அசத்தும் சென்னை பையன்
கால்பந்து வீரர்கள் அவ்வப்போது பந்தை உடல் மீது சுற்ற விட்டு ஸ்டைல் காட்டி ஆடுவதைப் பார்த்திருப்போம். ரசித்திருப்போம். ஆனால், அப்படி ஸ்டைல் காட்டுவதே ஒரு விளையாட்டு என்றால் நம்ப முடி கிறதா? ஆம், ‘ஃப்ரீஸ்டைல் ஃபுட்பால்’ என்கிறார்கள் இதை! நமக்குத்தான் புதுசு... உலகம் முழுவதும் இந்த விளையாட்டுக்கு அப்படியொரு மவுசு. இதில், இந்தியாவின் தேசிய சாம்பியனாக வலம் வருகிறார் சென்னைப் பையன் பிரதீப் ரமேஷ்.

‘‘இந்த விளையாட்டை இந்தியாவுல நிறைய பேருக்குத் தெரியாது பாஸ். கால்பந்துல கிரியேட்டிவிட்டி காட்டுற வித்தை இது. கை, கால், தலைன்னு உடல் பாகங்கள் வழியா கால்பந்தை உருட்டி கன்ட்ரோல் பண்ணி ஸ்டைல் பண்ணணும்.
அதைப் பார்த்து வெற்றியைத் தீர்மானிப்பாங்க. அதுல நான் தேசிய சாம்பியன்!’’ - சின்ன ஓபனிங் கார்டு போட்டு ஆரம்பிக்கிறார் பிரதீப்.‘‘எனக்கு சொந்த ஊரே சென்னைதான். பி.காம் முடிச்சிருக்கேன். படிக்கும்போதே கேம்பஸ்ல வேலை கிடைச்சது.
ஆனா, அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த விளையாட்டுதான் மூச்சுன்னு வந்துட்டேன். எனக்கு ஃபுட்பால் ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே விளையாடுறேன். காலேஜ்ல படிக்கும்போது ஒரு ஃபுட்பால் கிளப்ல மிட் ஃபீல்டரா விளையாடினேன்.
அப்போ, ஃபுட்பாலை வச்சு சின்னதா டிரிக்ஸ் பண்ணுவேன். பந்து கீழ விழாம கால்ல ரொம்ப நேரம் தட்டுறது, கையில வச்சு பந்தை சுத்துறதுன்னு இருப்பேன். ஆனா, இதுவே ஒரு ஸ்போர்ட்ஸ் கேம்னு எனக்கு அப்போ தெரியாது. காலேஜ் முடிக்கிற டைம்ல, ஃபுட்பால்ல பெரிசா வர முடியாதுன்னு தோணுச்சு.
அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் நெட்ல இந்த விளையாட்டைப்பத்தி தெரிஞ்சுகிட்டேன். உடனடியா, இதுதான் என்னோட இலக்குன்னு முடிவு பண்ணினேன். ஆனா, வீட்டுல பலத்த எதிர்ப்பு. நான் எதைப்பத்தியும் கவலைப்படாம, ‘இதுல சாதிக்காம வர மாட்டேன்’னு சொல்லிட்டு ப்ராக்டீசுக்கு கிளம்பிட்டேன். இப்போ, ஓரளவு ஜெயிச்சிட்டேன்னு நினைக்கிறேன்’’ - பந்தை கீழே விழாமல் காலிலும் கையிலும் சுழற்றியபடியே பேசுகிறார் பிரதீப். அவர் சொல்வது போல் ஆடுகிறது பந்து.
‘‘இந்த கேம் எப்படின்னா, இரண்டு பேர் மேடையில நிற்கணும். மூணு நிமிஷம் கொடுப்பாங்க. ஒவ்வொருவருக்கும் ஒன்றரை நிமிஷம். முதல் 30 நொடில ஒருத்தர் தன்னோட டிரிக்கை செய்து காட்டணும். அதை மற்றொருவர் முறியடிக்கணும்.
