பொறுப்பு



சரியாய் ஆறு மணிக்கு வந்துவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக ஜாடையாய்க் கூறியும் அவன் வராதது, அவன்மீது நம்பிக்கை இழக்கச் செய்ததுடன், பொறுப்பில்லாதவன் எனவும் நினைக்க வேண்டியதாயிற்று ஜானுவிற்கு.

மணி ஏழாகிவிட்டிருந்தது. ஒரு மணி நேரமாய், தனியாக மெரினாவில் காத்திருந்த ஜானுவின் மீது பார்வைகள் தினுசு தினுசாய் படர்ந்ததில், அவள் மனம் கொந்தளித்தது.

கொஞ்சம் அக்கறையும் பொறுப்பும் இருந்தால், இந்நேரம் வந்திருக்க வேண்டும். ‘இவனை நம்பி காதல் சொல்லி, கல்யாணமும் கட்டிக்கிட்டா, விளங்குமா வாழ்க்கை’ என உள்ளுக்குள்ளே குமுறினாள். அவனை மொபைலில் தொடர்புகொண்டால், ‘நாட் ரீச்சபிள்’ என்ற பதில்தான் கிடைக்கிறது. காத்திருப்பதில், அர்த்தமில்லை என ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் ஜானு.

அப்போது மொபைல் ஒலிக்க, அவன்தானோ என்று பார்த்தால்... இல்லை. அவள் அம்மா!‘‘ஜானு சீக்கிரமா, பி.கே நர்சிங்ஹோம் வா. நேர்ல பேசிக்கலாம்!’’ - அம்மாவின் பதற்றமான குரல் கேட்டு, ஸ்கூட்டியின் வேகத்தைக் கூட்டி நர்சிங்ஹோம் போனாள்.‘‘அப்பாவுக்கு திடீர்னு மயக்கம் வந்திச்சு, ஜோஸ்வாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லி ஆஸ்பத்திரியில சேர்த்துட்டோம். இப்ப பரவாயில்ல!’’ என்றாள் அம்மா.அப்பாவின் படுக்கை அருகே டாக்டர்களுக்கு உதவி செய்தபடி பிஸியாக இருந்தான் ஜோஸ்வா.

கே.அசோகன்