கைம்மண் அளவு



சில மாதங்களுக்கு முன்பு பணி நிமித்தம் ராஜபாளையம் போயிருந்தேன். முன் மாலைக்குள் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு, பின் மாலையில் என் மனம் போக்கு அலைச்சலையும் நடத்திய பிறகு, மகாத்மா காந்தி பண்டு விஜயம் செய்திருந்த நூலகத்தின் பக்கம் வந்தேன். இரவு நேரச் சிற்றுண்டியை உணவு விடுதியொன்றில் முடித்துக்கொண்டு, திரும்ப தங்கியிருந்த விடுதிக்கு நடக்கத் தலைப்பட்டேன்.

பங்குனி மாதப் புழுக்கம். எனினும் இரவு பத்து மணி தாண்டிவிட்டதால் தூசியும் வெக்கையும் இரைச்சலும் அடங்கி, காற்று மென் தூவலில் இருந்தது. நடக்கும்போது காதுகளில் ஒலிபெருக்கி வாய்ப்படாத நையாண்டி மேள ஓசையைச் செவி மடுத்தேன்.நையாண்டி மேளம் என்பது ஒரு கிராமிய மேளம். இரண்டு நாதஸ்வரங்கள், இரண்டு தவில்கள், ஒரு கைத்தாளம், இரண்டு முரசுகள், ஒரு ஒத்து. முரசு என்று ஈண்டு நான் குறிப்பது ஒன்றுக்கு மேல் ஒன்றாக இரண்டு தோல் வாத்தியங்கள் கொண்டது. வாசிப்பவர் கழுத்திலிருந்து தொங்கும்.

கீழே பம்பை, அதன்மேல் சேர்த்து அடுக்கினால் போல முரசு. சற்றே வளைந்த, செதுக்கிச் சீவப்பட்ட கம்புகளை இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு வாசிப்பார்கள். இரண்டு கைகளாலும் நான்கு முகங்களிலும் வாசிப்பார்கள்.

ஐந்து முகம் கொண்ட பஞ்சமுக வாத்தியம் ஒன்றும் இருந்தது நம் இசை மரபில். திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில் இன்றும் வாசிக்கிறார்கள். வேறு எங்கேயாவது எவரும் வாசிக்கிறார்களா என்று ஒருவேளை இசையறிஞர் நா.மம்மது அறிந்திருக்கக் கூடும்.

நையாண்டி மேளம் என்பது, கோயிலுக்கு வெளியே திடலில் வாசிக்கப்படுவது. கூடவே கரகாட்டமும் இருக்கும். மேளம் வாசிப்பவர்களுக்கு தொல்லிசை மரபுகளில் நல்ல தேர்ச்சி உண்டு. தாளம், லயம் பிசகாது.

ஒரு முறை இசை விமர்சகர் சுப்புடு எழுதினார்... ‘நமது முரசு, பம்பை, மகுடம், உடுக்கு, தப்பு, பறை, உருமி போன்ற மேளங்களை சென்னை சபாக்களில் வாசிக்கச் செய்ய வேண்டும், நமது புகழ்பெற்ற தாள லய விற்பன்னர்களை அதைக் கேட்கச் செய்ய வேண்டும்’ என!நையாண்டி மேளத்தின் தாளக்கட்டுக்களுக்கு, கரகாட்டக் கலைஞர்கள் அடவு போடுவார்கள்.

கிராம மக்கள் விரும்பி ரசிக்கும் கலை இது. கர்நாடக இசை ெமட்டுக்களில் அமைந்த பாடல்கள், பழைய சினிமாப் பாடல்கள் என வாசிப்பார்கள். ‘நலந்தானா?’வும் கேட்கலாம், ‘மச்சானைப் பாத்தீங்களா?’வும் கேட்கலாம். ‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ம் கேட்கக் கிடைக்கும். கமகங்களும் பிருகாக்களும் சங்கதிகளும் கிராம மக்கள் அறியாதவை அல்ல.