அடுத்தடுத்து 30 நொடின்னு போகும். இதுல எதிராளி செய்வதையும் செய்து, அதுக்கு மேலயும் செய்து காட்டணும். அதுல கிரியேட்டி விட்டி, பால் கன்ட்ரோல், ஸ்டைல் எல்லாத்தையும் பார்ப்பாங்க. அதுல, வித்தியாசம் பண்றவங்களை ஜெயிச்சதா அறிவிப்பாங்க. இதுல, ‘அரவுண்ட் தி வேர்ல்டு’, ‘ஹாப் தி வேர்ல்டு’, ‘அரவுண்ட் தி மூன்’னு விதவிதமா டிரிக்ஸ் இருக்கு. சிலர் புதுசா டிரிக்ஸை கண்டுபிடிச்சு அதையும் அவங்க பேர்ல இணைய தளத்துல வெளியிடுவாங்க. ரொம்ப வித்தியாசமான விளையாட்டு!
இந்தியாவைப் பொறுத்தளவுல சுமார் 200 பேர் இந்த கேம்ல இருக்காங்க. இப்போதான் டில்லியில ஃபெடரேஷன் தொடங்கியிருக்காங்க. இங்கிலாந்துல ‘எஃப் 3’... அதாவது, ஃப்ரீஸ்டைல் ஃபுட்பால் ஃபெடரேஷன்னு ஒரு அமைப்பு ரொம்ப காலமா இருக்கு. அவங்கதான் உலக அளவுல நிறைய போட்டிகளை நடத்துறாங்க. அதுக்கும் முன்னாடியே ‘ரெட்புல்’னு ஒரு தனியார் நிறுவனம் இந்தப் போட்டியை நடத்திட்டு வர்றாங்க.
அதுலதான் நான் தேசிய சாம்பியனாகி, உலக அளவுல போனேன். ‘சக்கர வியூ’ன்னு ஒரு ஸ்டைல் செய்து காட்டி தனித்துவமானேன். ஆனா, உலகளவுல என்னால 25வது நபராதான் வர முடிஞ்சது. இந்த கேம்ல இங்கிலாந்து, கொலம்பியாகாரங்க பின்னி எடுத்துருவாங்க’’ என்கிற பிரதீப், தற்போது இதிலேயே வருமானம் தேடிக்கொள்ளவும் ஆரம்பித்திருக்கிறார்.
‘‘இதுல பெரிசா சம்பாதிக்க முடியாதுதான். ஆனா, 2012ல் சாம்பியனான பிறகு நிறைய ‘ஷோ’ பண்ணச் சொல்லி கேட்கறாங்க. அதன் வழியாதான் சம்பாதிக்கிறேன். இதுலயும் இப்போ போட்டி வந்துருச்சு. அதனால, நாலஞ்சு கால்பந்தை வச்சு வெரைட்டி பண்றேன். வெளிநாடுகள்ல இந்த விளையாட்டு வீரர்கள் ஏதாவது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து டிரிக்ஸ் செய்து காட்டி சம்பாதிப்பாங்க.
ஆனா, நம்மூர்ல பண்ணினா அதை பிச்சை எடுக்குறதா சொல்லிடுவாங்க. இதனால, எனக்கு முதல்ல தயக்கம் இருந்துச்சு. ஆனா, அந்தத் தயக்கத்தையும் ஒரு கட்டத்துல உடைச்சேன். பெசன்ட் நகர் பீச்ல ஒரு தடவை நண்பரோட சேர்ந்து டிரிக்ஸ் பண்ணி காட்டுனேன்.
2 ஆயிரம் ரூபாய் கலெக்ஷனாச்சு. அப்புறம் வெளிநாடு, உள்ளூர்னு நிறைய ஃபங்ஷன் ‘ஷோ’ வந்ததால பண்ண முடியாமப் போச்சு. இப்போ என்னோட இலக்கு இந்த விளையாட்டை பிரபலமாக்கணும். அதுக்காக நானே ஒரு வீடியோ தயாரிச்சுட்டு வர்றேன். எனக்கு www.prsoccerart.comனு ஒரு வெப்சைட் இருக்கு.
அதுல எல்லா வீடியோக்களையும் போட்டுட்டு இருக்கேன். இதோட, உலக சாம்பியனாகணும். அதுதான் என்னோட ரொம்ப நாள் கனவு. அதுக்காக கடுமையா வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்கேன். என்னோட பயிற்சி நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்’’ -தன்னம்பிக்கையோடு முடிக்கிறார் பிரதீப்.
மொழி என்பது...
போப் ஆண்டவர் தற்போது 9 மொழிகளில் ட்வீட் செய்கிறார். அதில் ஆங்கிலத்தை விட ஸ்பானிஷ் மொழியில்தான் அவருக்கு ஃபாலோயர்கள் அதிகம்!
பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்