அழியாத கோலங்கள்



இன்று பலர் பிரபல சினிமா நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்குகிறார்கள் அல்லவா? அப்படி ஏங்கியவன்தான் நானும். இப்படித்தான் இளமையில் என் தந்தையாரும் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

வக்கீல்களில் பிரபலமாக இருந்தாலும், ஒரு சிறிய ஊரில் தொழில் செய்த என் தந்தைக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருமே நண்பர்கள். அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அரசியலில் செய்ய முடியாததை செய்தவர். சினிமாவில் இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டவர்.

அது 1953ம் வருடம் என்று நினைக்கிறேன். அன்று எங்கள் வீட்டில்தான் மாடியில் சிட் அவுட்டுடன் கூடிய மாஸ்டர் பெட் ரூம் உண்டு. அட்டாச்டு பாத்ரூம், ஃபிளஷ் அவுட் டாய்லெட், ஹாட் ஷவர் என எல்லாம் அதில் இருக்கும். பரமக்குடியில் ஒரு நாடகம் நடத்த வந்த என்.எஸ்.கே அவர்கள் எங்கள் வீட்டு மாடியில் தங்கியிருந்தார்.

நான் வக்கீல் உரிமம் பெற்ற பின்னும் கூட முதல்நாள் நீதிமன்றத்தில் உளறிக் கொட்டி விட்டு வேறு ஏதாவது வேலைக்கு ஓடிவிடலாமா என்று குழம்பியவன்தான். ஆனாலும் வக்கீல் வேலைக்கு வந்ததுமே எங்களுக்கு ஒரு திமிர் வந்துவிடும்! நான் அந்தக் காலத்து வக்கீல்களைப் பற்றிச் சொல்கிறேன்.

அன்று நான் தொழிலுக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. சமையல்கார கோவிந்தன் என்னை அப்பா மேலே கூப்பிடுகிறார் என்று ஓடிவந்து கூப்பிட்டான். மாடியில் என் தாயாரும் டி.ஏ.மதுரமும் ஒரு பக்கமும், என்.எஸ்.கிருஷ்ணனும் என் தந்தையும் மறுபக்கமும் சோபாக்களில் உட்கார்ந்திருந்தார்கள். தந்தைக்கு முன்னால் மகன் உட்காராத காலம் அது.

நான் வக்கீலாக வந்த பிறகு, அப்பாவின் கல்லூரித் தோழர் - ஒரு ஆர்மி மேஜர் - ஆபீஸில் என் தந்தையைச் சந்திக்க வந்தவர் என்னிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது. ''எங்கள் காலத்தில் நாங்கள் தந்தை இருக்குமிடத்தில் எதிரில் உட்காரும் பழக்கமில்லை!’’

நான் சொன்னேன்...‘‘இந்தக் காலத்திலும் நீங்கள் அப்படித்தானே? ஒரு ஃபீல்ட் மார்ஷல் முன் சல்யூட் அடித்தபடி நிற்பதுதானே சட்டம். நாங்கள் இங்கே ஆளுக்கொரு சட்டப் புத்தகம் வைத்திருக்கிறோம்!’’ என்று மேஜரிடம் சொல்லி, மேஜர் போன பிறகு அப்பாவிடம் திட்டு வாங்கினேன்.

ஆனால், அப்பா முன் மகன் உட்காராத காலம் என்பது முற்றிலும் உண்மை.நான் மாடிக்குச் சென்று கலைவாணர் தம்பதிகள் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றேன். திரைப்படத்தில் மட்டும் பார்த்திருந்த கலைவாணரையும் டி.ஏ.மதுரம் அவர்களையும் நேரில் பார்த்ததும் உடல் சிலிர்த்து நின்றேன். என் தந்தையார் சிங்கம் போல் கர்ஜித்தது அன்று எனக்கு காதில் விழுந்ததா இல்லையா ஞாபகம் இல்லை!

இன்று நினைக்கிறேன்... ‘‘இவன்தான் என் பிள்ளை! டேய், கலைவாணருக்கு வணக்கம் சொல்றா, முட்டாள்...’’ நான் அந்த மௌனத்தால் - எதையும், யாரையும் மதிக்காத பிள்ளையாக அந்த இடத்தில் பெயர் வாங்கியிருக்க வேண்டும். கலைவாணர் எழுந்து நடந்து வந்து தன் கையை நீட்டி சாருஹாசன் (பி.எஸ்ஸி., எல்.எல்.பி.யின்) கையை எட்டிப் பிடித்துக் குலுக்கி, ‘‘தம்பி, ஒன் பேரு என்னப்பா?’’ என்றார்.

நான் சொன்னேன். அவர் திரும்பப் போய் உட்கார்ந்து, ‘‘வக்கீல் சார்... மரியாதையை சத்தம் போட்டு திட்டி வாங்க முடியாது. இருக்கிறதும் போயிடும்’’ என்றார். அந்தக் காலத்திலேயே கலைவாணர் அப்படியொரு முற்போக்குவாதி.

