ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 29

‘‘கஞ்சமலையில் எனக்கு நேரிட்ட அமானுஷ்ய அனுபவம், என் மனதை மிகவே பாதித்து விட்டது. வாழ்வு குறித்த பலவித கேள்விகள் அதன் காரணமாக என்னுள் எழும்பின. ‘அமானுஷ்யம் என்பதே அகராதியில் இல்லாத ஒரு சொல்...

அது மீடியாக்காரர்களால் கண்டறியப்பட்ட ஒரு புதிய சொல்’ என்று எப்போதோ யாரோ சொன்ன கருத்து எனக்குள் தோன்றி, அந்தக் கஞ்சமலை சம்பவத்தைப் பற்றி பலவாறு நினைக்க வைத்தது. இப்படி நான் எனக்குள் ஒரு எண்ணக் குடைச்சலுடன் இருந்த வேளையில்தான் ஜோசப் சந்திரன் என்பவர் சந்திப்பு நிகழ்ந்தது.

ஜோசப் சந்திரன் ஒரு ஆங்கிலப் பேராசிரியர்! ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேசுவதோடு, மிக ஆழமாக எழுதவும் செய்வார்.  இவரது கட்டுரைகளைப் படிக்கும்போது சில ஆங்கிலச் சொற்களுக்குப் பொருள் தெரியாமல் நான் அகராதியின் துணையை நாடியதுண்டு. அவருக்கு மேல்நாட்டு இலக்கியங்கள் எல்லாமும் மிகப் பரிச்சயம்.

நான் அவரைச் சந்தித்தபோது ‘The Wheel of Time’ எனும் அமானுஷ்யம் சார்ந்த புத்தகம் ஒன்றைத்தான் படித்துக்கொண்டிருந்தார். Carlos Castaneda என்பவர் எழுதிய புத்தகம் அது. ‘It’s impossible to view the world in quite the same way’ என்று ‘சிகாகோ ட்ரிப்யூன்’ எனும் இதழ், அந்தப் புத்தகம் பற்றி ஒரு வரியில் கருத்து சொல்லியிருந்தது.

அதை எல்லாம் கவனித்தபடியே அவரிடம் நான் என் அமானுஷ்ய அனுபவம் குறித்துப் பேசத் தொடங்கினேன். முன்னதாக கஞ்சமலையில் உள்ள அந்த இடம் மற்றும் கல்வெட்டுப் பாடலையும் கூறினேன்.

 ஆழ்ந்து கேட்டுக்கொண்ட சந்திரன் என்னைக் கேள்விகள் கேட்கச் சொன்னார். ‘அந்த மலைக்கு ஆராயச் சென்ற ஒருவர் இறந்துவிட்டார்... இன்னொருவருக்கு பலத்த காயம்... ஆராய்ச்சி விஷயத்தில் ஒரு அடிகூட முன்னேற்றமில்லை. எழுதி அனுப்பிய கடிதங்களும் சென்று சேரவில்லை. இதை எப்படி எடுத்துக்கொள்வது?’ என்று கேட்டேன்.

‘இவற்றில் அமானுஷ்யத்திற்கு நிறைய இடமிருக்கிறது. இவற்றை தற்செயலாக நடந்துவிட்ட சம்பவங்களாகக் கருத முடியாது’ என்றார்.‘என்றால், அமானுஷ்யம் என்பது உண்மையா?’‘மனித சக்தி மற்றும் அதன் ஐம்புலன்களால் ஆன முயற்சிக்கு அப்பாற்பட்ட எல்லாமே அமானுஷ்யம்தான்!’

‘அது எப்படி மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்க முடியும்?’‘அமானுஷ்யம் என்பதும் மனித சக்தியின் இன்னொரு பரிமாணம்தான். பஞ்சபூதத்தால் ஆன உடம்புக்குள் இருக்கும் வரை உருவாகும் சக்தி, உடம்பைத் துறந்துவிட்ட நிலையில் உருவாகும் சக்தி என்று இரண்டு நிலைகள் உள்ளன.

