மப்ளர் மனிதரின் மறுபிறவி!



சந்தித்த களங்களில் எல்லாம் வெற்றியை மட்டுமே பெற்றுவந்த ஒரு நிகரற்ற வீரனை, அவன் சொந்த மண்ணில் ஒரு கத்துக்குட்டி புரட்டிப் போட்டு வீழ்த்தியது போல முடிவைத் தந்திருக்கிறது டெல்லி தேர்தல் களம். திடீரென கட்சி ஆரம்பித்து, மெஜாரிட்டி இல்லாத முதல்வராகி, 49 நாட்களில் நாற்காலியைத் துறந்து மக்களின் கோபத்துக்கு ஆளாகி, தேசியக் கனவோடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு மோசமான தோல்வியைச் சந்தித்து, ‘அவ்வளவுதான்’ என முடிவுரை எழுதப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளைத் துவம்சம் செய்து டெல்லி முதல்வர் ஆகியிருக்கிறார். அவரது வெற்றியில் எல்லோருக்குமான பாடம் இருக்கிறது.

*எளிமையாக இரு!

ஜனாதிபதி, பிரதமர் தொடங்கி நாட்டின் அத்தனை வி.ஐ.பி.க்களும் டெல்லியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றே டெல்லி மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ‘வி.ஐ.பி. கலாசாரத்தை ஒழிப்பேன்’ என எளிய உடையில் நெருங்கி வந்து சாதாரணமாகச் சொன்னதால், கெஜ்ரிவால் அவர்களோடு நெருங்க முடிந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், தங்களிடம் வரும்போது நெருங்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். தூரத்தில் நிற்பவர்களிடம், தங்களுக்கு பிரச்னை வரும்போது செல்ல முடியாது என்பது அவர்களின் தீர்மானம்.

*முதலில் போ!

ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஆம் ஆத்மி கட்சி பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. மற்றவர்கள் வருவதற்கு முன்பாக இவர்கள் ஒரு ரவுண்டு பிரசாரத்தை முடித்திருந்தார்கள். முந்திக் கொள்பவர்களுக்கு நிறைய சௌகரியங்கள் உண்டு. எல்லா வீடுகளுக்கும் நேரில் போய் பேச முடியும். நல்ல அறிமுகம் கிடைக்கும். எங்கே நாம் பலமாக உணர்கிறோம், எதை பலவீனமாக உணர்கிறோம் என்பதை அறிந்து சரிசெய்வது சாத்தியம்.

*வலைப்பின்னல் செய்!

மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் போன்ற அதிகார மைய வலைப்பின்னல்களால் ஆனது அல்ல ஆம் ஆத்மி கட்சி. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஆஷிஷ் தல்வார் இந்த வெற்றிக்கு ஒரு வலைப்பின்னல் அமைத்துக் கொடுத்தார். 14 மாவட்ட பொறுப்பாளர்கள், அவர்களின் கீழ் 280 வார்டு பொறுப்பாளர்கள், அவர்களின் கீழே பூத் கமிட்டிகளில் 3500 தொண்டர்கள், இதுதவிர துணை அமைப்புகள் என 40 ஆயிரம் பேர் தேர்தல் வேலை பார்த்தார்கள்.

*நல்லதைச் சொல்!

49 நாட்களில் ராஜினாமா செய்ததற்காக கெஜ்ரிவால் மீது மக்கள் கோபம் அடைந்தார்கள். காரணம், அந்த 49 நாள் ஆட்சி அவர்களுக்குப் பிடித்திருந்தது. போலீஸ் கையை நீட்டவில்லை; மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்கவில்லை. எல்லாம் நியாயமாக நடந்தது. அதேபோன்ற ஒரு ஆட்சி கிடைக்கும் என திரும்பத் திரும்ப பிரசாரத்தில் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

*மன்னிப்பு கேள்!

தப்பு செய்தால் தயங்காமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். ஈகோ பார்க்கக் கூடாது. தங்களைத் தேடி வந்து தலைவர்கள் மன்னிப்பு கேட்கிறபோது மக்கள் உருகி விடுகிறார்கள். ஆரம்பகட்ட பிரசாரங்களில் ஆம் ஆத்மியினரை டெல்லியில் நிறைய ஏரியாக்களில் உள்ளே விடவில்லை. கெஜ்ரிவால் உடனே ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் சபை கூட்டங்களை நடத்தி, அங்கு வந்து மன்னிப்பு கேட்டார். இப்படி 110 கூட்டங்களில் அவர் மன்னிப்பு கேட்டதும் நிலைமை மாறியது.

*விரும்புவதைச் சொல்!

டகால்டி வாக்குறுதிகள் இப்போது வேலைக்கு ஆவதில்லை. ‘டெல்லி டயலாக்’ என்ற பெயரில் மக்களிடமே தேவைகளைக் கேட்டார் கெஜ்ரிவால். இலவச தண்ணீர், குறைந்த மின் கட்டணம், இலவச வைஃபி வசதி, பெண்கள் பாதுகாப்புக்கு தனிப் படை போன்ற எல்லா தரப்புக்குமான 70 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை இப்படித்தான் தயாரானது.

