குட்டிச்சுவர் சிந்தனைகள்



வீட்டுல அம்மா சொல்றதையும், நாட்டுல அரசாங்கம் சொல்றதையும் யாரு சார் கேட்கிறா? அம்மாவும் சரி, அரசாங்கமும் சரி, நல்லதா சொன்னாக்கூட நாசூக்கா சொல்லத் தெரியாதவங்கதான்!

சரி, மேட்டருக்கு வருவோம். இப்ப பீரோவ திறந்து உங்க ஆதார் கார்டை எடுங்க. அதுல இருக்கிற உங்க போட்டோவ பாருங்க. தகர டப்பாவ நகர விடாம தார் ரோட்டுல வச்சு கல்லுல அதக்கி கைல பிதுக்குன மாதிரி இருக்கா? சரி, நல்லா பார்த்துக்குங்க. இப்ப அடுத்து உங்க பர்ஸை திறந்து லைசென்ஸ எடுங்க.

அதுல இருக்கிற உங்க போட்டோவ கொஞ்சம் பாருங்க. முழு தண்ணியோட கீழ விழுந்து நசுங்குன குடம் மாதிரியோ, இல்ல அடிக்கிற அடில வளைந்து போன கடம் மாதிரியோ இருக்கா? சரி, இதையும் மனசுல வச்சுக்குங்க.

அடுத்து நீங்க எடுக்க வேண்டியது, உங்களோட வாக்காளர் அட்டை. குலைஞ்சு போன சோத்துக்குள்ள கொழம்ப கொட்டுன மாதிரி, இருக்கிறதுலயே கண்றாவியான போட்டோ இதுவாத்தான் இருக்கணும். இப்ப இதையும் நல்லா ஞாபகத்துல வச்சுக்குங்க. இதுக்கும் மேல, இந்த பாஸ்போர்ட் வச்சிருக்குறவங்க, பான் கார்டு வச்சிருக்குறவங்க, அதுல இருக்கிற உங்க போட்டோவையும் கூட நல்லா பார்த்துக்கலாம்.

பார்த்துட்டீங்களா? சரி, மேட்டருக்கு வருவோம். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... வாக்காளர் அட்டையில இருக்கிற மாதிரியே நம்ம முகம் நார்மல் வாழ்க்கையில இருந்துச்சுன்னா, நம்மளால நிம்மதியா வெளிய போக முடியுமா? லைசென்ஸ்ல இருக்கிற மாதிரியே மூஞ்சிய வச்சிக்கிட்டு வீட்டுக்கு போனா, யாரோ புள்ளை புடிக்கிறவன் வந்துட்டான்னு பொண்டாட்டியும் புள்ளைங்களுமே புரட்டி எடுத்துருவாங்க. ரோட்டுல ஆக்ஸிடென்ட் ஆனாக்க நம்ம மூஞ்சி எப்படி கோரமாகும்னு நமக்குக் காட்ட அரசாங்கம் எடுத்த போட்டோக்கள்தான் இந்த ஆதார் கார்டுல ஆரம்பிச்சு எல்லா அரசாங்க கார்டுலயும் இருக்கறதெல்லாம்.  அதனாலதான் சொல்றோம்... எங்கு வெளியே சென்றாலும் ஹெல்மெட் அணிந்து செல்வீர்.

பார்லிமென்ட் கூட்டத் தொடர் ஆரம்பமாகிடுச்சு. குத்துமதிப்பா சொல்றோம்னு நினைச்சாலும் சரி, மதிப்பில்லாத குத்தா குத்துறோம்னு நினைச்சாலும் சரி... இதைச் சொல்லியே ஆகணும். நம்ம காசைக் கொட்டி தேர்தல் நடத்தி நாம தேர்ந்தெடுத்து இந்தியா முழுக்க இருந்து அனுப்புற எம்.பிக்களுக்கு நம்ம காசுல இருந்து போற சம்பளம் மாசம் ரூ.50 ஆயிரம் (பல தொகுதிகளில், இந்தாளு தொகுதிய விட்டுப் போனா போதும்னுதான் தேர்ந்தெடுக்கிறாங்களாம்).

பார்லிமென்ட் நடக்கிறப்ப அவங்களுக்குக் கிடைக்கும் தினசரி பேட்டா ரூ.2000/- (இந்தியாவுல பல பேரு மாச சம்பளமே அம்புட்டு இல்லை!)  இது தவிர தொகுதி அலவன்ஸ் மாசா மாசம் ரூ.45 ஆயிரம் வருது. லெட்டர் எழுதறதுக்கு, ஸ்டாம்ப் ஒட்டுறதுக்கு, ஃபேக்ஸ் அனுப்பறதுக்கு, மெயில் பார்க்கிறதுக்குன்னு வர்ற அலவன்ஸ் மாசம் ரூ.15000/-. அதோட மாசம் 30 ஆயிரம் ரூபாயை தனக்கு ஒரு உதவியாளர் வச்சுக்கிட்டு அவருக்கு சம்பளமா தரலாமாம். பல இடங்களில் இது எம்.பி.க்களின் மாமன், மச்சானுக்குத்தான் போகுது.