நமக்கு உடம்புக்குள் இருக்கும் வரை உருவாகும் சக்தி பற்றி மட்டும்தான் தெரியும். உடம்பைத் துறந்துவிட்ட நிலையில் உருவாகும் சக்திதான் அமானுஷ்ய சக்தியாக உள்ளது.’‘பௌதிக அடிப்படையில் இது சரியா? சாத்தியம்தானா?’‘இப்படி சந்தேகப்படுவதில் தவறில்லை. அதனால் நஷ்டமுமில்லை. ஆனால் இதனாலேயே அமானுஷ்யத்தைப் புரிந்து கொண்டுவிட முடியாது.’‘என்ன செய்ய வேண்டும்?’

‘அனுபவத்துக்கு ஆட்பட வேண்டும். இந்த ‘The Wheel of Time’ புத்தகம்கூட அமானுஷ்யம் குறித்த ஒரு பார்வைதான்.’‘நான் அனுபவத்துக்குள்ளானதால்தானே கேள்வியே எழுப்பியுள்ளேன்!’‘உங்கள் அனுபவம் முழுமையான அனுபவமல்ல... நீங்கள் அவசரப்படுகிறீர்கள்...’‘இதில் அவசரப்பட என்ன இருக்கிறது?’

‘மேலும் அனுபவத்துக்கு ஆளாவோம். நானும் வருகிறேன். இந்த உலகில் மனிதர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முடிந்த இடம் - செலுத்தக்கூடாத இடம் என்று இரண்டு உண்டு. அந்த இடம் ஆதிக்கம் செலுத்தக்கூடாத இடமாக ஒருவேளை இருக்கலாம்.’- ஜோசப் சந்திரன் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த வாரத்து ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி நாளாக அமைந்திருக்க, அன்றைய இரவு அங்கே திரும்பச் செல்ல முடிவெடுத்தோம்!’’

 - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அனந்தகிருஷ்ணன், பத்மாசினி முன் வள்ளுவரைத் துணைக்கு அழைத்து அவரைப் பேசச் சொன்னான் வர்ஷன். வள்ளுவர் மௌனமாக அவர்களைப் பார்த்தார். அனந்தகிருஷ்ணன் இனம்புரியாத தவிப்போடு பதிலுக்குப் பார்த்தார்.‘‘தம்பி சொல்றது வாஸ்தவம்தான்..

அது இருந்துட்டா நாம கடவுளாவே ஆகிட்ட மாதிரிதான்...’’ என்று மிக இதமான குரலில் சொன்னார் வள்ளுவர்.‘‘அய்யா! நீங்க வந்த அன்னிக்கே பலகணி எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரிஞ்சுபோச்சு. இப்ப ‘ஈஸ் இட் பாசிபிள்’னு நான் கேட்டதோட அர்த்தமே வேற...’’
‘‘அப்ப எந்த அர்த்தத்துல கேட்டீங்க?’’

‘‘அது எப்படிய்யா என்னிக்கோ நடக்கப்போறத முன்கூட்டியே சொல்ல முடியும்?’’
‘‘அது சொன்னதைப் பாத்துமா உங்களுக்கு சந்தேகம்?’’
‘‘ஒண்ணு, ரெண்டு சரியா இருக்குங்கறதுக்காக எல்லாமே இருந்துடுமா... இது தற்செயலான ஒண்ணா இருக்கலாம் இல்லையா?’’

‘‘தற்செயலான ஒண்ணோட அடிப்படைக் குறிப்புகளுக்கு யாராவது ஐம்பது லட்ச ரூபாயை பேங்க்ல போட்டு கிட்நாப் பண்ற எல்லைக்கெல்லாம் போவாங்களா?’’‘‘சரி, நாம விஞ்ஞானபூர்வமா பகுத்தறிவோட சிந்திச்சுப் பார்ப்போம். இப்படி ஒரு Prediction- அதாவது ‘முன்தெரிதல்’னால இதைக் கண்டுபிடிச்சு சொன்னவங்களுக்கு என்ன லாபம்? அப்படிச் சொன்னவங்க ஏன் கண்டுபிடிக்க முடியாதபடி ரகசியமா அதை வைக்கணும்?’’

