MISSED CALL கொடுத்தால் வேலை!



ஒரு அமெரிக்கரின் இந்திய முயற்சி

வேலை வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? பத்திரிகையில், இணையதளத்தில் ‘வான்டட்’ விளம்பரம் பார்த்து, ஏஜென்டுகளிடம் பதிவு செய்து, வாய்ப்புள்ள நிறுவனங்களில் அப்ளை செய்து, எக்ஸாம் எழுதி, எம்.எல்.ஏவைப் பிடித்து...

அப்பப்பா! இப்போது நல்ல வேலையைத் தேடிக்கொள்வது தேசிய கட்சிகளில் இணைவதை விட சுலபமாம். ஆம், ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்கிறது ‘பாபாஜாப் டாட் காம்’ என்ற நிறுவனம். அமெரிக்கர் ஒருவரால் 2007ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சீஃப் பிசினஸ் ஆபீஸரான பரணி சிட்லூர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரிடம் பேசினோம்...

‘‘மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் ஷான் பிளாக்ஸ்வெட் என்ற அமெரிக்கர் வேலை செய்துகொண்டிருந்தார். ஒருமுறை அவர் தன் இந்திய அனுபவத்தைக் கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை அந்த நிறுவனத்தின் கூட்டத்தில் வாசித்தார். அந்தக் கட்டுரை, இந்தியாவின் வறுமையைப் போக்குவதற்கான ஒரு வழிமுறையைப் பற்றிச் சொன்னது.

‘இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் என்று ஒரு பிரச்னையே இல்லை’ என அதில் மறுத்திருந்தார் ப்ளாக்ஸ்வெட். ‘வேலையைக் கொடுக்க முன்வருவோரும் வேலை செய்ய விரும்புவோரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத அளவுக்கு பெரிய இடைவெளி இங்கிருக்கிறது.

அதுதான் பிரச்னை’ என எடுத்துரைத்திருந்தார் அவர். இவர்கள் இருவரையும் இணைக்கும்படியான ஒரு இணையதளத்தை அவரே உருவாக்கினார். அதுதான் பாபாஜாப் டாட் காம்’’ என்ற பரணி, தங்கள் தளம் செய்யும் பணியையும் விளக்கினார்...

‘‘இந்தியா முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்கள் முதல் சின்னச் சின்ன கம்பெனிகள் வரை எங்கள் டேட்டா பேஸில் இணைந்திருப்பார்கள். அவர்களுக்கு எப்படிப்பட்ட பணியாளர் வேண்டும், எவ்வளவு நாளைக்கு பணி செய்ய வேண்டும் என்பது போன்ற தகவல்களை அவர்கள் தெரிவித்திருப்பார்கள்.

அதே போல, வேலை தேடுகிறவர்களும் தங்கள் பெயர், படிப்பு, முகவரி, தங்களுக்கு என்னென்ன வேலைகள் தெரியும், அதில் எத்தனை வருடம் அனுபவம் என்பதை எல்லாம் பதிவு செய்யலாம். அவர்களுக்குத் தகுந்த வேலையை நிறுவனங்கள் கேட்கும்போது, அவர்களின் செல் நம்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் போய்விடும்’’ என்றார் அவர்.

இணையப் பரிச்சயம் இல்லாதவர்கள் இதில் எப்படி இணைவார்கள்? அதற்காகத்தான் இவர்கள் ஒரு நம்பரைக் கொடுத்து மிஸ்டு கால் தரச் சொல்கிறார்கள். அந்த மிஸ்டு கால் மூலமே ஒருவரின் பெயரை இந்த லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்களாம்.‘‘இணையப் பரிச்சயம் இல்லாதவர்கள் என்றில்லை...

நேரமில்லாதவர்கள் கூட இந்த சேவையைப் பயன்படுத்துகிறார்கள். மிஸ்டு கால் கொடுத்த எண்ணில் இருந்து உடனே ஒரு கால் வரும். அதில் தானியங்கி குரல் கேட்கும் தகவல்களை உள்ளிட்டால் போதும். அந்த நபரின் ப்ரொஃபைல் தானாக எங்கள் டேட்டாபேஸில் இணைந்து விடும்’’ என்றவரிடம், ‘இந்தியாவில் இப்போது எந்தத் துறையில் அதிக வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது’ என விசாரித்தோம்.

‘‘இங்கே இன்ஃபார்மல் செக்டார் என்று சொல்லப்படும் முறைசாராத தொழில்களில்தான் வாய்ப்புகள் நிறைய. உதாரணமாக பி.பீ.ஓ., ரிசப்ஷன், சேல்ஸ், டிரைவர், ஆபீஸ் கிளார்க், டெலிவரி பாய்ஸ், ஃபைனான்ஸ் அக்கவுன்ட்ஸ், ஆபீஸ் மேனேஜ்மென்ட் வேலைகளைச் சொல்லலாம். இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே 30 லட்சம் பேர் இந்த வேலைகளுக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இந்த வேலைகளை வழங்கத் தயாராக உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 1000. இந்த முறைசாரா பணிகளுக்கு நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளம் சராசரியாக ரூபாய் 9000 ஆயிரம் முதல் 15000 ரூபாய் வரை இருக்கும்.

இனிமேல், ‘பல பேர் வேலைக்குக் கூப்பிடுகிறார்கள்... அங்கெல்லாம் போக எனக்கு விருப்பம் இல்லை’ என்று ஒருவர் சொல்லலாமே தவிர, வேலையே கிடைக்கவில்லை என இந்தியாவில் யாரும் சொல்ல முடியாது!’’ என்றார் பரணி சிட்லூர் உறுதியாக!

மொழி என்பது...


ESPERANTO எனும் மொழி யாருக்கும் தாய்மொழி அல்ல. 19ம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மொழியை தற்போது 5 முதல் 20 லட்சம் மக்கள் பேசுகிறார்கள். இரண்டு சினிமாக்கள் இந்த மொழியில் வெளிவந்துள்ளன. மனிதர்கள் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கிய மொழிகளில் மிக வெற்றிகரமான மொழி இதுதான்!

டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்