“இப்படி உள்ளே வாங்க!’’ - மிக மரியாதையுடன் அர்ச்சகர் ராஜாராம் அந்தப் புதுமண ஜோடிகளை முருகன் சந்நதி பக்கம் அழைத்தார். சுவாமிக்கு கற்பூர ஆராதனை காட்டி, ஒரு மாலையை அந்தப் பையனுக்குச் சூட்டினார் அர்ச்சகர். நான் அந்தத் தம்பதிகளை கவனித்தேன். அவர்கள் வசதியானவர்களாகத் தெரியவில்லை. அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், ஏன்... இந்த ஊர்க்காரர்கள் மாதிரிகூடத் தோன்றவில்லை. அப்புறம் ஏன்?

நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே அந்தத் தம்பதி கற்பூரத்தட்டில் வெறும் ஐந்து ரூபாயைப் போட்டனர். அர்ச்சகர் ராஜாராம் என் நண்பர்தான். இவர்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் மரியாதை? நேராக அவரிடமே கேட்டேன்.‘‘அட, காசுக்கு மட்டும்தான் மரியாதை கொடுக்கணுமா என்ன? மனுஷங்க குணநலன்களையும் மதிக்கணும்பா. இப்ப வந்துட்டுப் போன அந்தத் தம்பதியை நல்லா கவனிச்சீங்களா?
மாப்பிள்ளை நல்ல கலர்... பொண்ணு சுத்தக் கறுப்பு! ஆனாலும் பெருந்தன்மையோட அந்தப் பெண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டிருப்பது வெளிப்படை! அந்த குணநலனுக்காகத்தான், முருகன் சந்நதியில் வாழ்த்தி மாலை போட்டு அனுப்பினேன்!’’மனப்பூர்வமாக அர்ச்சகருக்கு பாராட்டு தெரிவித்து வந்தேன்.
கு.அருணாசலம்