிருக்கிறது.

மாநிலத்தின் நேரடிக்கடன் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி. தவிர மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் போன்ற நிறுவனங்களின் கடன் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் ஏறிவிட்டது. ஆண்டுதோறும் வட்டி மட்டுமே ரூ.17,856 கோடி கட்ட வேண்டியிருக்கிறது. இப்படியான சூழலில் அமுதசுரபியாக இருக்கும் டாஸ்மாக்கை மூடினால் எப்படி சமாளிப்பது?

‘‘அரசு திறந்த மனதோடு சில சீர்திருத்தங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுத்தால் டாஸ்மாக் வருமானத்தை விடவும் பல மடங்கு கூடுதல் வருமானத்தைப் பெற்று மதுவிலக்கை அமல்படுத்த முடியும்’’ என்கிறார்கள் நிர்வாக அனுபவம் மிக்கவர்கள். அதற்கு ஆதாரமாக, அவர்கள் முன்வைக்கிற கணக்குகள் நம்பிக்கை அளிக்கின்றன.

‘‘நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் எது முக்கியம் என்ற கேள்விக்கு அக்கறையோடு பதில் தேடுகிற ஒரு அரசால் நிச்சயம் மதுவிலக்கைக் கொண்டு வரமுடியும். தேவையில்லாத செலவைக் குறைப்பதன் மூலமும், வருவாயைப் பெருக்குவதன் மூலமும் இதை எளிதாக சாத்தியப்படுத்தலாம்...’’ என்கிறார் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம். நெடுங்காலமாக மதுவுக்கு எதிராகப் போராடி வருகிறது இந்த அமைப்பு.

“தமிழகத்தின் மொத்த வருவாய் வரவு ரூ.1,42,678 கோடி. செலவு, ரூ.1,47,287 கோடி. இதில் ரூ.60,000 கோடி ஊழியர்களின் சம்பளத்துக்கும், பென்சனுக்கும் போகிறது. ரூ.59,185 கோடி இலவசத் திட்டங்களுக்கும், மானியங்களுக்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக்‌சி, கிரைண்டர் இலவசத் திட்டத்துக்கு 8,418 கோடியும் திருமண உதவித்திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு 3,106 கோடியும், இலவச லேப்டாப் திட்டத்துக்கு 6112 கோடியும், ஆடு-மாடு திட்டத்துக்கு 1113 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் டாஸ்மாக் மூலம் பெண்களின் தாலியைப் பறித்துக்கொண்டு இன்னொரு பக்கம் தாலிக்குத் தங்கம் கொடுப்பதில் என்ன இருக்கிறது? ‘உங்கள் பிள்ளைகள் மது குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க வேண்டுமா?

அல்லது இலவச லேப்டாப் வேண்டுமா’ என்று தாய்மார்களிடம் கேட்டால் நிச்சயம் லேப்டாப்பை சீண்ட மாட்டார்கள். இலவசங்கள் மக்கள் வாழ்க்கைத் தரத்தை துளியளவும் உயர்த்தவில்லை என்பதே யதார்த்தம். இலவசங்களைத் தர இவ்வளவு செலவென்றால், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், பராமரிக்கவும் இந்தாண்டு 10,364 கோடி செலவிடப்படுகிறது.

அரிசி, கெரசின் என அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் மூலம் தருவதை முறைப்படுத்த வேண்டும். மூன்றில் ஒரு பங்கு மக்களுக்குத்தான் இவை முறையாகப் போய்ச் சேர்வதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

 கேஸ் மானியத்தை முறைப்படுத்தியதைப் போல உணவு மானியத்தையும் முறைப்படுத்தினால் இதில் பெருமளவு செலவைத் தடுக்க முடியும். மின்சார மானியத்துக்கென்று ரூ.22,430 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதிலும் நிறைய தவறுகள் நடக்கின்றன. மின் திருட்டைத் தடுத்து, முறைப்படுத்தினால் 20 சதவீதம் இதில் மிச்சப்படுத்த முடியும்.

இருக்கும் வருவாயை இலவசத் திட்டங்களில் கொட்டி விடுவதால் பிற திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கிறது. அதற்கு வட்டியாக பெரும் தொகையை இழக்க வேண்டியுள்ளது. இலவசங்களை நிறுத்தினால் கடனும், வட்டிச்செலவும் குறையும்.

வரி வருவாயைப் பெருக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது. சிறு கடைகள் தொடங்கி பெட்ரோல், டீசல் விற்பனை வரை தினமும் பல நூறு கோடி வணிக வரி வரவேண்டும். ஆனால், இந்த ஆண்டு ரூ.72,068 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதில் ரூ.22,375 கோடி டாஸ்மாக் மூலம் வந்தது.