‘‘இது ஒரு அறிவுக் கணக்கு! இதுல எந்த மாய மந்திரமும் கிடையாது. கணக்கோட விடைதான் குறிப்புகள். இப்படிப்பட்ட கணக்கைப் போட்டவன் சராசரி மனுஷன் இல்ல... அவன் தன் மூளையை நம்மைப் போல பத்து, பதினைஞ்சு சதவீதம் மட்டுமே பயன்படுத்தறவன் இல்லை. நூறு சதவீதம் பயன்படுத்தினவன். இது ஒரு வித்தை.

இந்த வித்தையை, அவனைப் போல நூறு சதவீதம் மூளையைப் பயன்படுத்தற ஆற்றல் உள்ளவனுக்குத்தான் கத்துத் தர முடியும். அப்படி ஒரு ஆற்றல் கொண்டவங்க எப்பவாவதுதான் பிறப்பாங்க. அதனாலதான் பலகணியோட கணிதத்தை சொல்லித் தரலை.
 
அடுத்து, இந்தப் பலகணி ஒரு கத்தி மாதிரி!  கத்தியை எப்படி வேணும்னாலும் ஒருவர் பயன்படுத்தலாம். பயன்படுத்தலாம்ங்கற வார்த்தை கூட தப்பு. பயன்படும்ங்கறதுதான் யதார்த்தம். எப்படி கத்தியை ஒருவன் தவறா பயன்படுத்தி கொலையும் செய்ய முடியுமோ, அப்படித்தான் இதுவும். அதனால இதை ரகசியமா வெச்சான். ரகசியமாதான் வெச்சான்... இதை அழிச்சிடலை. ரகசியமான இதைக் கண்டுபிடிக்க விதியுள்ளவன் கண்டுபிடிச்சு குறிப்புகளைத் தெரிஞ்சுக்கட்டும்னு நினைச்சிருக்கலாம்.’’

- வள்ளுவர் சொன்ன பதில் அனந்தகிருஷ்ணனை பெரிதாகச் சமாதானம் செய்த மாதிரி தெரியவில்லை. சமாதானம் ஆகாமல் தாடையைத் தேய்த்துக் கொண்டார்.
ப்ரியாவுக்கு எரிச்சலாக வந்தது. ‘‘டாட்...

இது தேவையில்லாத விவாதம். இதனால நமக்கு நடக்கப் போறது எதுவுமில்லை. இந்த விஷயத்துல தாத்தா ஒரு பக்கம் தன் தேடலைத் தொடங்கிட்டார்ங்கறதுலயும் எனக்கு சில கேள்விகள் இருக்கு!’’ என்றாள்.

‘‘அது என்ன ப்ரியா?’’‘‘தாத்தா சொல்லாம கொள்ளாம போகத் தேவையில்லை வர்ஷன். அவர் கொடைக்கானல் போறதாதான் எங்ககிட்ட சொன்னார். ‘அங்க போய் ஒரு மாசம் ஓய்வெடுக்கப் போறேன். அதுக்கு மேல கூடவும் செய்யலாம்’னார். அப்படி சொல்லும்பாதே அவர் கம்பி நீட்டிடுவார்னு நான் கணக்குப் போட்டுட்டேன். ஆக, அவர் இப்படி திடுதிப்னு காணாமப் போக வேண்டிய அவசியமே இல்லை.’’

‘‘அப்ப அவரைக் கடத்திட்டாங்கன்னு சொல்ல வர்றியா?’’‘‘அதுக்குத்தான் நிறைய சான்ஸ் இருக்கு...’’ப்ரியா அழுத்தமாகக் கூற, வள்ளுவர் ப்ரியாவைப் பார்த்தார். ‘‘அம்மாடி... இரண்டு பேப்பரை எடுத்து ‘கடத்தப்பட்டார்’னு ஒரு காகிதத்துல எழுது... ‘தானாகச் சென்றுவிட்டார்’னு இன்னொரு காகிதத்துல எழுது’’ என்றார்.‘‘எதுக்குய்யா?’’‘‘எழுதும்மா... அவர் என்ன ஆனார்னு இப்ப நாம இங்கேயே கண்டுபிடிச்சிடலாம்...’’‘‘எப்படிய்யா?’’‘‘நீ எழுதும்மா சொல்றேன்...’’

