மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

இருள் மறையும், அங்கே பேரொளி இடம் பெறும். துயரம் மறையும், அங்கே ஆனந்தம் வரும். தீய உணர்ச்சிகள் தவிடுபொடியாகும், அங்கே நித்திய அன்பு வரும். திருமதி அலெக்ஸாண்ட்ரா டேவிட் நீல், பௌத்த மதத்தில் தீவிரப் பற்று கொண்டவர். தியான யோகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

மிராவைப் போலவே மனதின் சக்தி குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஒருமுகப்பட்ட மனதின் வலிமை எல்லா சக்தியையும் விட மேலானது என்பதை அறிந்துகொண்டவர். அதற்கு சிறு உதாரணம், திருமதி அலெக்ஸாண்ட்ரா டேவிட் நீலின் திபெத் பயணம்.

திபெத்... உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள பகுதி. பனி படர்ந்த ஏராளமான மலைகளையும் குகைகளையும் கொண்ட ஆன்மிகப் பிரதேசம். ‘உலகின் கூரை’ என்றே திபெத்தை அழைக்கிறார்கள். இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்திருக்கும் திபெத்தின் உயிர் மையம் தியானத்தில்தான் இருக்கிறது.

‘ஆசை அறு, உள்ளம் உணர்’ என்கிற மையத்தை நோக்கியே திபெத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் நகர்கின்றது. அலெக்ஸாண்ட்ரா தன் ஆன்மிக நண்பர்களுடன் திபெத்திற்குப் பயணப்பட்டார். வழிநெடுக பல்வேறு விதமான அனுபவங்கள் வாய்த்தன அவருக்கு.

அன்று அந்திச் சூரியன் மலை முகட்டில் நகர்ந்து கொண்டிருந்தான். பனிமலையில் சூரியனின் கிரணங்கள் பட்டு பொன்னாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.இன்னும் சற்றைக்கெல்லாம் இருள் வந்துவிடும். குளிர் தீவிர மாகும்.

தங்குவதற்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற தவிப்பு இருந்தது அவருக்கு. காரணம் புலி, பனிக்கரடி என சில கொடிய மிருகங்களின் நடமாட்டம் வழி நெடுக இருக்கவே செய்தன.

சிறிது நேர பயணத்துக்குப் பின், ஒரு மலைக் கிராமத்தை அடைந்தார்கள். சின்னச்சின்ன குடில்கள். அதை ஒட்டி ஒரு பெரிய குகை. தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. சுள்ளிகளைப் போட்டுத் தீ மூட்டி அதனருகே வயதானவர்களும் குழந்தைகளும் அமர்ந்திருந்தார்கள். தங்கள் கிராமத்துக்குள் வரும் புதியவர்களை முகம் மலர வரவேற்றார்கள் அவர்கள். வெதுவெதுப்பான தண்ணீர் கொடுத்தார்கள். அலெக்ஸாண்ட்ராவின் சகாக்கள் கை, கால்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டார்கள்.

முகத்தைத் துண்டால் வெந்நீர் தொட்டு துடைத்துக் கொண்டார்கள். ஒரு நடுத்தர வயதுப்பெண் மரக்குவளையில் சுடச்சுட தேநீர் ஊற்றிக் கொடுத்தாள். கசப்பும் இனிப்பும் கலந்த தேநீர், இளம் குளிருக்கு இதமாக இருந்தது.

‘‘இது எங்கள் கிராமத்தின் ஆலயம்’’ என்று சொல்லி ஒரு குகைக் கோயிலுக்குள் அவர்களை அழைத்துச் சென்றார் ஊர்ப் பெரியவர். அந்தக் கோயில் ஒரு குகை. உள்ளே புத்தர் கண் மூடி அமர்ந்திருந்தார். அவரது இதழோரம் புன்னகை வழிந்து கொண்டிருந்தது. சிலையைச் சுற்றி மெழுகுவர்த்திகள் ஒளி சிந்தியபடி இருந்தன. வெளியே குளிர். உள்ளே கதகதவென இருந்தது. அகல் புகை அந்தக் குகை முழுக்க மிக மிதமாய் நிரம்பி இருக்க, மனசு ரம்மியமான ஒரு உணர்வில் கரைந்து கொண்டிருந்தது.

