அழியாத கோலங்கள்



நான் என் சகோதரர் கமலை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. இந்திய பொதுக்குடும்ப விதிமுறைகள் கமலை சிறு வயது முதல் வெகுவாகவே பாதித்திருக்கிறது. கமலுக்கு 13 அல்லது 14 வயதாக இருக்கும்போது நான் 39லிருந்து 40ம் வயதை எட்டிப் பிடித்திருப்பேன்.

நான் பரமக்குடியின் ‘நியூமரோ யூனோ’ என்று சொல்லப்படும்படி ஓரளவு பிரபல வக்கீலாக இருந்தபோது என்ன சம்பாதித்தேனோ, அதற்குக் குறையாமல் தன் 14ம் வயதில் நடன உதவியாளனாக ஊதியம் பெற்றவர் கமல்.

எனக்குப் பொருளீட்டுவதில் ஆர்வம் எப்போதுமே இருந்ததில்லை. வக்கீல் தொழிலில் பணம் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. அன்றன்று கிடைக்கும் பணத்தில் கைச்செலவுக்கு பத்தோ இருபதோ மட்டும் வைத்துக்கொண்டு மீதியை மனைவியாரிடம் கொடுத்து விடுவேன். என் மூன்று பெண்களின் ஆரம்பப் படிப்பு முதல் கல்லூரி வரை... திருமணம், மாப்பிள்ளை தேடுவது, பேரப் பிள்ளைகள் படிப்பு என வாழ்வு முறைகளில் எனக்கு எந்தப் பொறுப்பும் இருந்ததில்லை.பிள்ளைகள் வளர தாய்மார்கள் ஒரு அவசியத் தேவை! குறைந்தபட்சம் ஒரு ஆரம்பத்தேவை என்றும் சொல்லலாம்.

ஆனால், இந்தத் தந்தைமாரின் தலையீடு குறையக் குறைய, பிள்ளைகளின் சாதனைகள் வளரும் என்பது என் கருத்து. பெற்றோர்-பிள்ளைகள் தொடர்பு... அதில் வரவேண்டிய மாற்றங்களும் அல்லது வரக்கூடாதவையும் எல்லாமே ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்தவை. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்ததில் அதில் pros and cons என்ற ‘வேண்டுதல் - வேண்டாமை’ பற்றிச் சிந்தித்து செயல்பட வேண்டுமென்று தோன்றுகிறது.

நான் ‘இந்து’வில் படித்த ஒரு கட்டுரை... ஒரு பள்ளி ஆசிரியையின் பார்வையில் இருந்து இளம் மாணவர்களின் மனக் குமுறல்கள் அதில் ஆராயப்பட்டிருந்தன. சில பிஞ்சு உள்ளங்களின் வருத்தங்களும் வாழ்வியல் நிர்ப்பந்தங்களும் விவரிக்கப்பட்டிருந்தன. படிப்பில் சுட்டியான ஒரு கெட்டிக்கார ரேணுகா... ஆனால், எண்ணங்களை உள்ளக் கிடக்கையில் அழுத்தி, எதையும் வெளியிடாத ஒரு Introvert என்று அவளைக் காண்கிறார்.

ரேணுகாவின் தாய் தன் கணவனைப் பிரிந்து வாழும் Single Mother என்று நமக்குச் சொல்கிறார். மாணவி சங்கவியை அந்தரத்தில் விட்டுவிட்டுப் போகும் வகையில் வாழ வழியில்லாத மற்றொரு தாயை நமக்குக் காட்டுகிறார். இன்னொரு அதிவசதி குடும்பத்தில் பிறந்த சன்னூதி என்ற மாணவியின் தாய், உயர் பதவியில் உள்ளவர்... வெளிநாட்டு வேலை கிடைக்க, கட்டுப்பாடு தெரியாத கணவனையும் பிள்ளையையும் விட்டுவிட்டு தனியாக வாழ முடிவு செய்து பறக்கிறார்.

கட்டுரையாளர் ஒரு இளம் மனதில் புகுந்து ஒரு வினாவை விடுகிறார்... ‘‘Does my family consist of me and my Mom... or me and my Dad..?’’ மேலே குறிப்பிட்ட கதைகளில் family does not include ‘me, mom and dad’. ஆனால், இங்கு நான் சொல்கிற விஷயங்கள் உங்களுக்கும் சரி, அந்தக் கட்டுரையாளருக்கும் சரி... ஜீரணம் செய்யத்தக்கதாய் தோன்றாது. நானும் என்னை விட ஆறு வயது இளைய சகோதரனும் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று மாற்றி மாற்றி... மனதால் ஒன்று படாமல் - இரு சாரார் செய்து வைத்த ‘திருமணத்தால்’ மட்டும் ஒன்றுபட்டு, தயாரிக்கப்பட்ட இரு பிள்ளைகள்.