விடுதி அறைக்குத் திரும்பாமல், மேள ஓசை வந்த திசை நடந்து, இரவு இரண்டு மணி வரை திடலின் ஓரமாக நின்று நையாண்டி மேளம் கேட்டுக்கொண்டிருந்தேன். நையாண்டி மேளமும் கரகாட்டமும் வில்லுப்பாட்டும் கணியான் கூத்தும் பொய்க்கால் குதிரையாட்டமும் மயிலாட்டமும் ஆலி ஆட்டமும் காவடியாட்டமும் தோல் பாவைக் கூத்தும் பத்து வயது முதலே எமது ஆவியில் புகுந்து போன கலைகள். மகுடமும், உடுக்கும், முரசும், பம்பையும், தவிலும், தப்பட்டையும், பறையும், செண்டையும் இன்றும் என் நாடி நரம்புகளை அதிர வைப்பவை.

வீட்டில் சொல்லிக்கொண்டும், சொல்லாமலேயும் பக்கத்துக் கிராமங்களில் எங்கு முத்தாரம்மன் கோயில் கொடை, காளி ஊட்டு, சுடலை மாடன் கோயில் கொடை நடந்தாலும் அங்கு நம் பிரசன்னம் இருக்கும்.

விடிய விடியக் கொடை பார்த்து, கூடத் துணைக்கு வந்த தோழர்கள் எப்போது நம்மைத் தேடிச் சலித்து சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குப் போனார்கள் என்று தெரியாமலேயே காலம் போக்கி, இரவு மூன்று மணிக்குக் கொடை முடிந்ததும் ஒற்றைத் தனியனாக நடந்து ஊருக்குப் போக அஞ்சி, கோயில் நடையிலேயே படுத்து உறங்கி, பல பலா விடிய, கோழி கூவக் கண் விழித்து, பதுங்கிப் பதுங்கி வீடு போய்ச் சேர்ந்த நாட்கள் அவை.

சுடலைமாடன், புலைமாடன், கழுமாடன், இயக்கி, பேய்ச்சி, முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், சந்தனமாரி, சூலைப் பிடாரி, கரிய காளி எனப்பட்டவர்களின் அலங்கரிக்கப்பட்ட உருவங்கள், கோமரத்தாடிகளின் உரத்த ஓங்காரப் பிளிறல் என உறக்கத்தில் கனவாய் வந்து வெருட்டியதுண்டு. கொடை முடிந்தாலும் இரண்டு நாட்கள் ககன வெளியில் முரசு, உடுக்கு ஓசை காதுபட ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த வயதில் அஃதோர் போதை, ஈர்ப்பு. தன்னை மறந்து கால்கள் போட்ட தாளம், வெட்டி அசைத்த சிரம், நின்றவாறே தொடையில் தட்டிய கைகள்...

இன்றும் கோவையிலிருந்து இராக்காலப் பேருந்துகளில் ஊர் நோக்கிய பயணங்களின்போது, தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில், ஒட்டன்சத்திரம் தாண்டியதும், நெடுஞ்சாலை ஓரத்து சிற்றூர்களில் நடக்கும் நள்ளிரவுக் கொடைகளின் நையாண்டி மேளங்களைச் சில கணங்கள் கடந்து போகும்போது, உடலும் மனமும் பரவசம் கொள்வதுண்டு.

என் அனுபவப் பரப்பின் மிச்ச சொச்சங்கள்தான் ராஜபாளையம் கோயில் முன்பிருந்த முற்றத்தில் என்னைக் கட்டி நிறுத்தி இருந்தது. நெடுநேர நையாண்டி மேளத்துக்கும் கரகாட்டத்துக்கும் பிறகு, இரவு ஒரு மணியளவில், மேளக்காரர்களின் ஓய்வுக்கு ேவண்டி, ஆட்டக்காரிகளும் கோமாளிகளும் சல்லாபமானதோர் உரையாடலில் ஈடுபட்டார்கள்.