தியானம் இயல்பாக வாய்க்க, அத்தனை பேரும் அமைதியாய் அமர்ந்து தியானம் செய்தார்கள். எவ்வளவு நேரம் கடந்தது என்பதே தெரியாதபோது இரவு வழிபாட்டுக்கான மணியோசை அவர்களை எழுப்பியது. புத்தருக்கு ஊதுவத்திகள் காட்ட, புன்னகையோடு வெளியில் வந்தார்கள். உணவு முடித்து வெளியில் அமர்ந்திருந்த குழுவினரோடு உரையாடல் ஆரம்பமானது. அது பயணம் குறித்த கேள்வியை எழுப்ப, அலெக்ஸாண்ட்ரா பேசத் தொடங்கினார்.

‘‘மனிதன் ஆதிகாலத்தில் இருந்தே பயணத்தின் மீது தீவிர நம்பிக்கையும் ஆவலும் கொண்டிருந்தான். பயணம்தான் உலகத்தை நமக்குக் காட்டும். ஏன்... அதுதான் நம்மையே நமக்குக் காட்டும்.

ஆன்மிகவாதிகள் மலைகளுக்கு ஏன் பயணிக்கிறார்கள் தெரியுமா? உயரே செல்லச் செல்ல மனம் விசாலமாகும். தரையில் இருக்கும்போது மிகப் பெரியதாகத் தெரிந்தவை எல்லாம், நாம் உயரே சென்று பார்க்கும்போது மிகச் சிறியதாகத் தோன்றும். உச்சியை நோக்கிய பௌதீகப் பயணம் நம் உள்ளத்தையும் மேலே உயர்த்தும் என்கிற நம்பிக்கைதான்’’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘‘நீங்கள் சொல்வது உண்மைதான். உலகின் பெரும்பாலான மதங்களின் புனித இடங்களையும் மலை உச்சியில்தான் வைத்திருக்கிறார்கள். ஆகாயத்தில்தான் கடவுள் இருக்கிறார். அவரை நோக்கி நகரும் முயற்சியாகவே இதைக் கருதலாமா?’’- என்று ஒருவர் கேட்டார்.

‘இதை மறுக்கவும் முடியும். அது ஏற்றுக்கொள்பவரின் மனநிலையைப் பொறுத்த விஷயம். அவரவராகவே தீவிரமாகத் தேடிக் கண்டுகொள்ள வேண்டியதுதான். உண்மையில் ஒரு விஷயத்தை பழக்கத்திற்குக் கொண்டுவர நம் முன்னோர்கள் செய்த முயற்சிதான் யாத்திரை.

நான் புனிதமான இடத்தை நோக்கிப் பயணிக்கிறேன் என்கிற உணர்வை ஒரு மனிதனின் மனதில் யாத்திரைகள் மூலம் விதைக்கிறார்கள். மலையின் உச்சிக்குப் போனதும் அவனது மனசு புனிதத்தைக் கண்டுவிட்டது போன்ற உணர்வைப் பெறுகிறது.

அந்தக் குதூகல உணர்ச்சி மனதின் ஆழத்தில் ஒருவித பெருமித உணர்வை ஏற்படுத்தும். அந்த பெருமித உணர்வு தந்த ருசி, இயல்பாகவே புனிதங்களின் மீதான தேடலாக ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் உண்மையில் எது புனிதம் என்கிற கேள்வியை அவனுள் விதைக்கும்.