மறுநாள் பரமக்குடியில் கலைஞரின் ‘பணம்’ என்ற நாடகம், மதுரை ராமநாதபுரம் கோ-ஆபரேட்டிவ் ஹோல்சேல் சொசைட்டி நிதிக்காக போடப்பட்டது. கலைவாணருக்கு சொசைட்டி தலைவர் இரண்டாயிரம் ரூபாய் நாடகம் முடிந்ததும் கொடுக்க வேண்டியிருந்தது.

நாடகம் ஆரம்பம் வரை என் தந்தை இருந்தார். அவர் அவசரமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. கடைசி காட்சிக்கு முன் சொசைட்டி தலைவரிடம் பணம் வாங்கிக் கொடுக்கும்படி என்னிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார். சொசைட்டி தலைவரிடம் நான் இரண்டாயிரம் ரூபாய் பெற்று, மேக்கப் அறையில் கலைவாணரிடம் அதைக் கட்டாகக் கொடுத்து, ‘‘எண்ணிப் பாருங்கய்யா’’ என்றேன்.

அவர் சிரித்துவிட்டு, ‘‘தம்பி, நூற்றுக்கு தொண்ணூத்தைந்து பேர் யோக்கியர்கள். ஐந்து பேர்தான் திருடுவாங்க. யாரையுமே நம்பாதவன் 95% தவறு செய்கிறான். நான் எல்லோரையும் நம்புகிறவன். ஐந்து சதவீதம்தான் தவறு செய்கிறேன்’’ என்றார்.

அதற்குள் சொசைட்டி பிரஸிடென்ட் இடைமறித்து, ‘‘நாடகத்தில் ரொம்ப நஷ்டமய்யா’’ என்றார்.‘‘எவ்வளவு நஷ்டம்?” என்று கேட்டார் கலைவாணர். ‘‘ஆயிரம் ரூபாய் இருக்கும்!’’ என்றது சொசைட்டி தலை.கலைவாணர் கட்டை இரண்டாகப் பிரித்து - இல்லை, கையால் இழுத்து - ஒரு கட்டை சொசைட்டி தலைவரிடம் கொடுத்து, ‘‘புறப்படுங்க... எனக்கு வேலை முக்கியம். கடைசி காட்சியை நடித்து முடிக்க வேண்டும்’’ என்றார்.சொசைட்டி தலைவர் வெளியில் போனதும், ‘‘தம்பி, இவன்தான் நோட்டை எண்ணிப் பார்ப்பான்’’ என்றார்.

ஒரு முறை நான் தயாரிப்பாளனாக ஒரு திரைப்பட பைனான்சியருக்கு கோபத்தில் ஒரு லட்ச ரூபாய் செக் கொடுத்துவிட்டேன். உடனே அவசரமாக சாண்டோ சின்னப்பத் தேவரிடம் லட்ச ரூபாய் கடன் கேட்டு வாங்கி, நேரே பாங்குக்கும் அனுப்பி விட்டேன். பாங்க்கிலிருந்து ஆயிரம் ரூபாய் அதிகமிருப்பதாக திரும்பி வந்தது. நான் ரொக்கம் திருப்பிக் கொடுக்கும்போது சின்னப்பத் தேவர் அவர்கள் சொன்னார்கள்... ‘‘தம்பி... கூட இருந்தால் தவறில்லை.

குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அவசரத்தில் கொடுக்கும்போது கட்டுக்கு ஒரு நோட்டு அதிகம் வைத்து அனுப்புவது வழக்கம்!’’ என்றார்.உங்களில் யாராவது ஒப்புக்கொள்வீர்களா? சினிமாத் தொழிலில் கொடுப்பவர்கள்தான் எண்ணிக் கொடுப்பார்கள். வாங்குபவர்கள் எண்ணுவதில்லை.யாரையுமே நம்பாதவன் 95% தவறு செய்கிறான். நான் எல்லோரையும் நம்புகிறவன். ஐந்து சதவீதம்தான் தவறு செய்கிறேன்!

மொழி என்பது...

அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களில் பைபிளுக்கு முதலிடம். 2454 மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பினாக்கியோ எனும் நீண்ட மூக்கு மனிதன் பற்றிய நாவல்!

மொழி என்பது...

ஜிபிணி க்ஷிளிசீழிமிசிபி ஙிளிளிரி எனும் புத்தகம் ஜஸ்ட் 1400களில் எழுதப்பட்டதுதான். ஆனால், அதில் உள்ள மொழி எதுஎன்பதும், என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதும் இன்றுவரை
எவராலும் புரிந்துகொள்ள முடியாத மர்மமாகவே நீடிக்கிறது.

(நீளும்...)

சாருஹாசன்