வரி வருமா? worry வருமா?



பயமுறுத்தும் புதிய வருமான வரி படிவம்!

‘கவனம் இருக்கட்டும்... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’- வருஷத்துக்கு ஒருமுறை ஆக்‌ஷன் பட வில்லன் மாதிரி இப்படி பன்ச் விளம்பரத்தால் பயமுறுத்துவது நம் வருமான வரித்துறைக்கு வழக்கம்தான். ஆனால், இந்த முறை வெறும் பயமுறுத்தல் அல்ல. வரி ஏய்ப்பை விரட்டிப் பிடித்துத் தடுப்பதற்காக வருமான வரி படிவத்தையே மாற்றி, 14 பக்கங்களுக்கு ‘டீடெயில்’ கேட்டது அரசு.

‘‘இதென்ன குற்றப்பத்திரிகை மாதிரி இருக்கு!’’ என இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, 3 பக்கமாக படிவத்தைச் சுருக்கி வெளியிட்டிருக்கிறது வருமான வரித்துறை. இந்தப் படிவமும் விவகாரமான சில விவரங்களை நம்மிடம் கேட்டுப் பெறவே பார்க்கிறது. நியாயமாய் வரி கட்டுவோருக்கு இது நல்லதா? இல்லை, தொந்தரவா? சென்னையின் ராஜகோபால் அண்ட் பத்ரிநாராயணன் சாட்டர்டு அக்கவுன்டன்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபாகர் இங்கே அலசுகிறார்...

எத்தனை படிவங்கள்?
‘‘வரி செலுத்துவோர் எப்படி வருமானம் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் முன்பு 7 வகையான படிவங்கள் இருந்தன. இப்போது 9 வகையான படிவங்களாக அவை மாறியுள்ளன. இவற்றில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வீடு வாடகைக்குக் கொடுத்து வருமானம் பார்ப்பவர்கள், தனியாகத் தொழில் செய்பவர்கள் போன்ற அடிப்படையான வருமானதாரர்களுக்கு மட்டுமே படிவங்களை 14 பக்கத்திலிருந்து 3 பக்கமாகக் குறைத்திருக்கிறார்கள்!’’

நியாயமான பயங்கள்...

‘‘புதிய படிவம் 14 பக்கமாக இருந்தபோது அதில் வருமானத்துக்குத் தொடர்பில்லாத, தேவையில்லாத கேள்விகள் பல இருந்தன. உதாரணமாக, ‘யாருக்காவது நன்கொடை கொடுத்தீர்களா’, ‘நீங்கள் யாருடனாவது பார்ட்னராக இருக்கிறீர்களா’ போன்ற கேள்விகள். இப்படிப்பட்ட நேரடியான விசாரணைகள் இப்போது நீக்கப்பட்டிருந்தாலும், மறைமுகமாக வரி செலுத்துவோரைச் சிக்க வைக்கும் சூட்சுமக் கேள்விகள் இருப்பதாக சிலர் அச்சப்படுகிறார்கள். அந்த அச்சத்தில் நியாயமும் உள்ளது.’’

ஆதார் எண்

‘‘முன்பெல்லாம் வருமான வரி செலுத்த பான் நம்பர் மட்டுமே போதுமானது. ஆனால் இப்போது ஆதார் எண்ணையும் கேட்கிறார்கள். இதனால், ஆதார் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மற்ற வங்கிக் கணக்குகளையும் வருமான வரித்துறையினர் கண்காணிக்கலாம். அத்தியாவசியத் தருணங்களில் கை மாற்றி விட்ட காசுக்கெல்லாம் விளக்கம் கேட்கலாம் என பயப்படுகிறார்கள் பொதுமக்கள்.’’

வங்கி விவரம்

‘‘முன்பு தந்த 14 பக்க படிவத்தில் நமது அனைத்து வங்கிக் கணக்குகளின் இருப்பு விவரங்களையும் கேட்டிருந்தார்கள். இப்போது அது தேவையில்லை என்றாலும், நமக்கு கணக்கு இருக்கும் அனைத்து வங்கிகளின் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டு எண்களையும் கேட்கிறார்கள். இதுவும் நாம் தொடர்ந்து வேவு பார்க்கப்படுவோம் என்கிற அச்சத்தை உண்டாக்கலாம்.’’

பாஸ்போர்ட்

‘‘இவை எல்லாவற்றையும் தாண்டி, பாஸ்போர்ட் விவரங்களையும் இனி வருமான வரித்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்காக யார் எப்போது வெளிநாடு போனாலும் ‘ஏன் போனீர்கள்? எவ்வளவு செலவு செய்தீர்கள்? அதற்கு என்ன கணக்கு?’ என விசாரணை வரலாம் என்பது அடுத்த அச்சம்.’’

என்ன காரணம்?

‘‘ஏற்கனவே வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் பான் நம்பர் பெறுவதும், வருமான வரித்துறைக்குத் தகவல் கொடுப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பலரும் பெரும் தொகையைப் பிரித்து 45 ஆயிரங்களாக தனித்தனி கணக்குகளில் டெபாசிட் செய்வார்கள். இது போன்ற ஸ்மார்ட் ஏமாற்றல்களைத் தவிர்க்கத்தான் இந்தப் புதிய படிவங்களில் அரசு கிடுக்கிப்பிடி பிடிக்கிறது.’’

இது சரியா?

‘‘உண்மையில் இவ்வளவு தூரம் வரி செலுத்துவோரை உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. காரணம், எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும் சட்டத்தின் சந்துபொந்துகளில் ஓடி, வரி ஏய்ப்பு செய்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களில் பலர் வருமான வரித் துறையினருக்கு கணக்கே காட்டுவதில்லை. அவர்களுக்கிடையே நேர்மையாக தங்கள் வருமானத்தை அரசுக்குத் தெரியப்படுத்த நினைக்கும் மக்களை இந்த நடவடிக்கை தேவையில்லாமல் பயமுறுத்தும்.

இதனாலேயே வரி கட்டாமல் இருக்க என்ன வழி என அவர்கள் யோசிக்கலாம். ஆக, அதிக வரி வசூல் செய்யலாம் என்ற ஆசையில் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை, அப்படியே எதிராகத் திரும்பலாம்! மேலும் இந்த ஆண்டில் வரி செலுத்தும் முறைமையை முழுக்க முழுக்க ஆன்லைன் வழியிலானதாக ஆக்கிவிட்டதால், எத்தனை பேர் இனி வரி கட்டுவதை சுலபமாய்க் கருதுவார்கள் என்பதும் தெரியவில்லை!’’ என்கிறார் அவர் சந்தேகத்தோடு!அப்போ நீங்க கறுப்புப் பணத்தை ஸ்விஸ் பேங்க்ல இருந்து மீட்கப் போறதில்லையா? அநியாயமா எங்க அக்கவுன்ட்ல இருந்துதான் கேட்டு வாங்கப் போறீங்களா?

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்