நஷ்ட ஈடு



‘‘மிஸ்டர் வினோத்! நீங்க முன்னாடி வேலை செய்த கம்பெனியில ரெண்டு லட்சத்தை கையாடல் பண்ணிட்டதா பேக் கிரவுண்ட் வெரிஃபிகேஷன்ல தெரிஞ்சுது. ஸோ... நீங்க போகலாம்!’’ - புதிய கம்பெனியின் ஹெச்.ஆர். இப்படிச் சொன்னதும் அதிர்ந்தான் வினோத்!விரக்தியோடு பழைய கம்பெனியின் எம்.டி. அறைக்குள் ஆவேசமாய் புகுந்தவன், ‘‘சார்... வெரிஃபிகேஷன்ல பொய் சொல்லி என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்க. இதுக்கு நீங்க நஷ்ட ஈடு தரணும்’’ என்றான் மிரட்டலாக!

‘‘இங்க பாருங்க வினோத். இந்த ஃபீல்டுல உங்களை மாதிரி சுறுசுறுப்பான டாப் பர்ஃபார்மர் கிடைக்கிறது கஷ்டம். மறுபடியும் உங்களை இழுக்கத்தான் நான் அப்படிச் சொன்னேன். இன்னிக்கே இங்க நீங்க ஜாயின் பண்ணிக்கலாம். சம்பளத்தை மேல போட்டுத் தர்றேன்!’’வினோத் ஒரு கணம் யோசித்துவிட்டு ‘‘சரி’’ என்றான்.

பத்து நாள் கழித்து, ஆன் சைட் கலெக்ஷன் போயிருந்த வினோத்திடம் இருந்து எம்.டிக்கு போன்.‘‘சார்... எம்.என்.சி கம்பெனியில நல்ல சம்பளம் வாங்க இருந்த என்னை சதி பண்ணி திரும்ப இழுத்தீங்களே... அதுக்கு இந்த சில லட்சங்களை நஷ்ட ஈடா வச்சிக்கிறேன். என்னை எங்கேயும் தேடாதீங்க. குட்பை..!’’ - செல்போனை துண்டித்தான் வினோத்.  

பால்வண்ணன்