- ப்ரியாவும் வேகமானாள். திருவுளச்சீட்டு போல இரண்டு சீட்டுகளில் அவர் சொன்னது போல எழுதி, எதிரில் டேபிள் மேல் வைத்தாள். வள்ளுவர் தன் காமராஜர் சட்டையின் பாக்கெட்டுக்குள் இருந்து சிறு சுருக்குப் பை போன்ற ஒன்றை எடுத்தார். வெல்ெவட் துணியால் தைக்கப்பட்டிருந்த அந்த பையினுள் இருந்து ஒரு டவுசிங் (Dowsing) எனப்படும் பெண்டுலத்தை வெளியில் எடுத்தார்.

இதே பெண்டுலம்தான் காலப்பலகணி பற்றிய பெட்டிக்குள்ளேயும் இருந்தது. அதைக் கையில் எடுத்த வள்ளுவர், மெல்லிய அதன் சங்கிலியின் நுனியைப் பிடிக்க... ஸ்படிகத்தால் ஆன அந்த பெண்டுலத்தின் கூரியமுனை தரை நோக்கித் தொங்கியது. அப்படியே அது ‘தானாகச் சென்றுவிட்டார்’ என்கிற காகிதத்தின் மேல் நிறுத்தப்பட்டது.

வள்ளுவர் விரலால் அதைப் பிடித்தபடி துளி அசைவின்றி பெண்டுலத்தைப் பார்த்தார். அது எவ்வித அசைவுமின்றி தொங்கியபடியே இருந்தது. மிகச்சரியாக 60 நொடிகள் அப்படியே நின்ற நிலையில், ‘கடத்தப்பட்டார்’ என்கிற காகிதத்தை எடுத்து அந்தக் காகிதத்தின் மேல் வைக்கச் சொன்னார் வள்ளுவர்.

ப்ரியாவும் அப்படியே செய்தாள். அடுத்த சில நொடிகளில் அந்தப் பெண்டுலம் ஆடத் தொடங்கியது. மெல்ல ஆடத் தொடங்கிய அது, அப்படியே வட்டமடிக்கத் தொடங்கியது. வர்ஷனும், ப்ரியாவும் அவர் விரலையே பார்த்தனர்.

அவர் ஏதாவது செய்து அசைவை உருவாக்குகிறாரா என்கிற சந்தேகம்! ஆனால் அப்படியில்லை. பெண்டுல ஆட்டத்தை ஒரு கட்டத்தில் தடுத்தவர், அதை திரும்ப பைக்குள் போட்டார். ‘‘அம்மாடி... அய்யாவை நீ சந்தேகப்பட்டபடி கடத்தியிருக்காங்க...’’ என்றார். அனந்தகிருஷ்ணனுக்கு பகீரென்றது. பத்மாசினியும் ெவலவெலத்தாள்.

‘‘இந்த பெண்டுலம் ஆடினதை வச்சு சொல்றீங்களா?’’ என்று கேட்டான் வர்ஷன்.‘‘ஆமாம் தம்பி. இது ஸ்படிக பெண்டுலம். ரொம்பப் புனிதமானது. இது அசைஞ்சா  தப்பு - அசையலேன்னாதான் சரின்னு அர்த்தம்...’’‘‘அது எப்படிங்கய்யா... இதை எப்படி நம்பறது? ரொம்ப கண்மூடித்தனமா இருக்கே..?’’‘‘அப்படித்தான் தோணும். ஆனா இதுல தப்பு வராது!’’‘‘இதை எப்படி அறிவுபூர்வமா நம்பறது?’’

‘‘அதுக்கு புலனடக்கற சக்தி உங்களுக்கு இருக்கணும். அது தவம், தியானம்னு உள்ளவங்களுக்குத்தான் சாத்தியம். உங்க வாழ்க்கை ஐம்புலன்களையும் இயக்கி வாழற காம்யார்த்தமான பெளதிக வாழ்க்கை. உங்களால இதை நம்பமுடியாதுதான். நீங்க நம்பறதைப் பத்தியோ, நம்பாததைப் பத்தியோ எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

ஒரு ரோஜாப்பூ இருக்கு... அதை ஒருத்தன் ‘இது ரோஜாப்பூ இல்லை’ன்னு சொல்றதால பூவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அப்படிச் சொல்றவன்தான் உண்மையை விட்டு விலகிப் போறவனா இருக்கான். இதுவும் அப்படித்தான்...’’ - வள்ளுவர் சொல்லி முடிக்கவும், அனந்தகிருஷ்ணனின் கைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.‘‘அனந்தகிருஷ்ணன் ஹியர்...’’