*மாற்றம் செய்!

கடந்த தேர்தலில் போட்டியிட்ட பாதிப் பேருக்கு இம்முறை சீட் தரவில்லை கெஜ்ரிவால். சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் ஆறு பேரை நிராகரித்தார். சர்ச்சைகளில் சிக்காத, நல்ல பெயருள்ள பிரபலங்களை மற்ற கட்சிகளிலிருந்து இழுத்தார். இதனால் புது குழப்பங்கள் தவிர்க்கப்பட்டன.

*யாரும் தோற்பார்கள்!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா டீம் மாதிரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெற்றி களை மட்டுமே பெற்றுவந்த பி.ஜே.பி, 300 எம்.பிக்கள் படையோடு பிரசாரத்தில் இறங்கியது. ‘எதிரியைப் பார்த்து மிரள வேண்டாம். நாமும் ஒருமுறை தோற்றிருக்கிறோம். எல்லோரும் தோற்கக் கூடியவர்களே. நாம் நம் கடமையைச் செய்தால் ஜெயிக்கலாம்’ என்ற சிம்பிள் மந்திரத்தையே கெஜ்ரிவால் தன் டீமுக்குச் சொன்னார்.
*சார்பு வேண்டாம்

ஒவ்வொரு தொகுதியிலும் யார் ஓட்டு மெஜாரிட்டி என கணித்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தாலும், ஜாதி, மதம் சார்ந்து அரசியல் செய்யவில்லை கெஜ்ரிவால். திரிலோக்புரியில் மதக் கலவரம் வெடித்தபோது இந்துக்களை நியாயப்படுத்தியோ, முஸ்லிம்களுக்கு ஆதரவாகவோ அவர் பேசவில்லை. அங்கு அமைதிப் பேரணி நடத்தி, ‘அக்கம்பக்க வீடுகளுக்குள் எதற்கு மற்றவர்கள் வந்து பிரிவினை பார்க்க வேண்டும்’ என்ற அவரது நிலைக்கு ஆதரவு குவிந்தது. டெல்லி இமாம் தந்த ஆதரவைக்கூட ‘வேண்டாம்’ என நிராகரித்த துணிச்சல், ஓட்டு வாங்கித் தந்தது.

*அனுதாபம் தேடு!

இந்தத் தேர்தலில் பி.ஜே.பி.யின் பிரசாரம்கூட தன்னை மையப்படுத்தி இருக்குமாறு கெஜ்ரிவால் பார்த்துக் கொண்டார். பி.ஜே.பி.யின் எல்லா தலைவர்களும் அவரை ‘பொய்யர்’, ‘துரோகி’ என மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள். ‘இவ்வளவு பெரிய ஆட்கள் கூடிவந்து, சாதாரண மனிதரோடு மோதுகிறார்களே’ என்பது போல ஒரு அனுதாபம் தன்மீது ஏற்படுமாறு பார்த்துக் கொண்டார் கெஜ்ரிவால்.

அரசியல் ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை!

*முன்பு முதல்வராக இருந்தபோது கலகக்காரராக இருந்தீர்கள். ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தீர்கள். இப்போது மாறுவீர்களா?ஜனநாயகத்தில் நான்கு விஷயங்கள் முக்கியம். விவாதம், மாற்றுக்கருத்து, பேச்சுவார்த்தை, போராட்டம். எந்த சூழலில் எதைப் பயன்படுத்துவது என்பதை சூழலும் நேரமும்தான் முடிவு செய்கிறது. போராட்டம் எப்போதுமே கடைசி வழியாகத்தான் இருக்கிறது. எங்களை அராஜகவாதிகளாக சித்தரிக்க எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். கடந்த ஓராண்டில் நாங்கள் ஒரே ஒரு போராட்டம்தான் நடத்தினோம் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

*உங்கள் வெற்றிக்குக் காரணம், மோடிக்கு எதிரான ஓட்டா?
எங்களுக்கு மக்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். அப்படி மட்டுமே பார்ப்போம். இது மோடி- கெஜ்ரிவால் மோதல் இல்லை. எதையும் செய்யாமல் பேச்சோடு நிறுத்திக் கொண்டவர்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள். அவ்வளவுதான்!

*உங்கள் கட்சியில் யாருக்கும் ஆட்சி அனுபவம் இல்லை. இவர்களை வைத்து எப்படி ஆட்சி நடத்துவீர்கள்?

யாரும் அனுபவத்தோடு பிறப்பதில்லை. அனுபவம் இருப்பவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றால், நாம் காங்கிரஸிடம் ஆட்சியைக் கொடுக்க வேண்டும். அவர்களைவிட அனுபவசாலிகள் யார்? ஆனால் அவர்களின் நோக்கம் நல்லதாக இல்லை. நல்ல நோக்கம் இருக்கும் எங்களுக்குக் காலப்போக்கில் அனுபவம் வந்துவிடும். அரசியல் ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை!

 அகஸ்டஸ்