எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்!



தித்திக்கும் டி-ஷர்ட் தமிழ்

இதையெல்லாம் ‘டி-ஷர்ட்’னு சொல்லணுமா, ‘தேனீர் அங்கி’ன்னு சொல்லணுமான்னு சத்தியமா தெரியலீங்க. ஆனா, முழுக்க முழுக்க தமிழ் உணர்ச்சிகளைத் தாங்கியிருக்கு ஒவ்வொரு டி-ஷர்ட்டும்.

அடையாளமே தெரியாட்டியும் சேகுவேரா, பாப் மார்லின்னு புரட்சியை பொரிச்சி எடுக்குற டிரெண்டுக்கு பதில் இங்கே பெரியார், பாரதிதாசன் சிரிக்கிறார்கள். கூடவே தமிழில் நச் என ஒரு டச் வரி. ‘‘என்ன கம்பெனி பாஸ்?’’ என விசாரித்தால், ‘தைத்திங்கள் ஆயத்த ஆடைகள்’னு பேர் சொல்றாங்க. விடலாமா? புடிங்கப்பா புரொப்ரைட்டரை!

‘‘பத்தாவது ஃபெயில்... பதினாலு வயசுலயே திருப்பூர்ல பனியன் கம்பெனிகள்ல வேர்வை சிந்திய வேலை... ஆனாலும் சின்ன வயசுல இருந்து தமிழ் மேல பிரியம்...’’ என்கிற தேவமணிகண்டன்தான் தைத்திங்கள் ஆயத்த ஆடைகளுக்கு சொந்தக்காரர்.

‘வீழ்வேனென்று நினைத்தாயோ... விட்டுத்தான் கொடுக்கிறேன்’‘மூன்று பங்கு நீர்.... நான்கு புறமும் தமிழன்’‘எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்... எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்’- என இவரின் டி-ஷர்ட் வாக்கியங்களில் உக்கிரமும் உத்வேக மும் உண்டு.

‘‘கும்பகோணம் பக்கம் குடவாசல்ங்க எனக்கு. விவசாயக் குடும்பம். ஒரு அண்ணன், ஒரு அக்கா. படிக்கிற காலத்துலயே வீடு வீடா பேப்பர் போடுறது, அது, இதுன்னு சில்லறை வேலைகள் செய்திட்டு வந்தேன்.

பத்தாவது ஃபெயிலானதும் திருப்பூருக்கு பஸ் ஏறுனதுதான். எட்டு வருஷமா அங்க ஒரு கம்பெனியில உழைச்சேன். வெறும் ஹெல்பரா சேர்ந்து சூப்பர்வைசர், வெளியே கடைகள்ல ஆர்டர் பிடிக்கிறது, இன்சார்ஜ், மேனேஜர், ஜெனரல் மேனேஜர்னு படிப்படியா உயர்ந்தேன்.

 அடுத்த கட்டமா வேற கம்பெனிகள்ல புரமோஷன் ஆபீஸரா சேர்ந்தேன். அப்போ இந்தியா, வெளிநாடுகள்னு போய் கம்பெனியின் பனியன்களுக்காக புரமோஷன் செய்ய வேண்டியிருந்தது. எங்க போனாலும் டி-ஷர்ட்கள்ல ஆங்கில வாசகங்களைத்தான் பெரும்பாலும் பார்க்க முடிஞ்சுது.

இதை மாத்த நினைச்சேன். வேற கம்பெனிகள்ல இருந்துக்கிட்டு  செய்ய முடியாதுன்னுதான் சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சேன்!’’ என்கிற மணிகண்டன், தமிழ்ப் பெயரைச் சொல்லி தரம் குறைந்த ஆடைகளை விற்கக் கூடாது என்பதில் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்.

‘‘துணிகளைப் பொறுத்தவரை வெளிநாடுகள்ல அதிகம் நேர்த்தி பார்ப்பாங்க. இந்தியாவிலிருந்து போற அயிட்டங்களை கண்ணை மூடிக்கிட்டு வாங்க மாட்டாங்க. எல்லாத்துலயும் சுத்தம், சுகாதாரம் பாப்பாங்க. இப்படித் தேர்ந்தெடுத்த துணிகள்தான் இங்கே பிராண்டட்ங்கற பேர்ல விக்குது. அப்படிப்பட்ட பிராண்டட் ஆடை நேர்த்தியை இந்திய இளைஞர்களும் அனுபவிக்கணும்.

பொதுவா நம்ம ஊரு காட்டன் உடைகள்ல பாலியஸ்டர், சீனா காட்டன்னு மலிவான, உடலுக்குத் தீங்கான கலவைகள் இருக்கும். ஆனா, இந்த டி-ஷர்ட்டுகள் நூறு சதவீதம் பருத்தியில செய்யப்பட்டது.

ஏற்றுமதி ஆடைகள்ல இருக்குற எல்லா விதிகளையும் இந்த ஆடைகளில் பார்க்க முடியும். இந்த டி-ஷர்ட்டுகளுக்கான துணியைத் தயாரிக்கிறதுல இருந்து அதை ப்ராசஸ் செய்யறது, சாயம் போடுறது, வெட்டுறது, தைக்கிறது, வாசகங்கள் எழுதுறது, படங்கள் வரையறதுன்னு எல்லாத்தையும் என் மேற்பார்வையிலயே செய்யிறேன்.

சில வாசகங்களை தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்கள்கிட்ட இருந்து எடுக்கறேன். சிலது என் சொந்த வாசகமாவும் இருக்கும். ஆறு வகையான அளவுகள்ல ஆண்களுக்கும், பெண்களுக்கும் இப்ப தயார் செய்யிறோம். வெளிநாடுகள்ல இருந்து இணையதளம் மூலமா வர்ற ஆர்டர்களுக்கு தயாரிச்சிக் கொடுக்கவே இப்போது நேரம் சரியா இருக்கு.

மொத்தமா வாங்கி விக்கிற சிலரும் என்னைத் தேடி வர்றாங்க. நல்ல டி-ஷர்ட்டான்னு நாம பார்த்துப் பார்த்து வாங்கறோம். அதுல சைனீஸ் எழுத்துக்கள் இருந்தா தூக்கி வச்சிடறோமா? ‘பரவாயில்லை’ன்னு போட்டுக்கறோமே. அது மாதிரி தரமான டி-ஷர்ட்டுகளை விரும்புற உலக மக்கள்கிட்ட நம்ம தமிழ் போய்ச் சேரணும். அதான் என் நோக்கம்’’ என்கிறார் மணிகண்டன்.வேகமாக தமிழ் இனி வாழும்!

மொழி என்பது...


உலகில் மொத்தம் 7000 மொழிகளுக்கும் மேல் பேசப்படுகின்றன. அவற்றில் 150 முதல் 200 மொழிகளைத்தான் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பேசுகிறார்கள். கடைசியாக ஒரே ஒரு நபர் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற நிலையில் 46 மொழிகள் உள்ளன.

- டி.ரஞ்சித்