கிளிக்கி கார்க்கி! தந்த புது மொழி!



செமயாய் க்ளிக் ஆகியிருக்கிறது ‘கிளிக்கி’. ஒரு சினிமாவுக்காக புத்தம் புதிதாய் ஒரு மொழியே உருவாக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுதான் முதல் முறை. அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருப்பது ‘பாகுபலி’.

படத்தில் காட்டுவாசி காளகேயர்கள் பேசுகிற அந்த கச்சா முச்சா மொழியை ஒரு ஃப்ளோவில்தான் அடித்து விட்டிருப்பார்கள் என்று பார்த்தால், அதுதான் கிளிக்கியாம். 750 சொற்களையும் 40 இலக்கண விதிகளையும் உருவாக்கி அந்த மொழியை கச்சிதமாய் கட்டமைத்திருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘அப்பா வைரமுத்துவுக்கு கிளிக்கி சொல்லிக்கொடுத்தீங்களா?’ என்ற முதல் கேள்வியை சத்தியமாய் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை!

‘‘சொல்லியெல்லாம் கொடுக்கலைங்க. ஆனா, ஒரு வருஷத்துக்கு முன்னாடியே அப்பாகிட்ட இதைப் பத்தி சொன்னேன். ஹாலிவுட்ல ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ மாதிரியான பிரமாண்ட படங்களுக்காக இப்படி பிரத்யேக மொழி உருவாக்கப்பட்டிருக்கு. இந்தியாவில் இதுவரை பண்ணலை.

‘இது நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும்’னு அப்பா அப்பவே சொன்னார். கூடவே ‘பாகுபலி’ வசனங்களையும் அப்பாவுக்கு வாசிச்சுக் காட்டினேன். ‘நல்லா இருக்கு... அதை விட யார் சாயலும் இல்லாம இருக்கு’னு சொன்னார். அதான் பாராட்டு!’’‘‘கிளிக்கி... அதென்ன பேர்?’’

‘‘நான் ஆஸ்திரேலியாவுல படிக்கும்போது, ரெண்டு தமிழ்க் குழந்தைகளை தினமும் ரெண்டு மணி நேரம் கவனிச்சுக்குற வேலையைப் பார்த்தேன். அவங்ககிட்ட ஒரு நாள் பேசிக்கிட்டிருக்கும்போது, புதுசா ஒரு மொழியைக் கத்துக்கறதுல என்னென்ன சிக்கல்கள் இருக்குன்னு அடுக்கினாங்க.

 சைலன்ட் லெட்டர்ஸ், ஆண் பால் - பெண் பால் வித்தியாசங்கள்னு ஒவ்வொரு மொழியிலும் டஃப் கொடுக்க ஆயிரம் இருக்கு. அதெல்லாம் இல்லாம சுலபமா கத்துக்குற மாதிரி ஒரு சிம்பிள் மொழியை உருவாக்கலாம்னு நாங்க முயற்சி பண்ணினோம்.

நூறு வார்த்தைகள் வரைக்கும் அதில் உருவாக்கினோம். அந்த மொழியில் பாட்டெல்லாம் எழுதிப் பாடியிருக்கோம். சும்மா ஒரு மவுஸ் க்ளிக் மாதிரி சுலபமா இருக்கணும்னு அந்த மொழிக்கு ‘க்ளிக்’(cliq)னு பேரு வச்சோம்.

‘பாகுபலி’ படத்தில் காளகேயர்களுக்கு ஒரு தனித்த மொழி வேணும்னு ராஜமௌலி சார் சொன்னப்போ, எனக்கு ‘க்ளிக்’ தான் க்ளிக் ஆச்சு. ‘அதையே டெவலப் பண்ணலாமா’ன்னு கேட்டேன். சந்தோஷமா சம்மதிச்சார்.

ஆனா, இதில் காளகேயர்கள் கொடூரமானவங்க. அதனால மொழியும் ரொம்ப முரட்டுத்தனமா இருக்கணும்... பேசும்போதே பயம் வரணும்ங்கிறது அவரோட கண்டிஷன்.

அதனால வார்த்தைகள் எல்லாத்தையும் வல்லினம் போட்டு அழுத்தமா உருவாக்கினேன். நூறு வார்த்தைகளை நினைவுபடுத்தவும் புதுசா 650 வார்த்தைகளைச் சேர்க்கவும் எனக்கு ஒரு மாசம் பிடிச்சது.

அதுக்கப்புறம் ஷூட்டிங் சமயத்திலும் இந்த மொழி வளர்ந்துக்கிட்டே போச்சு. காளகேயர்கள் போர்க்காட்சிகளை மட்டும் 120 நாட்கள் ஷூட் பண்ணினாங்க. அவங்க பேசுற டயலாக்கில் சின்னதா மாற்றம் பண்ணினாலோ, புதுசா டயலாக் சேர்த்தாலோ ஸ்பாட்ல இருந்து எனக்கு போன் வரும்.

