பச்ச மண்ணு



‘‘பத்து வயசு பச்ச மண்ணு அவ. வேணாம்யா... விட்டுடுங்க!’’ என்று கெஞ்சினாள் மாதவி.‘‘என்னை என்ன செய்யச் சொல்றே? சந்தானம் ஐயா ரொம்ப ரொம்ப ஆசைப்படுறார்மா’’ என்றார் சிங்காரம்.‘‘ஆனாலும் அறுபது வயசுக் கிழவனுக்கு இப்படி ஆசை கூடாதுய்யா. பாவம், புள்ளை ரொம்ப கஷ்டப்படுவா!’’‘‘கையை நீட்டி காசு வாங்கிட்ட இல்ல. இப்ப முடியாதுன்னா எப்படிம்மா?’’

‘‘அவரு புத்தி இப்படி மோசமா யோசிக்கும்னு யாருக்குத் தெரியும்?’’‘‘இதுக்காக தூங்காம முழிச்சுக் காத்துக்கிட்டு இருக்கார்மா!’’‘‘முடியாதுய்யா! காச வேணும்னா வாங்கிட்டு போ!’’‘‘எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாரே! இப்ப போயி முடியாதுன்னா எப்படி? நானே கூப்பிட்டுப் போயி பத்திரமா கொண்டாந்து விட்டுடுறேன் தாயி!’’
‘‘வேற யாரையாச்சும் கூப்பிட்டுப் போயேன்!’’‘‘ஐயா ஏத்துக்க மாட்டாரும்மா! உனக்குத் தெரியாது, அவரு சொன்னா சொன்னதுதான்!’’

‘‘பத்தி எரியுற வீட்டுக்குள்ளாற என் பொண்ணை சிக்க வச்சு படமெடுக்க ஏன்யா அவரு இப்படித் துடிக்குறாரு?’’‘‘டைரக்டர் சந்தானம்னா சும்மாவா? சாதாரணமில்லைம்மா... பல அவார்டு வாங்கின டைரக்டர் அவர். காட்சியில யதார்த்தம் வர்ற வரைக்கும் விடுவாரா? கவலைப்படாதே! உன் பொண்ணுக்கும் அவார்டு கிடைக்கும்...’’சிங்காரம் அந்த கிராமத்துச் சிறுமியை ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு அழைத்துப் போனார்.    

பி.எம்.வி