நம்பிக்கை



‘‘ஹலோ, பிரகாஷ்... உன் ஆளு நந்தினி உன்னை ஏமாத்திட்டாடா!’’‘‘சந்துரு, என்னடா சொல்றே?’’‘‘ஆமாடா. ‘ரெண்டு உடம்பு, ஆனா ஓர் உயிர்’னு சொல்லுவியே, அந்த நந்தினிதான். உன்னை விட பெரிய இடம் வந்ததும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா!

’’‘‘நிஜமாவா? உனக்கு யார் சொன்னது?’‘‘‘நந்தினியே போன் பண்ணி சொன்னாள். அடுத்த மாசம் பத்தாம் தேதி கல்யாணம்!’’ போனை வைத்த பிரகாஷுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது. உடனே நந்தினி நம்பரை அழுத்தினான்.‘‘நந்தினி, நான் கேள்விப்பட்டது உண்மையா?’’

‘‘என்ன கேள்விப்பட்டீங்க?’’‘‘சும்மா நடிக்காதே! என்னைவிட பணக்காரன் வந்ததும் என்னைத் தூக்கி வீசிட்டு அவனுக்கு கழுத்தை நீட்ட சம்மதம் சொல்லிட்டியே! வெட்கமா இல்லை?’’‘‘சந்துருகிட்ட அப்படி ஒரு பொய்யைச் சொன்னதே நான்தான்!’’

‘‘பொய்யா... எதுக்கு?’’‘‘நம்ம காதலுக்கு நீ உண்மையா இருந்தா, சந்துரு மட்டுமில்ல, ஆண்டவனே சொன்னாலும் அந்த வார்த்தையை நம்பி இருக்கக் கூடாது. காதலிச்சா மட்டும் போதாது. இதயத்தைப் புரிஞ்சிருக்கணும் பிரகாஷ்.

அப்பதான் கல்யாணத்துக்குப் பிறகும் யார் எதைச் சொன்னாலும்  நாம ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்படாம இருப்போம்! அதை முதலில் புரிஞ்சிக்க. அப்புறம் காதலிக்கலாம்!’’ - நந்தினி போனை வைத்தாள்.பிரகாஷுக்கு தலையில் யாரோ ஓங்கிக் கொட்டிய மாதிரி ஒரு வலி!                    

அமுதகுமார்