எங்கள் அறிவு முறையே, இளம் வயதில் வெறும் கடத்தல் பொருள்களாக நடத்தப்பட்டபோது கற்றுக்கொண்டவைதான். அவை, கண்ணியமான தாய் தந்தையர் ஒன்றிணைந்து ஊட்டும் கல்வி அறிவைவிட அதிகம். ஒருவேளை அந்த இருவர் சிந்தனை வட்டத்திலிருந்து பெற்ற விடுதலைதான் என்று சொல்லலாம். இன்று நாங்கள் பெற்றது ஒரு சிறிய வளர்ச்சிதான் என்றாலும் அது தாய், தந்தையர் நாட்டாத அடிக்கல்லோ?

என் மற்றொரு தம்பி சந்திரஹாசன், நான் இன்று இருக்கும் வீட்டின் எதிரில், ஒரு நடையில் எட்டிப் பிடித்துவிடும் தூரத்தில்தான் இருக்கிறார். உடல்நலம் இல்லாத, வெகு தூரம் நடக்க முடியாத தன் மனைவியுடன் வசிக்கிறார். நான் தம்பி மனைவி யின் உடல்நலம் பற்றி  விசாரிக்கப் போயிருக்கிறேனே தவிர, பெரிய காரணங்கள் இல்லாததால் தம்பி சந்திரஹாசனைப் பார்க்கப் போனதில்லை.

ஓரிரு முறை ஒரே நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தபோதெல்லாம் நின்று பேசிக்கொள்வதுண்டு. ஏதும் உதவி தேவைப்பட்டால் ஒருவருக்கொருவர் செய்துகொள்வதுண்டு. என் தம்பியின் மகன் நிர்மல் ஹாசன், அமெரிக்காவில் எஞ்சினியர். ஐதராபாத் கோடீஸ்வரியான ஒரு அமெரிக்க டாக்டரை மணந்தவர்.

அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும்போதெல்லாம் பத்தாண்டுகளாக வீட்டோடு இருக்கும் என்னைச் சந்திக்க தம்பி சந்திரஹாசனைவிட அதிகமுறை ஆப்பிள் பைகளுடன் வந்திருக்கிறார்கள்.

ஒருமுறை சரிகா, தான் கருவுற்றது தெரிந்தோ என்னவோ, சென்னைக்கு அவசரமாக விமானத்தில் வந்தார். கமலுடன் காரில் உட்கார்ந்து நள்ளிரவில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அன்று நட்சத்திர ஹோட்டலில் அறைகள் காலியில்லாததால்... கமல் என்னை போனில் அழைத்தார்.

நான் தற்சமயத்துக்கு கமலை அவருடைய ராஜ்கமல் அலுவலகத்தில் உள்ள குளிர்சாதன அறையில் தங்க யோசனை கூறினேன். நான் அன்று வேலை செய்த மலையாளப் பட டைரக்டர் ஒருவர் அடையார் பார்க் ஷெரட்டனில் தங்கியிருந்தார். அவர் அறையை காலி செய்து, அந்த சாவியைக் கொண்டு வந்து, ராஜ்கமல் ஆபீஸுக்குள் செல்லாமல் காரில் இருந்தபடியே ஆபீஸ் பாயிடம் சாவியைக் கொடுத்தனுப்பிவிட்டு வந்தேன்.

வீட்டில் ஹாசன் குடும்பப் பெண்மணிகள், உளவாளிகளிடம் தகவல் அறிந்துவிட்டார்கள். ‘‘பம்பாய் பெண்மணி கமல் ஆபீஸில் இருந்ததால்தான் உங்களை கமல் உள்ளே விடாமல் அனுப்பிவிட்டார் தெரியுமா?’’ என்று காலையில் என்னை கேலி செய்தார்கள்.

எனக்குப் பொறுக்குமா? உண்மையை வெளியே சொல்லி இரண்டு கட்சிகளிலும் கெட்ட பெயர் வாங்கினேன்.ஒருமுறை சரிகா, தான் கருவுற்றது  தெரிந்தோ என்னவோ, சென்னைக்கு அவசரமாக விமானத்தில் வந்தார். கமலுடன் காரில்  உட்கார்ந்து நள்ளிரவில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்