சபலம்



‘‘ஜோதி, நான் ஆறாம் தெருவில் இருக்குற மக வீட்டுக்குப் போய் திருப்பதி பிரசாதத்தைக் கொடுத்துட்டு வந்துடறேன். நீ வீட்டை ஒழுங்கா பெருக்கி வை!’’ - வேலைக்காரியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள் மனைவி.

வாசலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அண்ணாமலை உஷாரானார். இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. மெல்ல நகர்ந்து பூனை போல வீட்டுக்குள் சென்றார். சமையல் அறையில் குனிந்து நிமிர்ந்து பெருக்கிக் கொண்டிருந்த ஜோதிக்கு இவரைப் பார்த்ததும் பதற்றம்.

‘‘என்ன எஜமான் இந்த நேரத்துல இங்க?’’என்ன சொல்லி அவளை சரிக்கட்டுவது? அண்ணாமலைக்குப் புரியவில்லை. வியர்த்தது.‘‘ஒண்ணுமில்லை!’’ ஆனால், அவர் கைகள் பேராவலோடு துரிதமாய் இயங்கின.‘‘அய்யா, வேண்டாம். அம்மாவுக்குத் தெரிஞ்சா...’’ - ஜோதி பதறினாள்.‘‘அம்மாகிட்ட சொன்னா உன்னை வேலையை விட்டே விரட்டிடுவேன்!’’ என்றதும் அவள் மறுபேச்சு பேசவில்லை.

அவர் எப்போதும் இப்படித்தான். சபலக்காரர். நினைத்ததை முடிக்காமல் போகமாட்டார். அறுபது வயதைத் தாண்டினாலும், குழந்தை மாதிரி திருப்பதி லட்டை திருட்டுத்தனமாக ருசிக்கும் சர்க்கரை வியாதிக்காரர். ‘‘லட்டு குறைஞ்சிருக்குறதைப் பார்த்ததும் அம்மா என்னைத்தான் திட்டுவாங்க. இந்தாளுக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா!’’ - தலையில் அடித்துக் கொண்டாள் ஜோதி.

எஸ்.ஆதினமிளகி