பேசாப் பொருளை பேச வைத்த பூப்புனித நீராட்டு விழா!



மெல்லிய வெட்கம் மின்ன கன்னத்தில் கை வைத்து போஸ் கொடுக்கும் ஃபிளக்ஸ் போர்டுகள் இல்லை. மாமன், மச்சான் சீர் செனத்திகள், வம்பு தும்புகள் இல்லை. ‘வயதுக்கு வந்துள்ள சிறுமி எல்லா வளமும் பெற்று வாழ’ வாழ்த்தும் அரசியல் பிரமுகர்களின் கூச்சல்கள் இல்லை. மாலையிட்டு, முகத்தில் சந்தனம் தோய்த்து, மேடையில் அமர வைத்து காட்சிப்பொருள் ஆக்கும் சம்பிரதாயங்கள் இல்லை. அந்தப் பூப்புனித நீராட்டு விழா மிகவும் வித்தியாசமாக நடந்தது.

வயதுக்கு வந்த சிறுமி பிற பிள்ளைகளோடு பேசி, சிரித்து, டான்ஸ் ஆடி விளையாடிக் கொண்டிருந்தாள். மேடையில் நிறைந்திருந்த மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் பெண் பூப்பெய்தும் இயற்கை நிகழ்வு பற்றியும், அது சார்ந்த மூடநம்பிக்கைகள் பற்றியும், பூப்பெய்தும் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றியும் பேசினார்கள்.

பூப்பெய்தல் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? அச்சமயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி உளவியலாளர்கள் அறிவுரை சொன்னார்கள். அரங்கில் கூடியிருந்தவர்கள் சந்தேகங்களைக் குவிக்க, அத்தனை கேள்விகளுக்கும் மருத்துவர்கள் பொறுமையாக பதில் அளித்தார்கள். அறுசுவை விருந்தோடு விழா நிறைவுற்றது.

இப்படியொரு வித்தியாசமான பூப்புனித நீராட்டு விழாவை நடத்தியது புவனேஸ்வரி- மோகன்ராஜ் தம்பதி. பெண்களை வதைத்து, காட்சிப் பொருளாக்கும் சம்பிரதாயத்துக்கு மாற்றாக, தங்கள் மகளின் பூப்புனித நீராட்டு நிகழ்வை மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தி நல்ல முன்னுதாரணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

மோகன்ராஜ் ஒரு தனியார் நிறுவன அதிகாரி. புவனேஸ்வரி சாஃப்ட்வேர் எஞ்சினியர். இரண்டு சகோதரிகளோடு பிறந்தவர். அடித்தட்டுப் பெண்களின் இயல்பான உடலியல் சிக்கல்களையும், அழுத்தங்களையும் எதிர்கொண்டு வளர்ந்தவர். ‘‘அப்பா வெளிநாட்டுல லேபரா இருந்தார். அம்மாவோட சேத்து குடும்பத்தில மொத்தம் நாலு பெண்கள்.

சம்பிரதாயங்கள்ல ஊறின குடும்பம். குடும்பத்துல முதல் பட்டதாரிப் பெண் நான்தான். பூப்பெய்தும் காலத்தில இருக்கிற ஒடுக்குமுறைகள், சங்கடங்கள், மாதவிடாய் நேரத்துல ஏற்படும் சிரமங்கள் எல்லாமே விசித்திரமான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்துச்சு. சடங்கு, சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் எல்லாமே பெண்களோட பலவீனங்களை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கு. அவஸ்தையும், அவமானமுமாவே பெண்கள் வாழ்க்கையைக் கடந்து செல்ல வேண்டியிருக்கு.

இயல்பா உடம்புல நடக்கக்கூடிய விஷயங்களைப் பூசி மெழுகி, புனிதப் பட்டம் சூட்டி, காட்சிப்பொருளா நிறுத்துற சடங்குகள் மேல எனக்கு எப்போதுமே கேள்வி உண்டு. அதுவும் சென்னை மாதிரி நகரங்கள்ல வயதுக்கு வந்த பெண்களுக்கு கடவுள் மாதிரி வேஷம் போட்டு ஊரே வேடிக்கை பார்க்குற மாதிரி நடத்துவாங்க.

 அருவருப்பான கேலி, கிண்டல்னு அந்தப் பெண் அதுக்குப் பிறகு வெளியே வரவே தர்மசங்கடப்படுற நிலை வந்திடும். நிறைய பெண்கள் பள்ளிப் படிப்பை இடையில் விடுவதற்கே இது காரணமாயிடும். எனக்கும், என்னைச் சுற்றியிருக்கிற பெண்களுக்கும் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் என் குழந்தைக்கு ஏற்படக்கூடாதுங்கிற எண்ணம் எனக்கு உண்டு.

