உலக மகா தோல்வி!



விநோத ரஸ மஞ்சரி

‘என்னா அடி! அவனவன் டயர்டாகுற அளவுக்கு என்னைய அடிச்சு அனுப்புனான்!’ - இது வடிவேலு டயலாக் இல்லைங்க... பசிபிக் நாடுகளில் ஒன்றான மைக்ரோனேஷியாவின் கால்பந்து அணி நிஜமாகவே இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கிறது. நடந்து முடிந்திருக்கும் பசிபிக் விளையாட்டுகளில் மூன்று மேட்ச்சுகளில் விளையாடிய இந்த அணி, எதிரணிகளை 114 கோல் அடிக்க விட்டிருக்கிறது. பதிலுக்கு இவர்கள் ஒரே ஒரு கோல் கூட அடிக்கவில்லை!

கால்பந்து விளையாட்டில் கரை கண்ட ஜெர்மனி, பிரேசில் போன்ற அணிகளிடம் இப்படித் தோற்றிருந்தால்கூடப் பரவாயில்லை. ஆடியதெல்லாம் மொக்கை அணிகளுடன்தான். முதலில் டாஹிடி என்ற அணியிடம் 30-0 என்ற கோல் கணக்கில் தோற்ற இவர்கள், அடுத்து ஃபிஜி அணியிடம் 38-0 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்தார்கள். இறுதியாக வான்யுவாடூ எனும் அணியுடன் ஆடியவர்கள் 46க்கு 0 என்ற கோல் கணக்கில் கொத்து பரோட்டா ஆனார்கள். இதனால் உலகின் மிக மோசமான கால்பந்து அணி என்ற ‘பெருமை’யை கதறக் கதற கையில் எடுத்திருக்கிறது மைக்ரோனேஷியா.

உலகக் கால்பந்து தரவரிசையில் மொத்தம் இடம் பெற்றிருப்பதே 209 அணிகள்தான். அதில் மைக்ரோனேஷியாவைப் புரட்டி எடுத்த அந்த பராக்கிரம அணிகள் பெற்றிருக்கும் ரேங்க் என்ன தெரியுமா? டாஹிடி - 188, ஃபிஜி - 195, வான்யுவாடூ - 200. இப்படி லாஸ்ட் பென்ச் பார்ட்டிகளே லாடம் கட்டும் அளவுக்கு மைக்ரோனேஷியாவிடம் என்ன வீக்னஸ்?

‘‘எங்கள் அணியில் எல்லா வீரர்களும் 23 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்தக் குட்டிப் பையன்கள் இவ்வளவு போராடியதே பெரிய விஷயம்!’’ என்கிறார் இந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டான் ஃபாஸ்டர்.ஆனால், மீடியாக்களில் உண்மை வேறு மாதிரி கசிகிறது. வடிவேலுவும் சிபிராஜும் ஒரு படத்தில் கிரிக்கெட் டீமுக்கு ஆள் சேர்ப்பார்களே...

அந்த மாதிரி கிராமங்களில் ஆடு மேய்த்த, மீன் பிடித்த இளைஞர்களை எல்லாம் திரட்டி வந்து, குறுகிய காலத்தில் டீம் உருவாக்கியிருக்கிறது மைக்ரோனேஷியா. குறிப்பாக, அந்த அணியின் கோல் கீப்பராக செயல்பட்ட டோமினிக் கடாட், மூன்று வாரங்களுக்கு முன்னால்தான் கீப்பிங் கற்றுக்கொள்ளவே ஆரம்பித்திருக்கிறார்.மூணு வாரத்தில் கை வருவதற்கு ஃபுட்பால் என்ன சிவப்பழகா பாஸ்!

- ரெமோ