குல்பி ஸ்டில்!



மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி நினைவுகளில், ‘இந்த மனிதருக்கு ஏதேனும் விருதளித்து நம் அரசாங்கம் இவரை பத்தோடு பதினொன்றாக வைத்து விடவில்லை’ என்ற கடைசி வரிகள்தான் எத்தனை சத்தியமான உண்மை!
- மு.மதிவாணன், அரூர்.

அடடா, ஒயிட் அண்ட் பிளாக்கில் கவர்ச்சிக் கன்னி யாக ஸ்ருதி ஹாசனை தரிசித்தது ஆச்சரியம் என்றால், அந்த போட்டோவை எடுத்தது ‘தல’ என்றது அதிசயம்!
- அ.யாழினி பர்வதம், சென்னை.

சிந்தனைச் செறிவு கொண்ட சொல்லோவியம், நாஞ்சில் நாடனின் ‘கைம்மண் அளவு’ தொடர். தொடரட்டும் அவர்தம் இலக்கியப் பணி!
- கவிச்சுடர் இளங்கதிரவன், கோயம்புத்தூர்.

பிரசவ லேகியத்துக்குத்தான் பேர் பெற்றது என்று நினைத்தேன். டப்பா செட்டிக் கடையில் மற்ற அழகு மூலிகைப் பொருட்களும் பட்டையைக் கிளப்புவது நற்செய்தி!
- சிவமைந்தன், சென்னை.

ராஜபக்‌ஷே என்ற கொடூரத்தை இலங்கை அரசியல் மீண்டும் ஏற்றுக்கொள்ளுமானால், அந்தோ... நம் ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை நினைத்து நடுக்கம் மேலிடுகிறது!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

பியூட்டி ஸ்பெஷலில் ஆண்களுக்கான அழகு சாதனங்களையும் அட்டவணைப்படுத்தி, பாரபட்சமில்லாத பாசத்தைக் காட்டிவிட்டீர்கள். சபாஷ்!
- எஸ்.முருகேசன், தேனி.

‘பாபநாச’த்தின் மூன்று மொழிப் பதிப்பிலும் ஐ.ஜியாக கலக்கிய ஆஷா சரத், கொள்ளை அழகு.
- ‘மீசை’ எஸ்.மூர்த்தி, மஞ்சக்குப்பம்.

‘சகலகலா வல்லவன்’ படத் தகவல்கள் சூப்பர். அதிலும் கிசுகிசுக்களில் மட்டுமே படிக்க + பார்க்க முடிந்த அஞ்சலியின் ‘குல்பி ஐஸ்’ போன்ற ஸ்டில்ஸ் இருக்கே... சூப்பரப்பூ...!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

சகல வசதிகளுடன் கேப்ஸ்யூல் வீடு கட்டுகிறார்கள் ஸ்லோவாக்கியர்கள்! நாம இன்னும் ‘ஸ்லோவா’, ‘க்யூ’வில் பின்தங்கி இருக்கிறோம், குப்பைக் கூளங்களோடு!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

ஒரு பிளாட்பார இட்லிக் கடையில் ஆரம்பித்து, இன்று இந்தியாவின் முன்னணி காய்கனி சிற்பக் கலைஞராக உயர்ந்து நிற்கும் தனபாலுக்கு அரசின் ஆதரவு துளியும் இல்லை என்பது ஜென்ம சாபம்தான்!
- மனோகர், மேட்டுப்பாளையம்.

16 வயதில் நடிக்க வந்து, 32 வயதில் சிகரம் தொட்டு நிற்கும் தனுஷின் பேட்டி அருமை.
- டி.வி.சூரஜ்குமார், தர்மபுரி.

கடந்த இதழில் வெளியான ‘இது ராஜபக்‌ஷேவின் இறுதிப் போர்’ கட்டுரையை எழுதியவர், இலங்கை அரசியல் விமர்சகர் சோமிதரன்.