‘‘மிஸ்டர் அனந்தகிருஷ்ணன் சார்... நான் ஒரு ஆக்சிடென்ட் ஸ்பாட்ல இருந்து பேசறேன். உங்க அப்பாதான் இந்த நம்பரைக் கொடுத்து உங்களுக்குத் தகவல் தரச் சொன்னார்.’’‘‘என்ன சார் விஷயம்... அப்பா இப்ப அங்க இருக்காரா...

 ஆக்சிடென்ட்னு ஏதோ சொன்னீங்களே?’’‘‘ஆமாம் சார்... நான் ஈ.சி.ஆர் ரோட்ல மகாபலிபுரம் தாண்டி ஏழாவது கிலோமீட்டர்ல இருந்து பேசறேன். என் பேர் சுகுமார். நான் என் பைக்ல பாண்டிச்சேரி போய்க்கிட்டிருந்தப்பதான் உங்கப்பாவோட கார் ஆக்சிடென்ட் ஆகி, உங்கப்பா ரோட்டுல கிடந்தார்.

இறங்கி உதவி செய்யப் போனப்பதான் உங்க நம்பரைத் தந்து பேசச் சொன்னார். அவர் இப்ப மயக்கமாயிட்டார். அவரோட கார்ல இருந்த மூணு பேரும் காருக்குள்ளயே நசுங்கிக் கிடக்கறாங்க. அவங்க யாரும் உயிரோட இருக்கற மாதிரியே தெரியல...’’‘‘எங்கப்பாவோட மூணு பேரா?’’‘‘ஆமாம் சார்... தயவுசெய்து உடனே கிளம்பி வாங்க.

நீங்களே ஆம்புலன்சுக்கு சொல்லுங்க. சீக்கிரம் சார்...’’‘‘மிஸ்டர் சுகுமார்... நான் சென்னைல இருந்து வர்றதுக்குள்ள அவருக்கு எதாவது ஆகிடப் போகுது... நீங்க கொஞ்சம் பக்கத்துல இருந்து பாத்துக்குங்க. நான் இப்பவே ஹைவே பேட்ரோல் ஃபோர்சுக்கு போன் பண்றேன். ஆம்புலன்சுக்கும் போன் பண்றேன்.’’‘‘சரி சார்... கொஞ்சம் சீக்கிரம் வாங்க! அப்புறம், உதவி செய்ய வந்த என்னை சிக்கல்ல மாட்டி விட்றாதீங்க.’’

‘‘நோ... நோ... நீங்க எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கீங்க! உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்! இஃப் பாசிபிள், உங்க செல்போன்ல அப்பாவை ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்ப முடியுமா?’’‘‘ஒண்ணும் பிரச்னையில்ல சார்... கட்டாயம் அனுப்பறேன்.

’’‘‘முடிஞ்சா ஆக்சிடென்ட் ஆன கார் - காருக்குள்ள இருக்கற அந்த மூணு பேரையும் போட்டோ எடுத்து அனுப்புங்க...’’‘‘ஷ்யூர் சார்...’’ - அனந்தகிருஷ்ணன் போனை முடக்க, பத்மாசினி ‘‘ஐயோ! என்னங்க... மாமாவுக்கு என்னாச்சு?’’ என்று வெடித்தாள். அனந்தகிருஷ்ணனும் காதில் விழுந்ததைக் கூறி முடித்தார். முன்னதாக ஆம்புலன்சுக்கும், பேட்ரோல் ஃபோர்சுக்கும் தகவலும் தந்தார்.

‘‘அய்யா சொன்னதுதான் சரி... தாத்தாவைக் கடத்திக் கொண்டுக்கிட்டு போயிருக்காங்க. வழியில ஆக்சிடென்ட் ஆயிருக்கு. கடத்தினவங்க இப்ப உயிரோடவும் இல்ல...’’ - என்று நறுக்குத் தெறித்த மாதிரி சொன்னான் வர்ஷன்.‘‘ஐயோ மாமாவுக்கு ஏதாவது ஆகிடப் போகுதுங்க!’’‘‘புறப்படுங்க...

