
காதலைப் பற்றி ‘கதைகள்’, ‘பேட்டிகள்’, ‘கட்டுரைகள்’, ‘துணுக்குகள்’, ‘வி.ஐ.பி வார்த்தைகள்’ எனத் தொகுத்து தோரணம் கட்டி காதலர் தினத்தை பெரும் பண்டிகையாக்கி விட்டீரே... நன்றி ஐயா!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
‘எங்கேயோ பார்த்த முகம்’ பகுதி அருமை. நகைச்சுவைக் காட்சிகளில் அடிக்கடி பார்த்து அறிந்த ஜார்ஜ் மரியானின் நிஜ வாழ்க்கை நெகிழ வைத்தது!
- சிவமைந்தன், சென்னை-78.
உண்மை ஜோடிகளையும், காதலிப்பதாய் கிசுகிசு இருக்கும் பாதி உண்மை ஜோடிகளையும் வைத்து ஒரு காலண்டர்... அடடா! ‘எப்படிண்ணே உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?’ என்று தான் கேட்கத் தோன்றியது ஸ்டில்களைப் பார்த்ததும்.
- குமார், சென்னை-41.
‘இந்திய காதலர் கட்சி’ வாழ்க வாழ்க! காதலிக்க தனியிடம் ஒதுக்கீடு, இலவச சிம் கார்டு என கலக்கல் திட்டங்களை கட்சி நிர்வாகி குமார் சொன்னது வரிக்கு வரி கலகல!
- டி.கே.செந்தில்ராஜன், கடலூர்.
இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான உரிமைகளும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் வரையில், இந்தியாவிலுள்ள அகதி களைத் திரும்ப அனுப்பக் கூடாது. அதற்கான அவசரமோ, அவசியமோ இப்போது எழவில்லையே!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
‘டாடி எனக்கு ஒரு டவுட்டு’ புகழ் சரவணன் - செந்திலிடம் ‘காதல் டவுட்களை’ துருவித் துருவிக் கேட்டு, எங்களது ‘டவுட்’களை க்ளியர் செய்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்!
- எஸ்.மேகலாகுமார், சேலம்.
‘சிகரெட், மது போல... காதலும் போதைதான்’ கட்டுரை சுவை. ‘காதல் அடிமைகள்’ யாரெல்லாம் என்றும், 12 நிலை சிகிச்சைகளையும் கொடுத்து, ‘லவ்’ அடிமையாகாதே என எச்சரித்ததற்கு நன்றி!
- இரா.ரகுபதி கிருஷ்ணன், புதுச்சேரி.
‘காதல் என்பது...’ குறித்து பிரபலங்கள் தெரிவித்துள்ள கருத்துகள் காதலின் மென்மையையும் மகத்துவத்தையும் நயம்பட உணர்த்தின. மொத்தத்தில் காதலுக்குப் பெருமை சேர்த்துவிட்டீர்கள்!
- எஸ்.எம்.பாலசுப்ரமணியன், தேனி.
‘கடவுளும், காதலும் மனிதன் தன் வசதிக்காகப் படைத்த கற்பனைச் சொற்கள்’, ‘கற்பு - இல்லாததைப் பேணிப் புகழ்வதுதான் உலக மரபோ?’ - இந்த வயதில் இப்படியெல்லாம் எழுத ஆனாலும் சாருஹாசன் ஐயாவுக்கு தனி தில் வேணும்!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.
காதல் ஸ்பெஷலாக வே.பூபதி படைத்திருந்த ‘கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின்’ லிஸ்ட் எக்ஸலன்ட் சார்! வாய் விட்டுச் சிரிக்க வைத்த படைப்பு!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.