‘உண்மையில் எது?’ என்கிற கேள்வி, ‘உண்மை எது?’ என்பதாக மாறும்போதுதான் அவனுக்குள் உண்மையான ஆன்மிக வாழ்க்கை ஆரம்பமாகிறது. அந்த விதை... அந்தக் கேள்வி... ஆயிரம் கோடிப் பேரில் ஆறு பேருக்குள் விழலாம்... முளைக்கலாம்... எழலாம். ஒரு நபருக்குள் வளர்ந்து பூக்கலாம். இத்தனை கோடி ஆண்டுகளில் ஒரு புத்தர்தானே நமக்குக் கிடைத்தார்?’’ - சொல்லிவிட்டுச் சிரித்தார், திருமதி அலெக்ஸாண்ட்ரா டேவிட் நீல்.

‘‘என்னதான் சொல்ல வருகிறீர்கள்?’’‘‘ஒன்றும் இல்லை. எல்லாமே சோதனை முயற்சிதான். இந்தப் பயணம் ஏதோ ஒன்றை உனக்குள் விதைக்கும். ஏதோ ஒன்றை எனக்குள் விதைக்கும். எதுவும் விதைக்காமலும் போகக் கூடும். நகர்ந்து கொண்டே இரு என்பதுதான் விஷயம். நான் பார்ப்பது... நீ பார்ப்பது... நாம் பேசுவது எல்லாமே கனவு என்று சொன்னால் நீ நம்புவாயா? அப்படியும் சொல்லிவிட முடியும். அதுவும் உண்மைதான்.

உன்னுள்ளே உன்னை கவனிக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் பார்க்கும் ஏதோ ஒரு இடத்தில் நம்மை அறிந்துகொள்ளும் வாய்ப்பு வாய்க்கும். அந்த இடத்தில் உட்கார்ந்து விட வேண்டியதுதான். ஆலமரமெல்லாம் போதிமரமாகிவிட முடியாது. விஷயம் மரத்திலா? மனத்திலா? சித்தார்த்தனை புத்தனாக்கியது மரமா? மனமா? இரண்டும் இல்லை.

கேள்விகள்.கேள்விகள்தான் சித்தார்த்தனை அரண்மனையை விட்டுத் துரத்தியது. உண்மைக்கு அருகில் அழைத்துச் சென்றது. ஒரு முழு நிலவு நாளில் புத்தனாக்கியது. ஞானம் தேடலின் எல்லை. தேடல் உள்ளவரை வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கும்.

தேடலுக்கு பயணம்தான் சுகம். பயணம்தான் ஊக்கம். பயணம் நமக்குள் கேள்விகளையும் விதைத்து பதில்களையும் தரும்’’ - தீர்க்கமான பார்வையோடு திருமதி அலெக்ஸாண்ட்ரா டேவிட் நீல் சொல்வதை அனைவரும் ஆமோதித்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள்.

சற்றுக்கெல்லாம் நடந்த களைப்பில் உறங்கவும் போனார்கள்.மறுநாள் பயணம் தொடர்ந்தது. அந்த சந்திப் பொழுதில் அலெக்ஸாண்ட்ராவுக்கு தியானம் செய்ய வேண்டும் என்கிற தீவிர எண்ணம் எழுந்தது. வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். கூட வந்தவர்கள் ‘முன்னே நடந்து கொண்டிருக்கிறோம்‘ என்று விரைந்தார்கள்.இவர் கண்மூடி அமர்ந்தார். அப்படியே தியானத்தில் கரைந்தார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தன்னைச் சுற்றி அசௌகரியமான ஒரு உணர்வு எழவே, கண்களைத் திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. நெருப்புத் துண்டுகள் போன்ற இரண்டு கண்களோடு புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. சிறிதும் சலனமில்லாது மனதை ஒருமுகப்படுத்தியவர், ‘புலிக்கு இரையானாலும் பரவாயில்லை’ என சமாதிநிலைக்கு நகர்ந்தார்.புலி அருகே வந்தது. செதுக்கிய சிலை போன்று இருக்கும் அவர் அருகே நின்று நுகர்ந்து பார்த்தது. அந்தச் சூழலின் சமநிலை... தெய்வீகம்...