 போகும்போது பேசலாம். எதிரிகள் இனி கிட்ட வர ரொம்பவே யோசிப்பாங்க. காலப்பலகணி விஷயத்துல சுயநலத்தோட யார் நடந்தாலும் இந்த மாதிரி பலிகள் நடக்கும். அதனாலதான் அது ரகசியமா இதுவரை பாதுகாப்பாவும் இருக்கு’’ என்றபடியே புறப்பட ஆயத்தமானார் வள்ளுவர்.

‘‘என்னங்க இது? கத்தி போய் வாலு வந்த கதையா ஒண்ணு மாத்தி ஒண்ணு நடந்துக்கிட்டே இருக்கு...’’ என்று படபடத்த பத்மாசினியை ப்ரியா அதட்டி அடக்கத் தொடங்கினாள்.‘‘அம்மா... தாத்தா இப்ப உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கார்.

முதல்ல அவரைக் காப்பாத்தற வழியைப் பார்ப்போம். அப்புறம் மற்ற விஷயங்களைப் பேசலாம். நீ இப்படி பேசறதால எதுவும் மாறிடப் போறதில்ல’’ என்றவள், அனந்தகிருஷ்ணன், வர்ஷன் இருவரோடும் காரில் புறப்பட்டாள்.‘‘ஐயோ! எனக்கு தனியா இருக்க பயமா இருக்குங்க...’’ என்று அலறிய பத்மாசினியை அனந்தகிருஷ்ணன் முறைத்தவராக ‘‘அப்ப நீயும் வா’’ - என்றார். அவள் தயங்கினாள்.

வள்ளுவர் அவளை உணர்ந்தவராக... ‘‘அம்மாடி! பயப்படாதே... இனி எந்த ஆவியும் இங்க வராது. அநியாய மரணம் நடக்கற இடத்துல சில சமயம் ஆவிகள் சுத்தி வரும். கட்டு போட்டுட்டா, அது அதோட வழில போயிடும். இதைப் பெருசுபடுத்தத் தேவையில்லை... தைரியமா இரு’’ என்றார்.

அனந்தகிருஷ்ணனும் வாட்ச்மேன் தங்கவேலுவை அழைத்து, ‘‘அம்மாவுக்குத் துணையா இங்கேயே இரு. நாங்க அவசரமா மகாபலிபுரம் வரை போறோம்’’ என்றார். காரும் புறப்பட்டு வீதியில் இறங்கிட, கைபேசியில் வாட்ஸ் அப்பின் சிக்னல் சப்தம். திறந்து பார்க்கவும், கணபதி சுப்ரமணியன் ஒருபுறம் மரத்தின் மேல் சாய்ந்தபடி படுத்திருக்க, காருக்குள் இருப்பவர்களின் முகங்கள் ஓரளவு தெளிவாகவே தெரிந்தன. அவர்கள் முன்பே வர்ஷனின் தங்கை அனுஷாவைக் கடத்தியவர்கள்தான்!

‘‘தலைவர் லொகேஷன் பார்க்கப் போயிருக்கார்...’’‘‘படம் எடுக்கறாரா?’’
‘‘கைதாகப் போறார் இல்ல... எந்த ஜெயில் பொருத்தமா இருக்கும்னு பார்க்கத்தான்!

‘‘அந்த பல் டாக்டர் போலியா இருப்பார் போலிருக்கு...’’‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘பல் கட்டணும்னு போனா பிளான் அப்ரூவல் இருக்கான்னு கேட்கறார்!’’

‘‘தலைவர் எல்லாத்துலயும் கௌரவம் பார்ப்பாரு...’’‘‘எப்படி?’’
‘‘குற்றப் பத்திரிகையா இருந்தாக் கூட, முதல் பத்திரிகை தனக்குத்தான் கொடுக்கப்படணும்பார்!’’

- சுப.தனபாலன், முத்துப்பேட்டை.

 - தொடரும்...