சிறுவர்கள் களைத்துப் போய் உறங்கச் சென்ற பிறகு, வயது வேறுபாடற்று பெண்களும் ஆண்களும் கூட்டமாய் நின்றும், வீட்டுப் படிப்புரைகளில் அமர்ந்தும் அந்த சிருங்கார ரசப் பேச்சுக்களை ரசித்து, கெக்கலித்து, நாணுவது போல் பாவித்து, ஓரக் கண்ணால் எதிர்பாலரைக் கவனித்து, கூசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

எதுவும் கிராமத்தில் புழங்காத உரையாடல் அல்ல. அபிநயங்களும் குரலின் ஏற்ற இறக்கமும் முகபாவங்களும் காமரசம் மிகுத்துக் காட்டும். எங்களூரில் ஒரு பூசாரிப் பாட்டா இருந்தார். அம்மன் கோயில் பூசாரி, துடியான சாமி கொண்டாடி.

ஆரம்பப் பள்ளியில் கடைநிலை ஊழியம். களிமண்ணில் சிறுவருக்கு காளையும் பசுவும் செய்து தருவார். குருத்தோலையில் காற்றாடி செய்வார். அழுது கொண்டே பள்ளிக்குத் தாமதமாக வரும் சிறுவனைப் பார்த்து, ‘பள்ளிக்கூடத்துக்குப் போனா என்ன எழவாம் சொல்லித் தந்திடுவானுக லே... வீட்டுக்குப் போ லே...’ என்பார்.

தெரு வழியாக நடந்து அவர் வீட்டுக்குப் போகும்போது, எவளாவது ஒரு இளம் பெண் - புதிதாகக் கல்யாணம் ஆனவள் - வீட்டுப் படிப்புரையில் அமர்ந்து தண்டங்கீரை ஆய்ந்து கொண்டிருப்பாள்.‘‘என்னா ராசாக்கமங்கலத்துக்காரி? பேரனுக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு கீரைத் தொவரனும் கீரைத்தண்டு புளிக்கறியுமா?’’கேள்வியில் ஒன்றுமே அறியாத பாவம் இருக்கும். பேத்தி பதில் சொல்வாள்.

 ‘‘ஆமா பாட்டா... மத்தியானம் சாப்பிட வாறேளா?’’
‘‘நல்ல கூத்தாட்டுல்லா இருக்கு? ரா வெளுக்க சோலி பாக்கப்பட்டவனுக்கு ஒரு முட்டை, மீனுன்னு வாங்கி வைய்க்க மாட்டியா? கீரைத் தண்டு அவிச்சுப் போட்டா கை காலு ஓஞ்சு போகாதா? பின்ன எப்பிடி மூசியாம சோலி பாப்பான்?’’

பேத்திக்கு பாட்டாவின் பாலியல் எள்ளல் அப்போதுதான் அர்த்தமாகும். நாணிக் கண் புதைத்து, ‘‘போங்க பாட்டா... சாகப் போற வயசாச்சு, பேச்சைப் பாரேன்!’’ என்பாள்.இது கொச்சை வழக்கல்ல. கிராமத்து, பாலியல் எள்ளல் வழக்கு. தொலைக்காட்சிப் பெட்டிகளின், திரையரங்கு கொச்சைகளுக்கும் வக்கிரங்களுக்கும் பழகிப் போன நகரத்தாருக்கு கரகாட்டக்காரர்களின் உரையாடல் ஆபாசமாகத் தோன்றக்கூடும்.

 ஆனால் கிராமம் தனது மன அழுத்தங்களை இவ்வாறுதான் தளர்த்திக்கொள்கிறது.திடீரென கரகாட்டக்காரி ஒருத்தி, குடிக்க செம்பில் தண்ணீர் வாங்கி வாய் நிறைத்துக் கொண்டு, கோமாளி மீது முழுத்தண்ணீரையும் பீய்ச்சிக் கொப்பளித்தாள். கூட்டம் ஆரவாரித்தது. ஈதென்ன கிராமத்துக் கலை என்று உங்களுக்குத் தோன்றக்கூடும்! ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னால் வளைகுடா நாடொன்றில் கலை நிகழ்ச்சி நடத்தப் போன முன்னணி இந்திக் கதாநாயகன் ஒருவன், தன்னுடன் சேர்ந்து ஆடப் பெண்களை அழைத்தான், பார்வையாளர் கூட்டத்தில் இருந்து. தன்னுடன் ஆடவந்த உயரதிகார, செல்வந்தர் வீட்டு மணமான பெண்கள் மீது, மேடையில் ஆடிக் கொண்டிருக்கும்போதே, தண்ணீர் பாட்டிலிலிருந்து வாய் நிறைய வாங்கி பீய்ச்சி உமிழ்ந்தபோது, கனவான்கள் நிறைந்த கூட்டமும் ஆரவாரமே செய்தது. ஈதோர் பாலியல் முன் விளையாட்டு என்று கூறலாம்.

