கவிதைக்காரர்கள் வீதி




*தொலைந்து போன
நேற்றைத் தேடுவதிலேயே
இன்றும் தொலைந்து போகிறது!
தொலைக்கப்படுவது தெரியாமலேயே
தினமும் பிறந்துகொண்டிருக்கிறது
இன்று!
தொலைவதும் நிற்கவில்லை
தேடுவதையும் நிறுத்தவில்லை
நாளை இருக்கும் நம்பிக்கையில்!

*அவரவர்களுக்கான இடம் வந்ததும்
எழுந்து கொள்கிறார்கள்
எழுந்தவரின் இடத்தில்
இன்னொருவர் அமர்ந்து கொள்கிறார்
பயணம் தொடர்கிறது...
நம்பிக்கையோடு!

*சிங்கம், புலி, கரடியோடு
செல்ல நாய்க்குட்டியும்
உத்திரத்து பல்லிகளும்
இணைந்து கொள்கின்றன
குழந்தைகளின் கதைகளில்!

*மரக்கிளையிலிருந்து வீழ்ந்த சருகு
நம்பிக்கை வீழாது
அசைந்து கொண்டேயிருக்கிறது;
ஏதாவதொரு பறவை
நட்போடு அழைக்கக்கூடும்
கூடாய் அவதரிக்க!

*ஆக்கரில் உடைபட்ட பம்பரத்திற்கு
மாற்று வாங்கவும் வழியில்லாத
பால்ய நாட்களில்
சிந்திய கண்ணீர்த் துளிகள்
விலையுயர்ந்த
குளுமைக் கண்ணாடி வழி
உலகை உற்று நோக்கும்
இதே கண்களிலிருந்தே
ஊற்றெடுத்தன

கௌதமன் கரிசல்குளத்தான்