இது இந்தியாவின் உலக வங்கி!



கடன் கேட்டு படியேறுபவர்களை யாரும் கண்ணியமாக நடத்துவதில்லை. அவமானங்களும் நிபந்தனைகளும் திணிக்கப்பட்ட பிறகே பணம் கை மாறும். தனி
நபர்களுக்கு மட்டுமில்லை... தேசங்களுக்கும் இதுதான் விதி! இப்படிக் கடன் கேட்டு வங்கிகளிடம் அவமானப்பட்ட, நிபந்தனைகளில் சிக்கித் தவித்த ஒருவரே சொந்தமாக ஒரு வங்கி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

இந்தியா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பு இந்த வாரம் ஆரம்பித்திருக்கும் ‘நியூ டெவலப்மென்ட் பேங்க்’ அந்த வகையில் ஒரு சகாப்தம். கைகளைத் தாழ்த்தி கேட்டுக் கொண்டிருந்த தேசம், கைகளை உயர்த்திக் கொடுக்கும் நிலைக்கு மாறியதற்குக் காரணம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அலட்சியம், பாரபட்சம்!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா... இந்த ஐந்து நாடுகள் இணைந்ததுதான் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு. உலக மக்கள்தொகையில் பாதிப் பேர் இந்த ஐந்து நாடுகளில்தான் இருக்கிறார்கள். உலகப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் உலக வங்கியிடமோ, ஐ.எம்.எஃப். அமைப்பிடமோ இந்த நாடுகள் கடன் கேட்டுப் போனால் அவர்கள் படுத்தும் பாடு ரத்தம் கொதிக்கச் செய்யும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் என பொருளாதார வல்லரசுகளின் ஏவலாளியாக அந்த அமைப்புகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளுக்கும் அங்கிருக்கும் நிறுவனங்களுக்கும்கூட அள்ளிக்கொடுக்கும் இவை, ஏழை நாடுகளுக்குக் கிள்ளிக் கொடுக்கக்கூட தயங்குகின்றன. சாலைகள், துறைமுகம், மின் திட்டங்கள் என பெரும் பொருட்செலவில் செய்ய வேண்டிய திட்டங்களுக்கு பல நாடுகள் பணமின்றி தவிக்கின்றன.

இந்தியாவும் சீனாவும் பொருளாதார வல்லரசுகளாக மாறிவருகின்றன என உலகமே சொல்கிறது. ரஷ்யா பழைய மதிப்பை இழந்திருந்தாலும், இன்னமும் அது சிங்கம்தான். தென் அமெரிக்காவில் தவிர்க்க முடியாத சக்தி, பிரேசில். ஆப்ரிக்க நாடுகளில் முதன்மையானது தென் ஆப்ரிக்கா. ஆனால் இதில் எந்தத் தகுதியும் உலக வங்கியிடம் கடன் கேட்டுச் செல்லும்போது செல்லாது! ‘‘மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உலக வளர்ச்சி வங்கிகள் அனைத்துமே, வளரும் நாடுகளை ஏதோ அடிமைகள் போலவே பார்க்கின்றன. கடனுக்கு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள் ஈவு இரக்கம் இல்லாதவை’’ என தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா வேதனையோடு சொல்கிறார்.

கிட்டத்தட்ட பொருளாதார தாதாக்கள் போல செயல்படும் இப்படிப்பட்ட வளர்ச்சி வங்கிகளுக்கு எதிராக முதலில் கிளம்பிய ஹீரோ சீனா. ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்ற பெயரில் ஐ.எம்.எஃப் நிறுவனத்துக்கு சவாலாக ஒரு வங்கியை சீனா துவங்கியது. இந்தியா உள்ளிட்ட 56 நாடுகள் அதில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளன. அமெரிக்கா இதைத் தடுக்க எவ்வளவோ முயன்றது. பல நாடுகளை சேர விடாமல் தடுத்தது. சீனாவை வெளிப்படையாக விமர்சித்தது. ஆனாலும் இந்த வங்கியை வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறது சீனா. புல்லட் ரயில், புதிய நகரங்கள் உருவாக்கம், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் என சீனா உள்ளிட்ட நாடுகளின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு இந்த வங்கி உதவுகிறது.

அடுத்ததாக உலக வங்கிக்கு சவால் விடுவதற்குத்தான் இப்போது ‘பிரிக்ஸ்’ அமைப்பு வங்கி திறந்திருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் தென் ஆப்ரிக்கா தவிர மற்ற நான்கு நாடுகளின் தலைவர்களும் கூடிப் பேசினார்கள். அப்போது ‘பிரிக்’ என அமைப்புக்குப் பெயர். பிறகு தென் ஆப்ரிக்கா இணைந்தது. கடந்த ஆண்டு ஜூலையில்தான் இப்படி ஒரு வங்கி அமைக்கலாம் என பேச்சு வந்தது.

ஒரே ஆண்டில் எல்லாம் தீர்மானிக்கப்பட்டு, இந்த ஜூலையில் வங்கியைத் திறந்தாயிற்று.இந்த வங்கி சீனாவின் ஷாங்காய் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும். எல்லா உறுப்பு நாடுகளிலும் கிளைகள் திறக்கப்படும். 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் (சுமார் 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய்) வங்கி துவக்கப்படுகிறது. இதில் சீனா 41 பில்லியன் டாலரும், பிரேசில் - இந்தியா - ரஷ்யா தலா 18 பில்லியன் டாலரும், தென் ஆப்ரிக்கா 5 பில்லியன் டாலரும் முதலீடு போடுகிறார்கள்.

ஆனால் ஐந்து நாடுகளுமே சம உரிமையோடு வங்கியை நடத்தும். யாருக்குக் கடன் தருவது என முடிவெடுக்கும் விஷயங்களில் எல்லோருக்கும் தலா ஒரு ஓட்டுதான். யாருக்கும் முடிவைத் தடுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் கிடையாது.வங்கி சீனாவில் இருந்தாலும், இதன் முதல் தலைவராக செயல்படப் போவது ஒரு இந்தியர்தான். அவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த பி.வி.காமத். ஐந்து ஆண்டுகளுக்கு அவர் பதவியில் இருப்பார். அதன்பின் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டுக்கும் பதவி கிடைக்கும். இப்போதே பல நாடுகள் இதில் இணைய ஆர்வம் காட்டுகின்றன. 

‘‘இந்த ஐந்து நாடுகள் மட்டுமின்றி, எல்லா நாடுகளுக்கும் கடன் தருவோம். முதல் கட்டமாக சுற்றுச்சூழலைச் சிதைக்காத மின் திட்டங்களுக்கு கடன் வழங்கப்படும்’’ என்றிருக்கிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி. ‘‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கொல்லைப்புற பிரச்னையிலிருந்து எல்லைப்புற பிரச்னை வரை ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. இவர்கள் எப்படி இணைந்து வங்கி நடத்துவார்கள்’’ என ‘மேற்கத்திய பொருளாதார நிபுணர்கள்’ பலரும் ‘கருத்து’ சொல்கிறார்கள். இதுபோன்ற விஷமங்களாவது நம்மை இணைந்து வளரச் செய்யட்டும்!

- அகஸ்டஸ்