மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

நீ தனியாக விடப்படவில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள். இறைவன் உன்னுடன் இருக்கிறான். உனக்கு உதவிக்கொண்டும் உன்னை வழிநடத்திக்கொண்டும் இருக்கிறான். அவன் என்றும் உன்னைக் கைவிடாத தோழன். அருகிலிருந்து ஆறுதல் அளித்துக் கொண்டும் வலுவூட்டிக் கொண்டும் இருக்கும் நண்பன் அவன். அவனிடம் நம்பிக்கை வை. அவன் உனக்காக அனைத்தையும் செய்வான்!
- அன்னை

அரவிந்தர் தாம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து தீவிரமாக சிந்தித்தார். இந்த உலகத்தின் வளர்ச்சி என்பது மனிதனோடு  நின்றுவிடுவதில்லை. இப்போது இருக்கும் மனிதனைப்  போல பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தவர்கள் பூமிக்கு வருவார்கள் என்பது  அவரது தீர்க்கமான முடிவு. அதற்காக இந்த பூமியை தயார் செய்ய வேண்டும் என்பதே அரவிந்த - அன்னை யோகத்தின் நோக்கம். அதற்காக இரண்டு வேலைகள் உடனடியாகச் செய்ய வேண்டி இருக்கிறது.

ஒன்று அதிமன ஒளியை பூமிக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு முன்பாக சாவித்திரி மகா காவியத்தை நிறைவு செய்ய வேண்டும்.
அது என்ன சாவித்திரி மகா காவியம்?

அரசர் அசுபதியின் அழகு மகள் சாவித்திரி. அவள் திருமண வயதை அடைந்தவுடன் தகுந்த கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசர் அவளுக்கே அளித்தார். தன் மனம் கவர்ந்த யுவனைத் தேடும் பயணத்தில் ஒரு ஆசிரமத்தை அடைந்தாள் சாவித்திரி. துயுமத்சேனன் என்னும் முதியவர் அங்கே துறவிக் கோலத்தில் தியானத்தில் இருந்தார். அவருக்கு கண் பார்வை இல்லை.

எதிரிகளின் சூழ்ச்சியால் நாட்டை இழந்த முன்னாள் அரசர், இப்போது துறவியாய் காட்டில் வசிக்கிறார் என்பதையும் அறிந்துகொள்கிறாள். கூடவே அவரின் வயதான மனைவியும் வாழ்வதைப் பார்த்தாள். இருவரையும் பணிந்து வணங்கிய சாவித்திரி, அந்தப் பெற்றோருக்குச்  சேவை செய்து கொண்டு வாழ்ந்துவரும் இளைஞனான சத்தியவானைக் கண்டாள்.  கண்டவுடன் அவள் மனதில் காதல் பூத்தது. முதல் பார்வையிலேயே முடிவு செய்தாள், சத்தியவான்தான் தனக்கென பிறந்தவன் என்று!

நாடு திரும்பிய சாவித்திரி தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். அப்போது அங்கே  இருந்த நாரதர், ‘‘விதிப்படி சத்தியவான் இன்னும் 12 மாதங்களில் இறந்துவிடுவான். ஆகவே, இந்தத் திருமணம் வேண்டாம்’’ என்று சொன்னார். அசுபதியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், ‘‘நான் மனதால் சத்தியவானை எப்போது நேசித்தேனோ அப்போதே நான் அவருக்கு மனைவியாகிவிட்டேன். இன்னொரு ஆண்மகனை நான் மணப்பது என்பது கற்பு நெறி தவறியதுக்கு சமம்’’ என்று சொல்லி சத்தியவானையே மணம் செய்து கொண்டாள் சாவித்திரி. 

இந்திய வழக்கப்படி அரண்மனையை விட்டுக் காட்டிற்குச் சென்று கணவனுடன் வாழ்ந்த சாவித்திரிக்கு, சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று தெரியும். ஆனாலும் அதை  அவனிடம் சொல்லவில்லை. நாட்கள் நகர்ந்தன. சத்தியவானின் இறுதி நாளுக்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அந்த மூன்று நாட்களும் உணவும் உறக்கமும் இன்றி விரதம் மேற்கொண்டாள் சாவித்திரி. இறுதி நாள் இரவெல்லாம் உறங்காமல்  பிரார்த்தனை செய்தாள். பொழுது புலர்ந்தது. அன்று ஒரு கணம்கூட கணவனைவிட்டுப் பிரியக் கூடாது என்று தீர்மானித்தாள். விறகு வெட்டச் சென்ற கணவனுடன் அவளும் சென்றாள்.

காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் சத்தியவான் தனக்கு மயக்கமாக இருப்பதாகக் கூறி, சாவித்திரியின் மடியில் தலை சாய்த்துப் படுத்தான். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு உயிர் துறந்தான். அவனது உயிரை அழைத்துச் செல்ல எமதூதர்கள் அங்கு வந்தார்கள்.  ஆனால், சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை அவர்களால் நெருங்க முடியவில்லை.  அவளைச் சுற்றி ஒரு அக்னி வட்டம் சூழ்ந்திருந்தது. எமதூதர்கள் எமனிடம் திரும்பிச் சென்று, ‘சத்தியவானின் உயிரைக் கவர முடியவில்லை’ என்று சொன்னார்கள். மரணக் கடவுளான எமனே அங்கு வந்தான்.  

அவன் சாவித்திரியைப் பார்த்து, ‘‘மகளே, இந்த உடலை விட்டு விடு.  மரணம் மனிதனின் விதி. எல்லோரும் ஒருநாள் சாகத்தான் வேண்டும்!’’ என்றான்.  இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள்.  சத்தியவானின் உடலிலிருந்து உயிரைப் பிரித்து அழைத்துக்கொண்டு தன் வழியே செல்ல ஆரம்பித்தான் எமன்.

 சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின் மீது யாரோ நடந்து வரும் காலடிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.‘‘மகளே, சாவித்திரி! ஏன் என்னைப்  பின்தொடர்கிறாய்?’’ என்று கேட்டான் எமன்.

 ‘‘தந்தையே, நான் தங்களைப் பின்தொடரவில்லை.  ஒரு பெண்ணின் விதி இதுதானே!  கணவன் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆக வேண்டும்!’’ என்றாள்.சாவித்திரியின் பதிபக்தியில் கரைந்த எமன், ‘‘உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதாவது ஒரு வரம் கேள், தருகிறேன்!’’ என்றான். ‘‘தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும்!’’ என்று கேட்டாள்.

‘‘உன் விருப்பப்படியே ஆகுக’’ என்று கூறிவிட்டு மரண தேவன் சத்தியவானின் உயிரை அழைத்துக் கொண்டு நடந்தான். திரும்பவும் காலடிச் சத்தம். சாவித்திரி தொடர்ந்து கொண்டிருந்தாள்.

‘‘இன்னும் ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்?’’‘‘தந்தையே, நான் என்ன செய்வேன்.  நான் திரும்பிப்போக வேண்டும் என்று தான் பார்க்கிறேன்.  ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனதைத் தொடர்கிறது.  என் உயிர் முன்னாலேயே போய்விட்டது.  ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது. 

உயிர் சென்றால்  உடம்பும் கூடச் செல்லத்தானே வேண்டும்?’’ என்றாள். ‘‘சாவித்திரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன்.  இன்னும் ஒரு வரம் கேள், ஆனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது’’ என்றான் எமன்.‘‘தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால், இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் பெற அருள்புரியுங்கள்’’ என்று கேட்டாள்.‘‘ கொடுத்தேன்.  வீடு திரும்பு’’ என்றான் எமன்.  

- இப்படியாக நீடித்த வாதப் போராட்டத்தில் மாமனாரின் சந்ததி வளர வேண்டும் என எமனிடம் வரம் பெற்றாள். எமன் அவளைப் பாராட்டி, ‘‘என் மகளே, உன் கணவன் உயிர் பெறுவான், உன் குழந்தைகள் அரசாள்வார்கள். உண்மையான உன் அன்பிற்கு முன்னால் மரணதேவனான நான்கூட செயலற்றவன் ஆகிவிட்டேன்’’ என்று கூறி ஆசியளித்தான். - இதுதான் சாவித்திரியின் கதை.

மகாபாரதத்தில் சிறிய கிளைக்கதையான இதைக் கொண்டு அரவிந்தர் தனது சாவித்திரி மகா காவியத்தை எழுதினார். அது முழுக்க முழுக்க அவரது ஆன்மிக, யோக அனுபவங்களும் அன்னையின் ஆன்மிக அனுபவங்களும் நிறைந்திருந்தது. அன்னை முதல் நாள் கனவில் கண்டதை மறுநாள் சாவித்திரியில் அரவிந்தர் எழுதி இருப்பதாக அன்னை சொல்லி இருக்கிறார்.

மூலக்கதையான பாரதத்தில் சாவித்திரி மனித உருவம். காலன் கடுந்தெய்வம். தெய்வத்திடம் வரம் கேட்கும் வகையில் சாதுரியமாகச் சாவித்திரி பேசுகிறாள். காலன் கருணைகொண்டு வரமளிக்கின்றான்.

