கவிதைக்காரர்கள் வீதி




*ஒப்பனை
செய்துகொள்ளாமல்
வீதியில் நடமாடும் மனிதர்களை
விரல் விட்டு எண்ணி விடலாம்

*எங்கோ எவரோ
தயாராகிறார்கள்
கல்லறையில் உறங்குவதற்கு

*எல்லா மூங்கில்களும்
புல்லாங்குழல் ஆகவே
விரும்புகின்றன

*விளக்கினால்
விரட்டப்பட்ட இருள்
வானத்திடம் தஞ்சமடைந்தது

*எல்லா பாதைகளும்
மயானத்துக்குத்தான்
கொண்டுபோய் விடுகிறது

*இறக்கை வளர்ந்த பின்னும்
பறக்க முயலவில்லை
அந்தக் கூண்டுக்கிளி

*எத்தனை பிம்பங்கள்
ஒளிந்திருக்கின்றன
இந்த நிலைக்கண்ணாடியில்

*முங்கியவர்களின்
பாவங்களையெல்லாம்
எங்கு கொண்டு போய்ச்
சேர்க்கும் கங்கை?

*திரும்பி வந்த அலையிடம்
கரையின் நலத்தைப் பற்றி
விசாரித்தது கடல்

*மீறுவதற்காகவே
வகுக்கப்படுகின்றன
விதிமுறைகள்

ப.மதியழகன்