இதில் எதனையும் நியாயப்படுத்த அல்லது தீர்ப்பு வழங்க இதனை நான் எழுதவில்லை. கிராமம் தனது கலைகள் மூலம், அன்றும் இன்றும், தனக்கான ஆட்டத்தை, பாட்டை, தாளத்தை, இசையை, பல்சுவையை, குதூகலத்தை, பொழுதுபோக்கைக் கண்டெடுத்துக் ெகாள்கிறது. மன அழுத்தங்களுக்கான விடுதலையைத் தேடிக்கொள்கிறது. பாலியல் கல்வியையும் பாலியல் வேட்கையையும் அறிந்துகொள்கிறது.

என் வாழ்க்கையில் முதன்முதலாக மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகில் இருக்கும் ஏர்வாடியில், எட்டாண்டுகள் முன்பு தெருக்கூத்து பார்த்தேன். கட்ட பொம்மலாட்டம் பார்த்தேன். நண்பர் மு.ஹரிகிருஷ்ணன் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கிறார். தீவிரமான காட்சி நடந்து முடிந்ததும் கட்டியங்காரன் வந்து நின்று நாம் மேற்சொன்ன உரையாடல்களை நிகழ்த்துகிறார். எந்தக் கிராமியக் கலையிலும் இதுவோர் அம்சம்.

முன்பு நான் பம்பாயில் வாழ்ந்த காலத்து, சென்னை வழியாகத்தான் ரயில்கள் இருந்தன. சென்னையில் எனக்கொரு சகோதரி இருந்தாள், நங்கநல்லூரில். அவள் வீட்டில் தங்கிக் கொண்டு, எழுத்தாளர்களைச் சந்தித்து அளவளாவுவேன். அசோகமித்திரன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன், வல்லிக்கண்ணன், சி.சு.செல்லப்பா, தீபம் நா.பார்த்தசாரதி, தி.க.சிவசங்கரன் என. நண்பர்களும் கவிஞர்களுமாக ஞாயிறு மாலையில் மெரீனா கடற்கரையின் மரத்தடியில் உரையாடும்போது நானும் சிலமுறை கலந்து கொண்டிருக்கிறேன்.

ஒருமுறை, கோயில் கொடை, ஆடு கோழி பலி, நையாண்டி மேளம், கரகாட்டம், நள்ளிரவு பாலியல் உரையாடல் என்று பேசிக் கொண்டிருந்தேன். ‘‘நீங்களென்ன காட்டுமிராண்டிகளா?’’ என்றார், சென்னையிலேயே பிறந்து வளர்ந்த கவிஞர் ஒருவர். ‘‘இதுவென்ன ஆபாசம்?’’ என்றார் மற்றொரு கவிஞர். உண்மையான ஆபாசங்களை, பாலியல் வக்கிரங்களை, இரட்டுற மொழிதலை நாம் உயர் வகுப்புகளில் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்பதன அரங்குகளில், வாய் பிளந்து ஜொள் வடியப் பார்த்துக் கிடக்கிறோம், மூன்று வயதுச் சிறுமியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு.

வாத்சாயனர் சொன்ன 64 காம நிலைகளிலும் விகாரம் காட்டுகிறார்கள். ஒரேயொரு வித்தியாசம், ஆடைகள் அணிந்து கொண்டபடி! நீச்சல் குளத்தில், நீச்சலுடையில் குளிக்கும் காதலியைத் தூக்கி, இரண்டு கால்களையும் கழுத்தில் இருபக்கமும் தொங்கப் போட்டுத் தோளில் சுமக்கிறான். கடற்கரை மணலில், வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து ஒருவன் தண்டால் எடுக்கிறான். அவன் முதுகில் தனது முன்புறம் அழுந்த, கவிழ்ந்து படுத்துக்கிடக்கிறாள், உள்ளாடைகள் மட்டும் அணிந்த காதலி. அவளைச் சுமந்தபடி தண்டால் தொடர்கிறது. காதல் காட்சிகள் யாவுமே ஆடை அணிந்துகொண்டு கலவியில் ஈடுபடுவது போலுள்ளன.