இது தவிர பார்லிமென்ட் நடக்கிறப்ப, தொகுதியில் இருந்து ரயிலில் ஏ.சி ஃபர்ஸ்ட் கிளாஸில் வந்துக்கலாம். ஒரு விமான டிக்கெட் இலவசம். ‘இல்ல இல்ல, நான் கார்லதான் வருவேன்’னு வந்தாலும், கிலோமீட்டருக்கு 16/- ரூபா அரசாங்கம் சலுகை தருது. (நாம வாடகை இன்னோவா எடுத்துக்கிட்டு திருப்பதி போனாலும் கிலோமீட்டர் வாடகை 12/- ரூபாதான்).

இது போக இலவச வீடு, இலவச தண்ணீர், இலவச மின்சாரம்னு எல்லாத்தையும் அரசாங்கம் தருது. இதெல்லாம் விட கொடுமை, வீட்டுல சோபா கவர் மாத்த, டேபிள் கவர் மாத்த மட்டும் 3 மாசத்துக்கு ஒரு தடவை 60000/- ரூபாய் தர்றாங்க. இது தவிர இலவச போன் & மொபைல். ஒரு எம்.பி ஒரு வருடத்துக்கு 1,50,000 கால்கள் இலவசமாகப் பேசிக்கலாம்.

(4 கேர்ள் ஃப்ரெண்டு வச்சிருக்கிறவன் கூட இம்புட்டு நேரம் பேச மாட்டான்). அப்புறம் காலத்துக்கும் பென்ஷன் வாங்கிப் பொழைச்சுக்கலாம். இம்புட்டு சலுகைக்கும் ஒரே காரணம், இவங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பேசப் போறவங்க என்கிற ஒரே தகுதிதான். ஆனா பார்லிமென்ட் நடத்த ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7.5 கோடி ரூபாய் வரை செலவு செய்தும், அதை நடத்த விடாம எல்லாரும் முடக்குறீங்களே அய்யா, இது நியாயமா?

உலகத்தின் மிக அழகான, மிக சுறுசுறுப்பான, மிக அறிவான குழந்தை நம் குழந்தைதான் என நினைக்கிறோம். உலகத்தின் மிக அன்பான, மிகப் பாசமான, மிக நடுநிலையான பிறவி என நம்ம அம்மாவைத்தான் சொல்லுகிறோம். உலகத்தின் மிகச் சிறந்த, மிக உண்மையான உறவுகளாக நம்ம நட்புகளைத்தான் சொல்லுகிறோம். உலகத்தின் மிக அக்கறையான சூப்பர் ஹீரோவாக நம்ம அப்பாவைத்தான் சொல்லுகிறோம்.

உலகத்தின் மிக ஆதரவான, மிக நெருங்கிய பந்தமாக நம்ம கூடப் பிறந்த அக்கா, தங்கச்சிகளைத்தான் நினைக்கிறோம். நமக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியரைக்கூட உலகத்தின் மிகச் சிறந்த பண்பாளர், திறமைசாலி என எடுத்துரைக்கிறோம்.

செல்போன் ரிப்பேர்காரர்களில் ஆரம்பித்து ஸ்கூட்டர் மெக்கானிக்குகள் வரை நம்மவர் சிறந்தவர் என மற்றவர்களுக்கு அறிவிக்கிறோம். அட, விருப்பமாக ஒரு நாய் வளர்த்தாக்கூட உலகத்துலயே அதுதான் சிறந்தது, விசுவாசமானது, புத்திசாலியானது என நினைக்கிறோம். அப்புறம் ஏன் சிறந்த மனைவி என வரும்போது மட்டும், நம்ம வீட்டை விட்டுவிட்டு அடுத்த வீட்டுக்காரர்தான் அதிர்ஷ்டம் செஞ்சவர் என நினைக்கிறோம்?

குவைத்ல பிச்சையெடுத்தே 10 கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதிச்சவன நாடு கடத்துனாங்களாம்! இதுக்கு எதுக்கு நாடு கடத்தணும்? ரெண்டே ரெண்டு கேர்ள் ஃப்ரெண்ட் புடிச்சுக் கொடுத்திருந்தா, பத்தே நாள்ல அந்தப் பொண்ணுகளுக்கு செலவு பண்ண முடியாம மீண்டும் அவன் பிச்சையெடுக்கப் போயிருப்பான்ல.

சரி, இன்னும் சீக்கிரமா அவனையும் அவன் பணத்தையும் முடிச்சு விடணும்னா, அப்படியே அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். ஒரே வாரத்துல பொண்டாட்டிக்கு புடவையும் நகையும் எடுத்துக்கொடுத்தே மறுபடியும் பிச்சை எடுக்க வந்திருப்பானேய்யா!

இல்ல, அவனை இன்னமும் விரைவா பிச்சைக்காரனா மாத்தணும்னா, கல்யாணம் பண்ணினதோட ரெண்டு குழந்தைங்களையும் தத்துக் கொடுத்திருந்தா, ஸ்கூல் ஃபீஸ், டியூஷன் ஃபீஸ் கட்டியே பிச்சைக்காரனா திரும்ப வந்திருப்பானே!

அதையெல்லாம் விட்டுட்டு போயும் போயும் நாடு கடத்துறதெல்லாம் ஒரு தண்டனைன்னு கொடுத்திருக்கீங்க. அரபு தேச தண்டனை, ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனைனு இருக்கிற தண்டனைகளில் எல்லாம் பெரியது... பொண்டாட்டி, புள்ளைங்கள வச்சுக்கிட்டு வாழுற இல்வாழ்க்கைதானே ராஜா?