சீர் வரிசை பற்றிக் கவலைப்படாமல், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்கு சம்மதம் சொன்னதும் தரகர் தங்கப்பனுக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது. வசந்தி நல்ல அழகிதான். டிகிரி வரை படித்திருக்கிறாள்.

ஆனால், அவள் தந்தை ராமலிங்கம்தான் ‘பத்து பவுன் போடுவேன், பத்தாயிரம்தான் தருவேன்... ஆனால், நல்ல வசதியான மாப்பிள்ளை வேண்டும்’ எனப் பிடிவாதம் பிடித்தார்.
எவன் சிக்குவான்?இதுவரை வந்த மாப்பிள்ளைகள் எல்லோருக்கும் வசந்தியைப் பிடித்திருந்தது. நகை, பணம் இவ்வளவுதான் என்றதும் நழுவி விட்டார்கள். தங்கப்பன் மனம் தளராமல், அலையாய் அலைந்து, கொண்டு வந்த சம்பந்தம் இது.பேசி முடிக்கும் நேரம் வசந்தியின் தந்தை ராமலிங்கம் சொன்னார்...‘‘எனக்கு உங்களை, உங்க குடும்பத்தை ரொம்பப் புடிச்சிருக்கு மாப்பிள்ளை. நான் என் மகளுக்கு அம்பது பவுன் போட்டு, அஞ்சு லட்சம் ரொக்கம் கொடுத்து கட்டித் தர்றேன்...’’
மாப்பிள்ளை வீட்டார் மகிழ்வுடன் விடை பெற்றார்கள். தரகர் தங்கப்பனுக்குத்தான் தலை சுற்றிக்கொண்டிருந்தது. ராமலிங்கம் அவரிடம் சொன்னார்...‘‘இதை முன்னாடியே சொல்லியிருந்தா எத்தனையோ மாப்பிள்ளைகள் என் மகளை கட்டிக்க முன்வந்திருப்பாங்க. ஆனா, இவரைப் போல பணம், நகைக்கு ஆசைப்படாம என் மகளை மட்டும் விரும்புற மாப்பிள்ளையை கண்டுபிடிச்சிருக்க முடியுமா?’’
சுபாகர்