தங்கம் வாங்க இது தகுந்த நேரமா?



`என் தங்கமே...’ எனச் செல்லமாகக் கொஞ்சலாம் போலிருக்கிறது, தங்கத்தின் இப்போதைய விலையை! இதை எழுதும்போது தங்கத்தின் விலை, ஒரு பவுன் 18 ஆயிரத்து 904 ரூபாய். கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத மாபெரும் சரிவு இது.

இன்னும் விலை இறங்கக்கூடும் என்கிறார்கள் வல்லுநர்கள். ‘வாங்கிப் போட இதுதான் வாகான தருணம்’ என ஆடியில் தங்கத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

அது சரியா? திடீரென ஏன் இப்படியொரு சரிவு?பொதுவாக, தங்கத்தில் செய்யும் முதலீடு லாபகரமானதோ இல்லையோ... அது பாதுகாப்பானது என்பதே உலக நம்பிக்கை! உலகம் முழுவதுமுள்ள முதலீட்டாளர்களுக்கு சந்தையின் மீது எப்போது பயம் வருகிறதோ அப்போது வம்பே வேண்டாம் என்று தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.

 பொருளாதார மந்த நிலையை ஒட்டி, 2009ம் வருடம் முதல் 2013 வரை தங்க விலை இரண்டு மடங்காக அதிகரிக்கக் காரணம் இதுதான். அதே முதலீட்டாளர்கள் ‘இப்போது கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்... வேறு விஷயங்களில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம்’ என்று எப்போது நினைக்கிறார்களோ, அப்போது கையிலிருக்கும் தங்கத்தை விற்பார்கள். தங்க விலை தானாக இறங்கும். இதுதான் கான்செப்ட்.

இப்போது தங்கத்தின் விலை ரிவர்ஸ் கியர் போட்டு 18 ஆயிரத்து சொச்சத்தைத் தொட முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது சீனா. தங்க முதலீட்டில் ஜொலிக்கும் பெரிய நாடான சீனா, கடந்த வாரம் 33 டன் தங்கத்தை ஷாங்காய் ஸ்பாட் மார்க்கெட்டில் விற்பனை செய்திருக்கிறது. இந்த அதிகப்படியான தங்க விற்பனையே, விலையை வீழ்ச்சியடையச் செய்துவிட்டது.

இதுதவிர, சில நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி களும் காரணம் என்கின்றனர். இன்னொரு காரணமும் உலவுகிறது. அது, இந்தியாவில் பருவமழை பொய்த்துப் போனதால் கிராமப்பகுதியினர் தங்கத்தைச் சீண்டவில்லை என்பது. உலகில் அதிகளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. கடந்த 2012ம் வருடம் மட்டும் ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்திருக்கிறோம் நாம்.

இங்கு தங்கம் வாங்குவோரில் 60 சதவீதம் பேர் கிராமப்பகுதியினர். இவர்கள், திருமணம் போன்ற பல்வேறு விசேஷங்களுக்கு தங்கம் வாங்கிக் குவிப்பதால் உலக தங்க கவுன்சிலே நம்மூர் கிராமங்களில் கல்யாண வயதில் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கணக்கெடுத்து வைத்திருக்கிறதென்றால் பாருங்களேன்!

எல்லாம் சரி, இப்போது தங்கம் வாங்கலாமா?‘‘யெஸ்’’ என ஆமோதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார். ‘‘தங்க விலையை `LBMA’ எனப்படும் லண்டன் புல்லியன் மார்க்கெட்டிங் அசோசியேஷன்தான் நிர்ணயிக்குது.

இவங்களோடு அமெரிக்காவும் இங்கிலாந்தும் கைகோர்க்குறாங்க. இப்ேபா, சரிவுக்கு முக்கிய காரணம் கிரீஸ் நாட்டுல ஏற்பட்டிருக்கிற நெருக்கடி தான். இதனால, 2010க்குப் பிறகு இப்போ ரொம்ப விலை குறைஞ்சிருக்கு. இது நம்ம மக்களுக்கு `குட் டைம்’னு சொல்லலாம்.

ஏன்னா, அடுத்தடுத்து ஆவணி, ஐப்பசி மாசங்கள்ல நிறைய பேர் கல்யாணம் வச்சிருப்பாங்க. அவங்க இப்பவே தங்கத்தை வாங்கி வச்சிக்கறது நல்லது. பொதுவா, ஆடி மாசம் டல்லடிக்கும்னு ஆஃபர் போடுவோம்.

ஆனா, இப்போ ஆஃபர் இல்லாமலேயே ஜோரா விற்பனை போய்ட்டு இருக்கு. ஆடி மாசக் கடைசியில எப்பவும் தங்கத்தோட ரேட் ஏறும். அந்தக் கணக்குப்படி பார்த்தா, இன்னும் சில வாரத்துல ரேட் கூடலாம்!’’ என்கிறார் அவர்.அப்போ, மீண்டும் ஏறப் போகிறதா தங்க விலை?

‘‘இல்லை, இன்னும் நான்கு வருஷத்திற்கு பெரிதாக ஏற்றம் இருக்காது!’’ என அதிரடியாய் மறுக்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன். ‘‘உலகளவில் இப்போது தங்கத்தின் தேவை குறைந்திருக்கிறது. காரணம், சீனாவில் பொருள் வர்த்தக வீழ்ச்சி, கிரீஸ் நாடு பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்ட தங்கத்தை விற்கும் அவலம் போன்றவைதான்.

பொதுவாக, அரபு நாடுகள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து பணத்தை தங்கமாக மாற்றி வைப்பார்கள். இப்போது, கச்சா எண்ணெயின் விலையும் குறைந்துள்ளதால் அவர்களும் தங்கத்தின் பக்கம் தலை வைக்கவில்லை.

வாங்குவோர் எண்ணிக்கை குறைந்ததால் விலையும் குறைந்துவிட்டது. இதற்கிடையே டாலரின் மதிப்பு கூடியிருப்பதும் தங்கத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். அதோடு, அமெரிக்கா தங்கள் வங்கிகளின் வட்டி விகித்தை ஏற்றப் போவதாக மிரட்டுவதும் இன்னொரு காரணம். 

பொதுவாக, இந்தியர்கள்தான் தங்கத்தை ஆபரணமாகப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அதை முதலீடாக மட்டுமே பார்க்கிறார்கள். இந்தியாவில் எல்லோரும் தங்கம் வாங்காமல் விட்டுவிட்டால், அந்த உலோகமே மொத்தமாக மதிப்பிழந்துவிடும். உலக நாட்டினர் எல்லோரும் தங்கம் வாங்கினால்தான் தங்க விலை ஏறும். சந்தோஷம், சுற்றுலா என வாழ்வை அனுபவிக்கும் அவர்களை தங்கம் வாங்க வைக்க முடியவில்லை.

அதனால், இனி தங்க விலையில் சின்னச் சின்ன ஏற்ற இறக்கங்கள்தான் இருக்கும். ஏறும்போது கொஞ்சமாக ஏறி... இறங்கும்போது நிறையவே இறங்கும்!’’ என்கிறார் அவர் உறுதியாக!  இனி தங்க விலையில் சின்னச் சின்ன ஏற்ற இறக்கங்கள்தான் இருக்கும். அதுவும் ஏறும்போது கொஞ்சமாக ஏறி... இறங்கும்போது நிறையவே இறங்கும்!’’

- பேராச்சி கண்ணன்