பூப்பெய்துற சமயத்துல பெண் குழந்தைகள் நிறைய குழப்பமடையறாங்க. இது உடல் சார்ந்த ஒரு இயற்கை நிகழ்வுன்னு நாம சொல்லிக் கொடுக்கிறதில்லை. பெண் பூப்பெய்தும்போது ஒப்பாரி வச்சு சில தாய்கள் அழக்கூட செய்வாங்க. இதெல்லாம், ‘பெண் ஒரு சுமை’ன்னு சொல்லாம சொல்ற நம் சமூக அழுக்கு நம்பிக்கைகளின் அடையாளங்கள்.

ஒரு காலத்தில பெண்கள் திருமணத்துக்காகவே உருவாக்கப்பட்டாங்க. அதனால பூப்பெய்திய உடனே ‘எங்க வீட்டுல ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராகிட்டாள்’னு உறவுகளுக்கு அறிவிக்க வேண்டிய தேவை இருந்துச்சு. இன்னைக்கு அந்தச் சூழல் மாறிடுச்சு.

அப்படியொரு விழாவுக்கு எந்தத் தேவையும் இல்லை. ஆனாலும் ஃபிளக்ஸ் அடிச்சு, அரசியல் பிரமுகர்களை அழைச்சு விழா நடத்துறாங்க. இந்த நிலை மாறணும். அதுக்கான ஒரு சின்ன விழிப்புணர்வா என் மகளோட நிகழ்ச்சி அமையணும் என்கிற எண்ணத்துலதான் இதை நடத்தினோம்...’’ என்கிறார் புவனேஸ்வரி.

‘‘முதல்ல இதை ஒரு விழாவா கொண்டாடணும் என்கிற எண்ணமே எங்களுக்கு இல்லை. ஆனா எங்க குடும்பத்தில முதல் பேத்தி எங்க பொண்ணுதான்.

அதனால எங்க அப்பாவும், புவனா அப்பாவும் கண்டிப்பா ஒரு விழா நடத்தணும்னு சொன்னாங்க. ஆனா ஒரு கண்காட்சி மாதிரி நிகழ்ச்சி நடத்துறதுல எங்களுக்கு விருப்பமில்லை. வித்தியாசமா ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்த பிறகு, எல்லாத் திட்டத்தையும் புவனாதான் உருவாக்கினா. எனக்கும் ஓகேதான். ஆனா உறவுக்காரங்க ஒத்துக்குவாங்களான்னு ஒரு தயக்கம் இருந்துச்சு.

‘ஒரு நல்ல காரியம்... எது நடந்தாலும் எதிர்கொள்வோம்’ங்கிற தைரியத்துல ஆரம்பிச்சோம். எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் நாகராஜ் புஷ்பராஜ்கிட்ட பேசினோம். அவர் மருத்துவர்கள்கிட்ட பேசினார். எல்லாரும் ரொம்ப ஈடுபாட்டோட ஒத்துக்கிட்டாங்க. ‘பெண்மையைப் போற்ற வாருங்கள்’னு போட்டு அழைப்பிதழ் அடிச்சோம்.

என் மகளோட பள்ளித்தோழிகளின் குடும்பங்கள், எங்கள் நண்பர்கள், உறவுக்காரங்களை எல்லாம் அழைச்சோம். உறவுக்காரர்கள் ‘என்ன இதெல்லாம்’னு கேட்டாங்க. ‘நம்ம மரபுன்னு ஒண்ணு இருக்குல்ல... அதை மீறலாமா’ன்னு வருத்தப்பட்டாங்க. அவங்களுக்கு எங்க நோக்கத்தைப் புரிய வச்சேன்.

சின்ன உறுத்தலோடதான் நிகழ்ச்சிக்கு வந்தாங்க. ஆனா, அங்க மருத்துவர்கள் பேசியதையெல்லாம் கேட்டபிறகு, உற்சாகமாயிட்டாங்க. எல்லாரும் சந்தேகங்கள் கேட்கத் தொடங்கிட்டாங்க. நிகழ்ச்சி முடிவுல எல்லாரும் முக மலர்வோட கிளம்பினாங்க. ஒரு நல்ல விஷயம் செய்திருக்கோம்ங்கிற திருப்தி எங்களுக்கு இருக்கு...’’ என்கிறார் மோகன்ராஜ்.

பூப்பெய்தல், மாதவிடாய் தொடர்பாக எல்லாப் பெண்களுக்குமே விடை தெரியாத கேள்விகள் உண்டு. ஆனால் ‘அந்தக் கேள்விகள் அசுத்தமானவை, பேசாப் பொருள்’ என்று நம்புகிறது நம் சமூகம்.

அந்த நம்பிக்கையைத் தகர்த்து, அப்பேசாப் பொருளைப் பேசவைத்ததற்காகவே பாராட்டலாம் இந்த தம்பதியை!பூப்பெய்துற சமயத்துல பெண் குழந்தைகள்  நிறைய குழப்பமடையறாங்க. இது உடல் சார்ந்த ஒரு இயற்கை நிகழ்வுன்னு நாம  சொல்லிக் கொடுக்கிறதில்லை!

- வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்
ஓவியம்: the Yellow Festival