நான் தேவைப்படுற வாக்கியங்களை கிளிக்கி மொழியில உருவாக்கி, அதைப் பேசி வாட்ஸ் அப்ல அனுப்பி வைப்பேன். ‘க்ளிக்’ அப்படிங்கற பழைய பேர் ரொம்ப ஆங்கிலமா இருந்தது. ஒரு பழங்குடியின மொழிக்கு ஏத்த மாதிரி சவுண்ட் வரத்தான் அதை ‘கிளிக்கி’ன்னு மாத்தினோம்!’’

‘‘குழந்தைகளுக்காக நவீன ரைம்ஸ், மொழிக்கல்வினு நிறைய செய்யறீங்க... உங்களையும் ராஜமௌலி யையும் இணைக்குறது இந்த ஆர்வமா?’’‘‘இருக்கலாம். குழந்தைகளோட இருக்குற நேரம் பொக்கிஷம். இப்ப கூட நான் குழந்தைகளோட செலவிட்ட நேரம்தான் ‘கிளிக்கி’யா மாறியிருக்கு. என் பையன் ஹைக்கூவோட கண்களால இந்த உலகைப் பார்க்கும்போது, அவன் காதுகளால இந்த உலகத்தைக் கேட்கும்போது...

எல்லாமே புதுசா இருக்கு. நம்ம மனத் தடைகள் உடையுது. உலகத்தை நோக்கி கேள்வி எழுப்ப குழந்தைகள்தான் நமக்கு சொல்லித் தர்றாங்க. இதே மாதிரி எண்ணம் ராஜமௌலி சாருக்கும் உண்டு. அவர் கொடுக்குற வித்தியாசமான சூழ்நிலைகளே நமக்குப் பெரிய ஆர்வத்தை உண்டு பண்ணும்!’’

‘‘எல்லா மொழியிலும் தயாரான படம் இது. ‘கிளிக்கி’ மட்டும் மாறலை. இப்படி ஒரு வொர்க் ஒரு தமிழ்ப் பாடலாசிரியர்கிட்ட இருந்து வாங்கப்பட்டிருக்கு. தொழில்நுட்பத்தில் தமிழ் அடுத்த கட்டத்தில் இருக்கா?’’‘‘நிச்சயமா! எங்க அப்பா, தம்பி அளவுக்கு நான் அதிகமா இலக்கியம் படிச்சவன் இல்லை.

ஆனா, ஒரே துறையில ஆழம் ஆழமா போய் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்குறதை விட, பல துறைகள்ல கொஞ்சம் கொஞ்சம் விஷயங்களை கத்துக்கறதுதான் இப்போ அதிகம் உதவுது. மல்டி ஸ்கில்டுனு சொல்வாங்க.

அதுதான் தமிழுக்கும் இப்போ தேவைப்படுது. தமிழையும் தொழில்நுட்பத்தையும் இணைச்சு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் நான் எப்பவும் முயற்சி செய்து பார்ப்பேன். அந்த விதத்தில் ‘கிளிக்கி’ உருவாக்குற வாய்ப்பு எனக்குக் கிடைச்சதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்!’’‘‘750 சொற்கள்... 40 இலக்கண விதிகள்... நெட்ல போட்டு நாட்டுக்கு அர்ப்பணிச்சிட வேண்டியதுதானே..?’’

‘‘செய்யணும். இப்பவே ஆந்திராவில் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் ‘கிளிக்கி’ மொழியில பேசிக்கிறாங்களாம். அதுக்கு புது சொற்கள் வேணும்னு கேக்கறாங்க. இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துற 50 வாக்கியங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கேன்.

‘பாகுபலி’யில காளகேயர் தலைவனா நடிச்ச பிரபாகரை வச்சே அதைப் பேச வச்சு ஆன்லைன்ல ஒரு டியூட்டோரியலா போடப் போறாங்க. ‘பாகுபலி’ அடுத்த பாகமும் வந்த பிறகு, இந்த மொழியை முழுமையா நெட்ல கற்பிக்கலாம்னு ப்ளான் இருக்கு!’’

மதன் கார்க்கி உருவாக்கியிருக்கும் கிளிக்கி அகராதியில் சில சாம்பிள்ஸ்

ஐ லவ் யூ - மின் மூவா நிம்
எனக்கு பசிக்குது - மின் ஷ்க்கு க்ருப்பியி
முட்டாள் மாதிரி பேசாதே - டாம்பாடம்பா  ஜிவியா பாஹா-னா
ஹாய் - சாபா
பை - பாசா
ஒரு கப் டீ கொடு - மின் ஷ்க்கு ப்ராட்     உனோஆ தாப் தாய்

- நவநீதன்

மாடல்: சுபர்னா
படம்: புதூர் சரவணன்