புலியின் கொடிய தன்மையை மாற்றி இருக்க வேண்டும். மெல்ல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது. அலெக்ஸாண்ட்ராவுக்கு வியப்பு. ஒரு கொடிய மிருகத்தின் தன்மையைக் கூட குவிக்கப்பட்ட மனம், தெய்வீக எண்ண அலை மாற்றிவிடும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். மிராவும் இவரும் இணைந்த ஆன்மிக புள்ளி இதுதான்.

இருவரும் தங்களது அனுபவங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள்.இவர் மிராவைப் பற்றி பின்னாட்களில் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘எளிமையாகப் பழகுவார். உன்னதமான பெரிய பணியைச் செய்து முடித்துவிட்டு அதைக் குறித்து உடனே மறந்துவிடுவார். இருப்பினும் அவருள் குடிகொண்டிருந்த ஆன்மிகப் பேராற்றல் அவரையும் மீறி வெளிப்பட்டு விடுவதை அவரால் தடுக்க முடியாது போகும்’’ என்று கூறியுள்ளார்.

அப்துல் பாஹா. முற்போக்கான பாஹாய் மதத்தின் தலைவர். பரந்த சிந்தனை உடையவர். மிராவிடம் இவருக்கு பெருமதிப்பு இருந்தது. ஒருமுறை இவருக்கு உடல்நலம் குன்றிய நிலையில், தமது சீடர்களிடம் மிராவைப் பேச அழைத்தார். மிராவும் அற்புதமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்.

பின்னாளில் அப்துல் பாஹா தமது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி மிராவிடம் கேட்டுக் கொண்டபோது, ‘‘எனக்கே உங்களது கொள்கையில் சம்மதம் இல்லை என்கிறபோது, உங்கள் இயக்கத்துக்கு நான் எப்படி தலைமை ஏற்க முடியும்’’ என்று சொல்லி மறுத்துவிட்டார். வெவ்வேறு கோட்பாடுகள் இருக்கும் நபர்களோடும் மிரா இணைந்து செயல்பட்டார்; இருவருக்கும் பொதுவான தளத்தில்!

நோபல் பரிசு பெற்றதற்கான பாராட்டு விழாவில் கலந்துகொள்ள ஜப்பானுக்குச் சென்றிருந்தார் ரவீந்திரநாத் தாகூர். இந்தியாவின் மிகச் சிறந்த கவிஞரான தாகூரும் மிராவும் சந்தித்தார்கள். மிராவின் சத்தியம் நிறைந்த வலிமையான பேச்சு தாகூரைக் கவர்ந்தது.

மிராவிடம் தாகூர், ‘‘நீங்கள் இந்தியாவிற்கு வந்து சாந்திநிகேதனின் பொறுப்பை ஏற்க முடியுமா? உங்களின் ஆன்மிக வழிகாட்டுதல் இந்தியாவிற்குத் தேவை’’ என்று கேட்டார்.

‘‘எனக்கு இன்னும் நிறைய ஆன்மிக ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது’’ எனப் பணிவுடன் மறுத்துவிட்டார் மிரா. அப்போது தாகூர், ‘‘உங்களால் உலகம் மேலும் உயரும்’’ என்றார்.இதற்கிடையே மிராவுக்கு இந்தியாவின் அற்புதமான ஆன்மிகப் பொக்கிஷம் ஒன்று கிடைத்தது. அது..?

வரம் தரும் மலர்கள் தவறை சரி செய்யும் அரளிப் பூ!

வாழ்க்கை என்பதே நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடப்பது என்கிற அளவில்தான் இருக்கிறது. நாம் செய்யும் செயலின் சிறிய சிறிய தவறுகள் பெரிய இழப்புகளை ஏற்படுத்திவிடும். தவறே செய்யாமல் இருக்கவும், செய்த தவறுகள் உடனே சரியாகவும் அரளிப் பூ உதவுகிறது. அரளிப் பூக்களை அன்னைக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள செயலில் நேர்த்தி ஏற்படுகிறது. தவறுகள் தவிர்க்கப்படுகின்றன!

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்