அரவிந்தர், சாவித்திரியை ஒளியின் தெய்வமாகவும், காலனை இருளின் தெய்வமாகவும் உருவகப்படுத்தியுள்ளார். காலனை அழித்து, காரிருளை அழித்து, உலகத்தை இருளிலிருந்து விடுவித்து, இனி எமன் என்ற தெய்வம் இல்லை என்று நிலைநிறுத்தி, அதற்கு அடையாளமாகச் சத்தியவானுக்கு விடுதலை கொடுக்க முயல்வதே அரவிந்தர் தந்த சாவித்திரியின் பூரண யோகம்.

சத்தியவான் மரணத்தை வென்று பூவுலகம் திரும்பி வந்து, பூவுலகத்தைத் தெய்வத்தின் சாம்ராஜ்யமாக்கும் திருப்பணியை முடிப்பது சாவித்திரியின் அவதார நோக்கமாக எழுதினார். அரவிந்தர் தம் வாழ்நாள் முழுவதும் எழுதி வந்த  இந்தக் காவியத்தை 1950ம் ஆண்டு தனது இறுதி நாட்களில் முடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அன்னைக்கு அரவிந்தரின் இந்த ஆர்வம் கவலையை ஏற்படுத்தியது.

‘எல்லையில்லா பெருவெளியில் துடுப்பு இல்லா தோணியிலே என் பயணத்தைத் தொடங்கிவிட்டேன்’ என்ற முன்னுரையோடு ஆரம்பமாகும் சாவித்திரி காவியத்தை ‘இவ்வுலக வாழ்க்கை தெய்வீகமான வாழ்க்கையாகும்’ என்ற வரியுடன் நிறைவு செய்தார்.

நாற்பது ஆண்டு கால தவம் இந்தக் காவியம். 23,813 வரிகளைக் கொண்ட மகா காவியம். யோகத்தை மேற்கொள்ள விரும்புபவர்களின் தவ முயற்சியை யோக சித்தியாக மாற்ற உதவும் கருவி இக்காவியம். இந்த சாவித்திரியை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிது புதிதாக அர்த்தம் தோன்றும்.

மந்திர சக்தி மிக்க  இதைப் படிப்பதே யோகம்தான் என்று சொல்கிறார் அன்னை. ஒரு பணி முடிந்தது. அடுத்து ஒரே ஒரு வேலைதான் மீதி. அதையும் நிறைவு செய்துவிட வேண்டும் என அரவிந்தர் நினைத்தபோது அன்னை கவலையானார். ஏன் தெரியுமா?
அன்னையின் அருளால் தொழில் வளர்ந்தது!

அன்னையின் அற்புதம்

‘‘ ‘வா ராஜா வா’, ‘திருவளர்ச்செல்வன்’ என சினிவாவில் திருப்தியாக நடித்துக் கொண்டிருந்த என் வாழ்வில் திடீரென சிக்கல்கள் உருவாயின. வாய்ப்புகள் குறைந்து வருமானம் இல்லாமல் வருத்தத்தில் ஆழ்ந்திருந்த காலகட்டம். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்திற்குச் சென்றேன். அன்னையிடம் கண்ணீர் விட்டு என் வருத்தத்தை சமர்ப்பித்தேன். அன்று இரவே அன்னை என் கனவில் தோன்றி, ‘நான் இருக்கிறேன்.

உனக்கு ஒரு குறையும் வராது’ என்றார். வாய்ப்புகள் இல்லாததால் சின்னதாக ஒரு ஜெராக்ஸ் கடை வைத்திருந்தோம். அது இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது அன்னையின் அருளால்தான்.

அதன்பின் ‘ஈரம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றேன். இதுவும் அன்னை கருணை’’ என நெகிழும் மாஸ்டர் பிரபாகரன், சென்னையில் வசிக்கிறார். ‘‘முடிந்தபோதெல்லாம் பாண்டிச்சேரிக்கோ அல்லது மாம்பலம் அன்னை ஆஸ்ரமத்துக்கோ சென்று சேவை செய்துதான் அன்னைக்கு நன்றி சொல்கிறேன்!’’ எனும்  இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னையின் தீவிர பக்தர்.

வரம் தரும் காய்

பணியிட மாற்றம் தரும் கடுக்காய்

செய்யும் வேலையிலிருந்து, பணிபுரியும் இடத்திலிருந்து மாறுதல் வேண்டும் என விரும்புகிறவர்கள் அரவிந்த அன்னைக்கு கடுக்காய்களை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, விரும்பிய வேலை மாற்றம், இட மாற்றம் விரைவில் கிடைக்கும்.

(பூ மலரும்)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்
ஓவியம்:மணியம் செல்வன்