பாடல்களோ எனில், ‘நேத்து ராத்திரி யம்மா!’ என்கின்றன. ஒருத்தன், ‘சமஞ்சது எப்படி?’ என்கிறான். ‘பூவரசம் பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு!’ என்கிறான் மற்றொருவன். ‘அழகுப் பெண்ணின் அம்மா என்றால் அத்தை என்றே அர்த்தம்’ என்கிறான் வேறொருவன். ‘சின்னப் பொண்ணும் வேண்டாம் மாமா, பெரிய பொண்ணும் வேண்டாம் மாமா, அத்தை மட்டும் போதும் மாமா’ என்கிறான் பெருந்தன்மையுடன். இவை யாவும் காதல் இலக்கியங்கள். ஆனால், எளிய கிராமத்து மனிதன், காசு பணம் செலவின்றி, ஆண்டுக்கு ஒரு முறை பின்னிரவில் ரசிப்பது ஆபாசம், காட்டுமிராண்டித்தனம்.

பள்ளி மாணவன் இணையத்தில் இருந்து செல்போனுக்குத் தரவிறக்கம் செய்து, நண்பர்களுடன் நீலப்படம் பார்க்கும் தரத்துக்கு இறங்கிவிட்டோம் நாம். மாதா, பிதா, குரு வரிசையில் இருக்கும் ஆசிரியை, கரும்பலகையில் சாக்பீஸால் எழுதும்போது, காம நோக்கில் படம் எடுத்துப் பூட்டி வைக்கும் கலையும் தெரிந்துகொண்டார்கள் அவர்கள்.

இரவு பதினோரு மணிக்கு மேல், பாலியல் ஐயங்களைத் தீர்ப்பது போன்ற பம்மாத்தில் வீரிய மாத்திரைகள் விற்கின்றன ெதாலைக்காட்சிச் சானல்கள். இப்போதுதான் இந்திய அரசாங்கம் யோசிக்கவே ஆரம்பித்திருக்கிறது, பாலியல் வக்கிரம் புகட்டும் இணையதளங்களை எவ்விதம் கைகாரியம் செய்வது என!

மூன்று வயது பெண் குழந்தை முதல் எண்பது வயது மூதாட்டிகள் வரை வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள். தேசிய ஊடகங்களில் சான்றோர் பெருமக்கள் தலை குலுக்கி, விரல் நீட்டி, முகம் கறுத்து விடிய விடிய விவாதித்து, பஞ்சப்படி, பயணப்படி வாங்கிக்கொண்டு போகிறார்கள்.சமூகத்தைப் பீடித்திருக்கும் இந்த நோய்க்கு மருந்தேதும் இல்லை என்பது மற்றுமோர் பழிகரப்பு அங்கதம்.

அழுதுகொண்டே பள்ளிக்குத் தாமதமாக வரும்  சிறுவனைப் பார்த்து, ‘பள்ளிக்கூடத்துக்குப் போனா என்ன எழவாம் சொல்லித்  தந்திடுவானுக லே... வீட்டுக்குப் போ லே...’ என்பார்.நை யாண்டி மேளத்தில் ‘நலந்தானா?’வும் கேட்கலாம்,  ‘மச்சானைப் பாத்தீங்களா?’வும் கேட்கலாம். ‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச  கலரு’ம் கேட்கக் கிடைக்கும்.

 ஒருத்தன், ‘சமஞ்சது எப்படி?’ என்கிறான்.‘பூவரசம் பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதிவந்தாச்சு!’ என்கிறான்மற்றொருவன். ‘அழகுப் பெண்ணின் அம்மா என்றால் அத்தை என்றே அர்த்தம்’  என்கிறான் வேறொருவன்.

- கற்போம்...

நாஞ்சில் நாடன்
ஓவியம்: மருது