மீதம்தான் பிற வணிகங்களில் இருந்து வந்துள்ளது. அதிகாரிகள் வரி வசூலிக்க ஆர்வம் காட்டுவதில்லை. முறைப்படி வசூலித்தால் வரி வருமானம் உயரும். 1988ல் என் நண்பர் ஒருவர் சென்னையில் 800 சதுர அடிக்கு ஒரு வீடு கட்டினார். ஆறு மாதத்துக்கு ஒரு முறை 441 ரூபாய் வரி. இப்போது 25 ஆண்டுகள் ஓடிவிட்டன.

 2800 சதுர அடிக்கு வீட்டை விரிவுபடுத்தி விட்டார். ஆனால் இப்போதும் அவரிடம் 441 ரூபாய்தான் வசூலிக்கிறார்கள். ‘நான் வீட்டை விரிவுபடுத்தி விட்டேன், வரியை அதிகப்படுத்துங்கள்’ என்று இதுவரை 3 முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துவிட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்த லட்சணத்தில்தான் வரிவசூல் நடக்கிறது.

ஆற்று மணல் விற்பனை பல ஆயிரம் கோடிக்கு நடக்கிறது. ஆனால் இந்தாண்டு அரசு நிர்ணயித்திருக்கும் இலக்கு வெறும் 150 கோடி. இதைவிட பலமடங்கு தொகையை இடைத்தரகர்கள் சாப்பிடுகிறார்கள்.

தாதுமணல், கிரானைட் வியாபாரத்தில் லட்சம் கோடிகள் புழங்குவதாகச் சொல்கிறார்கள். இந்த விற்பனைகளை முறைப்படுத்தினாலே டாஸ்மாக் வருவாயை விட கூடுதல் வருவாய் கிடைத்துவிடும். இது ஏதோ வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் பணத்தைக் கொண்டுவருவது போன்ற மாய வித்தை இல்லை. கண்ணெதிரே தெரியும் உண்மை. 

மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்துவிடும் என்று ஒரு மொக்கைக் காரணம் சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்வது அரசின் கையாலாகாத்தனம். தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கைப்படி 2005-2014 வரையிலான 10 ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவுகள் அதிகம் நடந்தது தமிழகத்தில்தான். சுமார் 1509 பேர் இறந்திருக்கிறார்கள். மிகக்குறைவாக நடந்தது குஜராத்தில். அங்கு 843 பேர்.

தமிழகத்தில் அரசே மதுக்கடைகள் நடத்தியபோதும் கள்ளச்சாராயச் சாவுகள் நடக்கவே செய்கின்றன. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் சாவுகள் குறைந்திருக்கின்றன. மதுவிலக்கு கொண்டு வருவதால் இப்போது நடப்பதைப் போல பத்து மடங்கு சாவுகள் அதிகமானாலும் கவலைப்படத் தேவையில்லை. டாஸ்மாக் சாவுகளோடு ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை சிறிதுதான்’’ என்கிறார் செந்தில் ஆறுமுகம். தேர்தல் லாபங்களைக் கைவிட்டு சமூக நோக்கோடு மனது வைத்தால் மதுவிலக்கு நிச்சயம் சாத்தியம்தான்!

ஈடுகட்டும் வருமானம்!

2015-16ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் கிடைக்கவுள்ள வருவாய் ரூ.29,672 கோடி. தேவையற்ற இலவசங்களை நிறுத்துவதன் மூலமும், வரிகளை முறையாக வசூலிப்பதன் மூலமும், வருவாய் வகைகளை முறைப்படுத்துவதன் மூலமும் இதைவிட கணிசமான வருவாயை ஈட்ட முடியும் என்கிறார்கள் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர். அவர்கள் தருகிற மாதிரி பட்ஜெட்.

இலவசங்களை நிறுத்தினால்?
(தொகை கோடிகளில், ஒரு ஆண்டுக்கு)

மிக்‌சி/ கிரைண்டர்    -    1684
திருமண உதவி மற்றும்
தாலிக்குத் தங்கம்    -    600
லேப்டாப் திட்டம்    -    1222
இலவசப் பொருட்கள்
வழங்குதல் மற்றும்
பராமரிப்புக்கான செலவு    - 10,364
ஆடு மாடு வழங்குதல்    - 222
உணவு ரேஷனை
முறைப்படுத்தினால்
மிச்சமாகும் தொகை    -    3320
மின் மானியத்தை
முறைப்படுத்தினால்
மிச்சமாகும் தொகை    -    900
மொத்தம்        18,312

ஆற்று மணல், தாது மணல், கிரானைட் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலமும், வரிகளை முறைப்படுத்தி வசூலிப்பதன் மூலமும் ரூ.50,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.மதுவிலக்கால் கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்துவிடும் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்வது அரசின் கையாலாகாத்தனம்.


- வெ.நீலகண்டன்